WED

Sri Ranganayaki - Namperumal

சரணாகதி தீபம்

1.         சரணாகதியின் ஞான அநுஷ்டானங்கள் எல்லாம் அடியேனுக்கு புத்தியில் பிரகாசிக்கும் பொருட்டு அடியேனுடைய குருநாதர் திருவடிகளை தஞ்சமாக சரணமடைகிறேன்.

2.         சரணாகதியின் ஞான அநுஷ்டானங்களை விளக்கி வசனபூஷணம் அருளிச்செய்த பிள்ளைலோகாச்சாரியருக்கு அடியேனுடைய நமஸ்காரம் உரித்தாகட்டும்.

3.         ஆச்சார்யனை அடைந்த சேதனன் ஒருவன், திருவடிப்பேற்றின் பொருட்டு எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனிடம் சரணடையும்போது, எம்பிராட்டி ஸ்ரீதேவியின் புருஷகாரத்தை முன்னிட்டுக்கொண்டு எம்பெருமான் உபாயமாகிறான்.

4.         ஆச்சார்யனாகிறான், திருவடி ஞானம் பெற்றவன். ஏனெனில், பிராட்டியின் அங்கீகாரமும் பெருமானின் அங்கீகாரமும் பெறாத ஒருவனுக்கு ஆச்சார்யத்வம் ஸித்திக்காது.

5.         புருஷகாரமாவது, பரிந்துரை. பிராட்டியின் பரிந்துரையை முன்னிட்டுக்கொண்டே பெருமான் சேதனனை அங்கீகரிப்பது.

6.         ஆச்சார்ய ஸத்சங்கத்தால் எம்பெருமானிடம் பக்தி உண்டாகி, பாகவத அபச்சாரம் தவிர்ந்து நிற்கும்போது, சேதனன் பிராட்டியின் அங்கீகாரத்தைப் பெறுகிறான்.

7.         பிராட்டியின் அங்கீகாரமாவது, சேதனன் திருவடி யோகம் பெறுவது.

8.         தன்னால் அங்கீகரிக்கப்பட்ட சேதனன் திருவடிப்பேறு பெறும்பொருட்டு, பிராட்டி பெருமானிடம் பரிந்துரைக்கிறாள்.

9.         பரிந்துரையாவது, சேதனன் செய்யும் கர்மங்களினால் விளையும் பாவங்களை அவன் ஆன்மாவில் ஒட்டவிடாதபடி தன் அருளால் தடுத்து நிற்பது.

10.       இதனால், சேதனன் செய்யும் பாவங்களால் சீறி இருக்கும் எம்பெருமான், திருவுள்ளம் குளிர்ந்து, இச்சேதனனை அங்கீகரித்தருள்வான்.

11.       பெருமானின் அங்கீகாரமாவது, சேதனன் திருவடி ஞானம் பெறுவது.

12.       திருவடி ஞானம் பெறுவதாவது, திருவடிகளே உபாயமாவது.

13.       திருவடிகளே உபாயமானபின் பேற்றுக்குச் சொல்லவா வேணும்?

14.       ‘பிரபத்திக்கு தேச நியமமும் கால நியமமும் பிரகார நியமமும் அதிகாரி நியமமும் பல நியமமும் இல்லை.’

15.       பிரபத்தி என்றது, சரணாகதியை.

16.       தேச நியமம் இல்லை - அர்ஜுனன் போர்க்களத்திலே கண்ணனிடம் சரணடைந்தான். எனவே, இன்ன இடத்தில்தான் பிரபத்தி செய்யலாம் என்ற நியமம் இல்லையானது.

17.       கால நியமம் இல்லை - விபீஷணன் ஸ்ரீராமனிடத்தில் அகாலத்திலே சரணடைந்தான். எனவே, இன்ன காலத்தில்தான் பிரபத்தி செய்யலாம் என்ற நியமம் இல்லையானது.

18.       பிரகார நியமம் இல்லை - திரௌபதி மாதவிடாயில் இருக்க, சபை நடுவே அவளை இழுத்துவந்து துச்சாஸநன் வஸ்திராபஹரணம் செய்ய, திரௌபதி குளித்துவிட்டு வந்தா, ‘கோவிந்தா! தாமரைக்கண்ணா! சரணடைந்த என்னைக் காப்பாற்று’ என்று கூக்குரலிட்டாள்? எனவே, இன்ன பிரகாரத்தில்தான் பிரபத்தி செய்யலாம் என்ற நியமம் இல்லையானது.

19.       அதிகாரி நியமம் இல்லை - விபீஷணனும் திரௌபதியும் அர்ஜுனனும் கஜேந்திரனும் காகமும் சரணமடைவதால், இன்னார்தான் பிரபத்தி செய்யலாம் என்ற நியமம் இல்லையானது.

20.       பல நியமம் இல்லை - திரௌபதிக்குப் பலம் வஸ்திரம்; கஜேந்திரனுக்குப் பலம் முக்தி; காகத்துக்குப் பலம் பிராணன். எனவே, இன்ன பயனை விரும்பித்தான் பிரபத்தி செய்யலாம் என்ற நியமம் இல்லையானது.

21.       ‘விஷய நியமமே உள்ளது.’

22.       யாரிடம் சரணமடைகிறோம் என்ற விஷய நியமமே உள்ளது.

23.       ‘விஷய நியமமாவது, குணபூர்த்தியுள்ள இடமே விஷயமாகை; பூர்த்தியுள்ளதும் அர்ச்சாவதாரத்திலே.’

24.       ஸ்ரீரங்கம், திருமலை, காஞ்சி முதலான திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ள அர்ச்சா ரூபமான எம்பெருமானிடத்தில்தான் குணபூர்த்தியுள்ளது.

25.       ‘ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே.’

26.       ‘பிரபத்திக்கு அபேக்ஷிதங்களான ஸௌலப்யாதிகள், இருட்டறையிலே விளக்குப்போலே பிரகாசிப்பது இங்கே.’

27.       பிரபத்தி பலிப்பதற்குத் தேவைப்படும் எம்பெருமானுடைய குணங்கள், முக்தர்கள் வாழும் வைகுண்டத்தை விடவும் ஸம்ஸாரிகள் நடமாடும் இங்கேதான் பிரகாசிக்கும்.

28.       அவையாவன - வாத்ஸல்யம், ஸ்வாமித்துவம், ஸௌசீல்யம், ஸௌலப்யம், ஞானம், சக்தி ஆகியன.

29.       வாத்ஸல்யமாவது - தன் குளம்படிபட்ட புல்லையே கவ்வாத பசுவானது, தன் கன்றின் வழும்பை விரும்பி உண்ணும். குற்றங் கண்டு சீறும் இயல்புடைய எம்பெருமான், சரணாகதி செய்யும் சேதனனுடைய குற்றங்களையே அவனுக்கு அருள்பாலிக்க ஈடான நற்றங்களாகக் கொள்வது.

30.       இதனால், சேதனன் தன் பாவங்களின் கனம் கண்டு அஞ்ச வேண்டா.

31.       ஸ்வாமித்துவமாவது - எம்பெருமான், சேதனர்கள் அனைவருக்கும் ஒரே தலைவனாய் இருக்கும் மாண்பு.

32.       இந்த சம்பந்தம் அடியாக அல்லவா, எம்பெருமான் சேதனர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றித் தருவது?

33.       ஸௌசீல்யமாவது - ஸர்வேசுவரனான தன்னுடைய மேன்மையையும் சேதனர்களான இவர்களுடைய சிறுமையையும் பாராதே, இவர்களுடன் கலந்து பழகுதல் - ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில் போலே.

34.       இதனால் சேதனன் எம்பெருமானுடைய மேன்மை கண்டு அகல வேண்டா.

35.       ஸௌலப்யமாவது - புலன்களால் உணர இயலாத ஸர்வவியாபகமான பரபுருஷ ரூபத்தையே இயல்பாக உடைய எம்பெருமான், சேதனன் தன் கண்களால் கண்டு பற்றலாம்படிக்கு விக்ரஹத்துடன் திவ்ய தேசங்களில் எழுந்தருளி இருத்தல்.

36.       ஞான சக்திகளாவன - பேற்றுக்குத் தடையாக இருக்கும் சேதனனின் பாவங்களை அறிவதற்கும் போக்குவதற்குமான ஞான சக்திகளுடன் கூடி இருத்தல்.

37.       இவை எல்லாம் நமக்கு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருவிக்ரஹத்தில் காணலாம்படி இருக்கும்.

38.       ‘அஞ்சல்’ என்று வைத்த திருக்கையும், கவிழ்த்த திருமுடியும், திருமுகமும் முறுவலும், பத்மாசனத்திலே அழுத்தின திருவடிகளும், திருக்கைகளிலே ஏந்திய திவ்ய ஆயுதங்களுமாய் நிற்கிற நிலையே நமக்குத் தஞ்சம்.

39.       ‘அஞ்சல்’ என்று வைத்த திருக்கை வாத்ஸல்யத்தையும், கவிழ்த்த திருமுடி ஸ்வாமித்துவத்தையும் குறிக்கின்றன.

40.       திருமுகமும் முறுவலும் ஸௌசீல்யத்தையும், பத்மாசனத்திலே அழுத்தின திருவடிகள் ஸௌலப்யத்தையும் குறிக்கின்றன.

41.       திருக்கைகளிலே ஏந்திய திவ்ய ஆயுதங்கள் ஞான சக்திகளைக் குறிக்கின்றன.

42.       ‘இதுதன்னைப் பார்த்தால் பிதாவுக்குப் புத்திரன் எழுத்துவாங்குமாபோலே இருப்பதொன்று.’

43.       தந்தை நம்மைக் காப்பாற்றுகிறான் என்று மகன் அறிந்த அந்த நிலையில் மாத்திரம் அல்லாது, இவ்வாறு அறியாத குழந்தைப் பருவத்திலும்கூட மகனைக் காப்பாற்றுவான் ஒருவன் அல்லவா, தந்தை என்பவன்?

44.       ஆகவே, தற்போது அறிந்த நிலையில் ‘என்னைக் காப்பாற்று’ என்று தந்தையிடம் புத்திரன் சொல்வது, ‘என்னை நீ காப்பாற்றவேண்டும்’ என்று தந்தையிடம் பத்திரம் எழுதி வாங்கினாற்போலே இருவருடைய ஸம்பந்தத்திற்கும் இழுக்காம்.

45.       அதுபோல, பிறவி பிறவியாக இந்த சேதனனை ஸகல விதங்களிலும் காப்பாற்றிக்கொண்டு போரும் எம்பெருமானிடம், தானறிந்த நிலையில் இன்று வந்து பிரபத்தி செய்து, ‘என்னைக் காப்பாற்று’ என்று கேட்பது உடையவன்-உடைமை என்ற இருவருடைய பந்தத்திற்கும் இழுக்காம்.

46.       ‘இதுதனக்கு ஸ்வரூபம் தன்னைப் பொறாதொழிகை.’

47.       ஆகவே, பிரபத்தியை பேற்றுக்கு உபாயம் என்று சொல்ல முடியாது.

48.       ‘பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது.’

49.       பேற்றுக்கு வேண்டுவது, ‘ஆன்மா எம்பெருமானுக்கு உடைமை’ என்ற ஆத்ம ஞானமும், எம்பெருமான் ஆன்மாவை தேஹாதிகளிலிருந்து பிரித்தெடுத்து தன் திருவடிகளில் சேர்த்துக் காப்பாற்றும் போது, அதனைப் புறங்கையால் விலக்காமல் ஒத்துழைத்தலுமே.

50.       ஆத்ம ஞானம் பிறவாதபோது வழக்கம்போல் ஆன்மா தேஹாதிகளுக்கு அடிமையாய்ப் போரும்.

51.       ஏனெனில், ஆன்மா தனித்து நிற்கும் இயல்புடையது அன்று. திருவடிகளைச் சார்ந்து நிற்கலாம்; அல்லது, தேஹாதிகளைச் சார்ந்து நிற்கலாம். இவ்விரண்டைத் தவிர்த்து, வேறு யாதொரு நிலையும் ஆன்மாவுக்கு இருக்க முடியாது.

52.       தான் சுதந்திரமானவன் என்று சேதனன் நினைக்கும்போதுங்கூட, உண்மையில், அவனுடைய ஆன்மா, தேஹாதிகளைச் சார்ந்துதான் நிற்கிறது. தேஹாதிகள் ஜடம் என்பதால், தான் ஒரு ஜடத்தைப்பற்றி நிற்கிறோம் என்று கூட உணர இயலாமல் தன்னைச் சுதந்திரனாக ஆன்மா நினைத்துக்கொள்கிறது.

53.       ஆகவே, திருவடிகளுடன் ஒன்றி நின்று தேஹாதிகளை ஆண்டு, மகிழ்வுடன் வாழ வேண்டிய ஆன்மா, திருவடிகளைப் பிரிந்து தேஹாதிகளுடன் ஒன்றி நின்று, தேஹாதிகளுக்கு அடிமையாகி துக்கத்தில் வீழ்ந்து நாசமாகிறதே என்ற ஆர்த்தியே ஆத்ம ஞானமாகிறது.

54.       அப்ரதிஷேதமாவது, தடுக்காமல் ஒத்துழைத்தல்.

55.       அதாவது, திருவடிகளின் துணையின்றித் தானே பேற்றினைப் பெற்றுவிட முயல்வதைக் கைவிடுவது.

56.       ஆன்மா தேஹாதிகளில் ஆழ்ந்து வீழ்ந்து தன் ஸ்வரூபம் அழிந்து தன்னை தேஹாதிகளாகவே நினைந்து அநாதிகாலமாகப் போருவதால், சேதனன் தன் சுய முயற்சியால் தன் ஆன்மாவை தேஹாதிகளிடமிருந்து பிரித்து திருவடிகளில் சேர்க்க இயலாது.

57.       திருவடி ஞானம் பெற்றபின்புதான் திருவடிப்பேறு கிட்டும்.

58.       ஆகவே, திருவடி ஞானம் இன்னும் பிறக்கவில்லையே என்ற ஆர்த்தியே அப்ரதிஷேதமாகிறது.

59.       ‘ரக்ஷணத்துக்கு அபேக்ஷிதம், ரக்ஷ்யத்வ அநுமதியே.’

60.       எம்பெருமான் சேதனனைக் காப்பாற்றுவதற்குத் தேவையானது, சேதனன் தன்னைக் காப்பாற்ற எம்பெருமானை அநுமதிக்கும் அநுமதி மாத்திரமே.

61.       ‘அவனை ஒழியத் தான் தனக்கு நன்மை தேடுகையாவது, ஸ்தநந்தய பிரஜையை, மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி, காதுகனான ஆட்டு வாணியன் கையிலே காட்டிக்கொடுக்குமா போலே இருப்பதொன்று.’

62.       அவனுடைய ரக்ஷணத்தைத் தடுத்து தன் ஆன்மாவைத் தானே காப்பாற்றிக்கொள்ள முயல்வது அறிவற்ற செயலாய் முடியும்.

63.       தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இயலாத பால்குடி மாறாத குழந்தையை அம்மா அப்பாவிடமிருந்து பறித்து கசாப்புக்கடைக்காரனிடம் ஒப்படைப்பது போல முடியும்.

64.       ‘தன்னைத் தானேயிறே முடிப்பான்.’

65.       தன் ஆன்மாவுக்குத் தானே நாசத்தை விளைவித்து விடுவான்.

66.       ‘தன்னைத் தானே முடிக்கையாவது, அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை.’

67.       அஹங்காரமாவது, ‘தேஹமே நான்’ என்று இருக்கை. தேஹம் ஜடமானதால், ஆன்மா இருப்பினும், அஹங்காரத்தால் இல்லாத தன்மையை அடையும்.

68.       விஷயங்களை விரும்புகையாவது, சேதனன் புலன்களின் விருப்பு-வெறுப்புகளுக்கு அடிமைப்பட்டு கர்மங்களைச் செய்து போர, ஆன்மா தேஹத்துக்குள் புதைந்து தேய்ந்து தீய்ந்து இருந்த இடம் தெரியாமல் போகும்.

69.       ‘இவ்விரண்டும் ஸ்வரூபேண முடிக்கும் அளவன்றிக்கே பாகவத விரோதத்தையும் விளைத்து முடிக்கும்.’

70.       இவ்விரண்டும் ஆன்மாவுக்கு நாசத்தை விளைப்பது மட்டுமல்லாது, பாகவத அபச்சாரத்தையும் செய்யத்தூண்டி அவர்களை விரோதிக்கும்படி செய்யும்.

71.       ஆன பின்னே, இருக்கவே இருக்கிறது, தன் கர்ம மூட்டையும் எம தூதர்களும்.

72.       ‘இவன் அவனைப்பெற நினைக்கும்போது இந்த பிரபத்தியும் உபாயமன்று.’

73.       சேதனன் திருவடிப்பேறு பெறும்பொருட்டு பிரபத்தி செய்தால், எம்பெருமான், தன்  கிருபையால் இவனுக்கு திருவடி ஞானத்தைத் தரலாம்; அல்லது, சேதனனின் கர்மமடியாக திருவடி ஞானம் தர மறுக்கலாம். அவன் ஸ்வதந்திரன் ஆகையாலே அவனைக் கேள்விகேட்க ஆளில்லையாயிற்று.

74.       ‘அவன் இவனைப்பெற நினைக்கும்போது பாதகமும் விலக்கன்று.’

75.       எம்பெருமான் இவனுக்கு திருவடி ஞானம் தர விரும்பிவிட்டால், இவன் பிரபத்தி செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் போகும்.

76.       ‘பரதாழ்வானுக்கு நன்மைதானே தீமையாய்த்து; குகப்பெருமாளுக்கு தீமைதானே நன்மையாய்த்து.’

77.       கைகேயியின் ஆணையைத் தொடர்ந்து காட்டுக்குச் சென்ற ராமபிரானை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர முயன்ற பரதனின் பிரபத்தி பலிக்கவில்லை.

78.       ஆனால், பிரபத்தி என்று ஒன்று செய்யாமலேயே குகனிடம், பிராட்டியுடன் ராமபிரான் வலியச்சென்று, அவனை அங்கீகரித்தருளினான்.

79.       ‘நெடுநாள் அந்யபரையாய்ப் போந்த பார்யை லஜ்ஜாபயங்களின்றிக்கே பர்த்ருஸகாசத்திலே நின்று என்னை அங்கீகரிக்கவேணுமென்று அபேக்ஷிக்குமா போலே இருப்பதொன்றிறே இவன் பண்ணும் பிரபத்தி.’

80.       பலபிறவிகளாக திருவடிகளிடமிருந்து பிரிந்து தேஹாதிகளுடன் குடும்பம் நடத்திவிட்டு, இன்று வந்து ‘என்னை அங்கீகரிக்கவேணும்’ என்று வெட்கமோ பயமோ இல்லாமல் கேட்பதல்லவா, இவன் எம்பெருமானிடம் செய்யும் இந்த பிரபத்தி?

81.       இது எப்படி இருக்கிறது என்றால், கணவனை விடுத்து ஐந்து அந்நியர்களிடம் பலகாலம் குடும்பம் நடத்திவிட்டு, ஒரு நாள் கணவனிடம் வந்து வெட்கமோ பயமோ இல்லாமல், தன்னை அங்கீகரிக்கக் கோருவது போல.

82.       கணவன் கிருபையாலே சம்மதிக்கலாம்; அல்லது, செய்த காரியத்துக்குத் தகுதியாக தள்ளிவைக்கலாம்.

83.       ‘கிருபையாலே வரும் பாரதந்திரியத்திற் காட்டில் ஸ்வாதந்திரியத்தால் வரும் பாரதந்திரியம் ப்ரபலம்.’

84.       எம்பெருமானைத் தான் பற்றும் பற்றான பிரபத்தி ரூப சுவகத சுவீகாரம், திருவடி ஞானத்தைத் தரலாம்; தராமலும் போகலாம்.

85.       ஆனால், எம்பெருமான் சேதனனை வந்து பற்றும் திருவடி ஞானமான பரகத சுவீகாரம், பேற்றைத் தந்தே தீரும்.

86.       ‘இழவுக்கு அடி கர்மம்; பேற்றுக்கு அடி கிருபை.’

87.       திருவடிப்பேறு உண்டாகத் தேவையான திருவடி ஞானம் கிட்டாமல் போவதற்குக் காரணம், தடையாக நிற்கும் சேதனனுடைய கர்மம். திருவடிப்பேற்றோடு முக்திப்பேறும் உண்டாவதற்குக் காரணம், எம்பெருமானுடைய கிருபையால் விளையும் திருவடி யோகம்.

88.       ‘பய ஹேது கர்மம்; அபய ஹேது காருண்யம்.’

89.       ஆகவே, தன்னுடைய கர்மத்தை நினைத்தால், சேதனனுக்கு திருவடி ஞானத்தை இழந்துபோகும் பயம் ஸித்திக்கும். எம்பெருமானுடைய கிருபையை நினைத்தால், திருவடி யோகம் பெறவிருக்கும் அபயம் ஸித்திக்கும்.

90.       ‘ஈசுவரனைப் பற்றுகை, கையைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோபாதி; ஆச்சார்யனைப் பற்றுகை, காலைப் பிடித்துக் காரியம் கொள்ளுமோபாதி.’

91.       எம்பெருமானை உபாயமாகப் பற்றுவது, எம்பெருமானுடைய கையைப் பிடித்து உதவி கேட்பது போல; ஆச்சார்யனை உபாயமாகப் பற்றுவது, எம்பெருமானுடைய காலைப் பிடித்து உதவி கேட்பது போல.

92.       ‘ஈசுவர சம்பந்தம் பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும்; ஆச்சார்ய சம்பந்தம் மோக்ஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும்.’

93.       எம்பெருமானை உபாயமாகப் பற்றுவதால், திருவடி ஞானம் பெறலாம்; அல்லது, பெறாமலும் போகலாம். ஆச்சார்யனை உபாயமாகப் பற்றினால், எம்பெருமானுடைய சுவாதந்திரியம் அழிந்து கிருபை பெருகியே தீருமாதலால், பிராட்டியால் திருவடி யோகம் பெற்று திருவடி ஞானம் அடைவதிலிருந்து சேதனன் தப்பவே முடியாது.

94.       ஏனெனில், ஆச்சார்யனை உபாயமாகப் பற்றியவன் ஹ்ருதயத்தில் குருநாதர் விரைவிலேயே குடிவந்துவிடுவார்.

95.       மும்மூர்த்தி ஸ்வரூபமான குருநாதர் திருவருளைப் பெற்றவனைப் பிராட்டி அங்கீகரித்தே தீரவேண்டும்.

96.       எம்பிராட்டியின் புருஷகார பலத்தால் எம்பெருமானும் இவனை அங்கீகரித்தே தீரவேண்டும்.

97.       ஆகவே, ஆச்சார்யனை உபாயமாகப் பற்றியவனுக்கு பிரபத்தி தன்னடையே ஸித்திக்கும்.

98.       இதனை மதுரகவி ஆழ்வார் பாசுரமிட்டார்:

திரிதந் தாகிலும் தேவ பிரானுடை
கரியக் கோலத் திருவுருக் காண்பன்நான்
பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்
உரிய னாயடி யேன்பெற்ற நன்மையே.

99.       இப்பாசுரத்தின் பொருளாவது, நம்மாழ்வாரை உபாயமாகப் பற்றி நான் கண்ட நன்மையாவது, நான் யாதொரு முயற்சியும் செய்யாது நின்ற போதும், எம்பெருமான் தன் கரிய திருவுருவை என் மேல் விழுந்து காட்டக்காண்பன்.

100.    இதனை ஆண்டாள் பாசுரமிட்டாள்:

நல்லஎன் தோழி!நாக ணைமிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறுமா னிடவர்நாம் செய்வதென்
வில்லி புதுவை விட்டுசித் தர்தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே.

101.    இப்பாசுரத்தின் பொருளாவது: நல்லது, தோழி! கூவிக்கூவிக் களைத்துப் போனோம். திருப்பாற்கடலில் அரவணையில் திருப்பள்ளிகொண்டு இவ்வுலகாளும் நம்பெருமானை வரவழைக்க சிறுமானிடவரான நம்மால் இயலாது. ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ்ணுசித்தரான பெரியாழ்வார் வரவழைத்துக் காட்டினால் மட்டுமே நாம் காண இயலும்.
இப்பாசுரமிட்டவள் யார்? பூமிப்பிராட்டி.

102.    இதனை திருமழிசை ஆழ்வார் பாசுரமிட்டார்:

பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவாரைக்
கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து
விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு.

103.    இப்பாசுரத்தின் பொருளாவது: இலக்கு தப்பாத உபாயம் ஒன்றைக் கண்டுகொண்டேன். திருப்பாற்கடல் எம்பெருமான் திருப்பாதங்களை உபாயமாகப் பெற்றவனை உபாயமாகப் பற்றியவன் முக்திப்பேறு பெறுவான்.

104.    ‘இது, பிரதமம் ஸ்வரூபத்தைப் பல்லவம் ஆக்கும்; பின்பு, புஷ்பிதம் ஆக்கும்; அனந்தரம் பலபர்யந்தம் ஆக்கும்.’

105.    ஆச்சார்யனை உபாயமாகப் பற்றுபவன், தன் ஆன்ம ஸ்வரூபம் முதலில் மொட்டுவிட்டு, பின் பூத்துக்குலுங்கி, அதன் பின்னர் பழம் பழுக்கப்பெறுவான்.

106.    அதாவது, திருவடி யோகம் பெற்று, திருவடி ஞானம் பெற்று, பின் திருவடிப்பேற்றோடு முக்திப்பேறும் பெறுவான்.

107.    சரணாகதியின் ஞான அநுஷ்டானங்களை விளக்கி வசனபூஷணம் அருளிச்செய்த பிள்ளைலோகாச்சாரியருக்கு அடியேனுடைய நமஸ்காரம் உரித்தாகட்டும்.

108.    சரணாகதியின் ஞான அநுஷ்டானங்கள் எல்லாம் அடியேனுக்கு புத்தியில் பிரகாசிக்கும் பொருட்டு அடியேனுடைய குருநாதர் திருவடிகளை தஞ்சமாக சரணமடைகிறேன்.



No comments:

Post a Comment