Sunday, September 2, 2018

Vinayagar Agaval - Lyrics and Meaning in Tamil


விநாயகர் அகவல் - மூலமும் உரையும்





விநாயகர் அகவல், இறைஞானம் அடைந்து முக்தி பெறும் ஆன்மீக வழியை முழுமையாகவும் படிப்படியாகவும் எழுபத்திரண்டே வரிகளில் மிக அழகாகப் பாடப்பெற்ற ஈடு இணையற்ற அற்புத நூல். இதன் ஆசிரியர் ஔவையார். இதனைத் தினமும் பாராயணம் செய்பவர்கள், விநாயகர் அருளால் ஆத்மஞானம் பெற்று, இம்மையில் வாழ்க்கை அனுபவத்தரம் உயரப்பெறுவதோடு மறுமையில் திருக்கயிலாயமும் அடையப்பெறுவர் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

சாக்தத்தின் தாந்த்ரீக யோகமார்க்கத்தையும் சைவத்தின் சித்தாந்த ஞானமார்க்கத்தையும் மிகத் திறமையாக ஒருங்கிணைத்து, இறைஞானம் அடைந்து முக்தி பெறும் அநுபூதி மார்க்கமாக ஔவை, மிக அற்புதமாக இந்நூலில் விவரித்திருகிறார்.

முதல் மூன்று பகுதிகளில் விநாயகரை பாதாதி கேசம் வர்ணித்து ஓர் எளிமையான பக்தி நூலாக ஔவை துவங்குகிறார்.

நான்கு மற்றும் ஐந்தாம் பகுதிகளில் ஆச்சாரியன் நயன தீட்சையாக ஆத்மஞான செயல்விளக்கம் செய்து காட்டி அருளிய அற்புதத்தை விவரிக்கிறார்.

ஆறாம் பகுதி தொடங்கி பத்தாம் பகுதி வரையில் மறைப்பு சக்தியான திரோதான சக்தி மறைந்து அருட்சக்தியாக ஆத்மாவில் பதிந்து சக்திநிபாதம் உண்டாகும் அற்புதத்தை தாந்த்ரீக யோகமார்க்கத்தில் விவரிக்கிறார்.

பதினொன்றாம் பகுதி தொடங்கி பதினான்காம் பகுதி வரையில், இறைஞானம் அடைந்து முக்தி அடையும் அற்புதத்தை சித்தாந்த ஞானமார்க்கத்தில் விவரிக்கிறார்.

*****

இந்நூலின் திரண்ட கருத்து:


விநாயகப்பெருமானே, என் ஆத்மாவை, என் உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் நெஞ்சத்திலிருந்தும் வேறுபடுத்தி, நான் அனுபவத்தில் அறியும்படி செய்தருளினாய். பின்னர், என் ஆத்மாவை, என் உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் நெஞ்சத்திலிருந்தும் உள்முகமாகப் பிரித்து, நான் அனுபவத்தில் உணரும்படி செய்தருளினாய். பின்னர், என் ஆத்மாவையும் என் ஆத்மாவினுள் விளங்கும் உன்னையும் உனக்குள் விளங்கும் உமாதேவியையும் உமாதேவிக்குள் விளங்கும் சிவபெருமானையும் எனக்கு தரிசனம் செய்வித்தருளினாய். பின்னர், சிவபெருமானுக்குள் விளங்கும் அமுதத்தை நுகர்வித்து எனக்கு வீடுபேறு அளித்தருளினாய்.

*****

ஆன்மீக விழிப்புணர்வுடன் வாழ்ந்து, வாழ்வின் சவால்களை இறையுதவியுடன் எதிர்கொள்ள உதவும் ஆன்மீக தத்துவங்களை, ஒரு கதையின் பின்புலத்தில் விளக்கும் ஒரு தமிழ் குறுநாவல் இது. ஆர்வமுள்ள நண்பர்கள் வாசித்துப் பயன்பெறலாம் - https://d2hstory.blogspot.com/

*****

மூலம்:


விநாயகர் அகவல் - ஔவையார்



சீதக் களபச்   செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு   பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும்   பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில்   வளர்ந்தழகு தெறிப்பப்
பேழை வயிறும்   பெரும்பாரக் கோடும் (5


வேழ முகமும்   விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும்   அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட   நீல மேனியும்
நான்ற வாயும்   நாலிரு புயமும்
மூன்று கண்ணும்   மும்மதச் சுவடும் (10

இரண்டு செவியும்   இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல்   திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த   துரியமெய்ஞ் ஞான
அற்புதன் ஈன்ற   கற்பகக் களிறே
முப்பழம் நுகரும்   மூஷிக வாகன (15

இப்பொழுது என்னை   ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்குத்   தானெழுந் தருளி
மாயாப் பிறவி   மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந்து   எழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்துஎன்   உளந்தனில் புகுந்து (20

குருவடி வாகிக்   குவலயந் தன்னில்
திருவடி வைத்துத்   திறமிது பொருளென
வாடா வகைதான்   மகிழ்ந்து எனக்கருளிக்
கோடா யுதத்தால்   கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம்   புகட்டிஎன் செவியில் (25

தெவிட்டாத ஞானத்   தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை   அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின்   இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும்   கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை   அறுத்து இருள்கடிந்து (30

தலமொரு நான்கும்   தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின்   மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில்   ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை   அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து   அங்கிசை நிலையும் (35

பேறா நிறுத்திப்   பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின்   எழுத்து அறிவித்து
கடையில் சுழுமுனைக்   கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின்   முட்டிய தூணின்
நான்று எழுபாம்பின்   நாவில் உணர்த்தி (40

குண்டலி அதனில்   கூடிய அசபை
விண்டுஎழு மந்திரம்   வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின்   மூண்டுஎழு கனலைக்
காலால் எழுப்பும்   கருத்து அறிவித்தே
அமுத நிலையும்   ஆதித்தன் இயக்கமும் (45

குமுத சகாயன்   குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின்   ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின்   உறுப்பையுங் காட்டி
சண்முகத் தூலமும்   சதுர்முக சூக்கமும்
எண்முக மாக   இனிது எனக்கருளி (50

புரியட்ட காயம்   புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும்   தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால   வாயில் காட்டி
இருத்திமுத்தி இனிது   எனக்கு அருளி
என்னை அறிவித்து   எனக்கருள் செய்து (55

முன்னை வினையின்   முதலைக் களைந்து
வாக்கும் மனமும்   இல்லா மனோலயம்
தேக்கியே எந்தன்   சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும்   ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்   தழுத்திஎன் செவியில் (60

எல்லை யில்லா   ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே   அருள்வழி காட்டி
சத்தத்தி னுள்ளே   சதாசிவம் காட்டி
சித்தத்தி னுள்ளே   சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவாய்   அப்பாலுக் கப்பாலாய் (65

கணுமுற்றி நின்ற   கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும்   விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர்   குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின்   அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின்   நிலையறி வித்து
தத்துவ நிலையைத்   தந்தெனை யாண்ட
வித்தக விநாயக   விரைகழல் சரணே. (72

 *****

உமாஸ்ரீதாஸன் உரை


ஒன்றாம் பகுதி முதல் மூன்றாம் பகுதி வரை: பாதாதி கேசம் வர்ணனை


சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகு தெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (01

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (02

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன (03

(மூச்சுவிடாமல் விநாயகரை பாதாதி கேசம் வர்ணித்து, பக்திமயமாக நூலைத் துவக்குகிறார் ஔவை).

குளிர்ந்த சந்தனம் பூசிய தாமரைப்பூப் போன்ற மிருதுவான திருவடிகளில் அணிந்துள்ள சிலம்புகள் பலவகையான ஒலிகளை எழுப்பவும், அழகிய திருஇடையில் பொன்னாலான அரைஞாணும் மிருதுவான ஆடையும் அழகாக மிளிரவும்,

பெட்டி போன்ற பெரிய வயிற்றுடனும், பெரிய கனமான தந்தத்துடனும், யானை முகத்துடனும், அம்முகத்திலே விளங்கும் செந்தூரப்பொட்டுடனும், கீழிரு கைகளும்  மேலிரு கைகளும் துதிக்கையும் என ஐந்து கரங்களுடனும், மேலிரு கரங்களில் விளங்கும் அங்குசம் பாசம் என்னும் கருவிகளுடனும், காண்போர் நெஞ்சத்தைக் கவர்ந்து வீற்றிருக்கும் கரிய திருமேனியுடனும், யானைக்குரிய தொங்குகின்ற திருவாயுடனும், தெய்வத்திற்குரிய நான்கு பெரிய திருக்கரங்களுடனும், மூன்று திருக்கண்களுடனும், மூன்றுவித மதநீர் ஒழுகுகின்ற யானைக்குரிய திருநெற்றியுடனும், இரண்டு திருச்செவிகளுடனும், சிரத்தில் விளங்கும் பொன்னாலாகிய மகுடத்துடனும், மூன்று திரிகளுடன் கூடிய பூணூல் திகழும் ஒளிவீசும் திருமார்புடனும் விளங்குகின்ற,

வாக்கிற்கும் மனத்திற்கும் அப்பால் விளங்கும் ஞானமயமான அற்புதனாகிய சிவபெருமானுடைய திருக்குமாரனாகிய, அடியவர் விரும்பியவற்றை எல்லாம் வாரி வழங்கும் யானைமுகத்தோனே! மூவகையான பழங்களைப் புசிக்கின்ற, எலியை வாகனமாக உடையோனே!


நான்காம் பகுதியும் ஐந்தாம் பகுதியும்: ஆத்மஞான செயல்விளக்கம்


இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந்து எழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்துஎன் உளந்தனில் புகுந்து (04

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் (05
           
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

(இனி, விநாயகர் தனக்கு இறைஞானமளித்து தன்னை ஆட்கொண்ட அற்புதத்தை ஒவ்வொரு படிநிலையாக ஔவை விவரிக்க ஆரம்பித்து, முதலில் ஆச்சாரியன் தனக்கு அருளிச்செய்த ஆத்மஞான செயல்விளக்கத்தை ஔவை விவரிக்கிறார்).

என் ஆத்மாவின் உள்ளே விளங்கும் தன்னையும் தனக்குள்ளே விளங்கும் தன் அம்மையப்பனையும் வெளிப்படுத்தி, என்னை ஆட்கொள்ளத் திருவுள்ளமான விநாயகர், முதலில், என் ஆத்மாவை நான் தத்துவார்த்தமாக அறிந்துகொள்ளும் பொருட்டு, தாயின் கருணையோடு என் புத்தியில் நின்று, ஆத்ம தத்துவத்தை தெளிவாக நான் உணரும்படிக்கு, மாயையின் மயக்கத்தினால் உண்டாகும் பிறவிப்பிணிக்கு மருந்தான சிவபஞ்சாட்சரத்தின் பொருள் விளங்கும்படிக்குச் செய்தருளினார்.

இவ்வாறு ஆத்ம தத்துவத்தை உணர்த்தியருளிய விநாயகர், அதனை நான் அனுபவத்தில் அறிந்துகொள்ளும் பொருட்டு, ஆச்சார்யனுடைய ஆத்மாவினுள் நின்று, இவ்வாறாக இப்பூமிக்கு வந்தருளி, தத்துவமாக அறிந்த ஆத்மாவை அனுபவத்தில் அறிந்துகொள்ள இயலவில்லையே என்ற என்னுடைய ஆர்வத்துக்கு மகிழ்ந்து, நான் அவ்வாறு வருந்தாதபடி, தன் திருத்தந்தத்தால் என் அஞ்ஞான இருளுக்குக் காரணமான என் கொடிய பாவங்களை அழித்து, பின், ஆச்சாரியனுடைய அற்புத உபதேசம் மூலமாகவும் ஆத்மஞான செயல்விளக்கம் மூலமாகவும், அழியாப் பொருளான என் ஆத்மாவை என் உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் நெஞ்சத்திலிருந்தும் வேறுபடுத்தி நான் அனுபவத்தில் அறியும்படி செய்தருளினார்.

ஆறாம் பகுதியும் ஏழாம் பகுதியும்: இருவினை ஒப்பும் மல பரிபாகமும்


தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள்கடிந்து (06

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்கிசை நிலையும் (07

(இனி, ஆச்சார்யன் செய்து காண்பித்த ஆத்மஞான செயல்விளக்கத்தினால் தற்காலிகமாக அனுபவித்த ஆத்மஞானமானது, தனக்கு நிரந்தரமாக ஸித்திக்கும்படிக்கு விநாயகர் அருளியதை ஔவை மேலே பாடுகிறார்.)

இவ்வாறாக, ஐம்புலன்களை அடக்கும் உபாயமான ஆத்மஞானத்தை எனக்கு அனுபவத்தில் ஆச்சார்யன் வாயிலாக அறிவித்து, பின்னர், உடலும் மனமும் நெஞ்சமும் ஒடுங்கும் வண்ணம் அவற்றை இயக்கும் ஆத்மாவின் சக்தியை வேறுபடுத்தியருளி, அதன்மூலமாக, எனக்கு இருவினை ஒப்பு உண்டாகும்படிக்கு செய்தருளினார்.

ஆத்மாவின் சக்தியை என் நெஞ்சத்திலிருந்தும் மனத்திலிருந்தும் உடலிலிருந்தும் வேறுபடுத்தி எனக்கு இருவினை ஒப்பு உண்டாகும்படிக்கு அருளிய விநாயகர், என் அஞ்ஞானம் அகலும் படிக்கு, என் நெஞ்சத்தையும் மனத்தையும் உடலையும் தாண்டி நிற்கும் நான்காவது தத்துவமான என் ஆத்மாவையும் நான் நிரந்தரமாக அனுபவத்தில் அறியும்படி எனக்கு, இந்நான்கையும் தனித்தனியே நான் உணரும்படி தந்தருளி, அதன் மூலமாக, மாயா-கன்ம-ஆணவ மலங்களின் உண்மைத்தன்மையை நான் உணரும்படி செய்து, எனக்கு மலபரிபாகம் உண்டாகும்படிக்கு அருளினார்.

இவ்வாறாக, என் உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் நெஞ்சத்திலிருந்தும் வேறுபடுத்தி என் ஆத்மாவை நான் அனுபவத்தில் அறிந்த காரணத்தால், ஓங்காரத்தின் உட்பொருளான, ஆத்மாவின் உள்ளே விளங்கும் பிரஹ்மத்துடன் ஒன்றி நின்று, ஒன்பது வாயில் உடலையும் அதன் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் வழியையும் காட்டியருளினார்.

எட்டாம் பகுதி முதல் பத்தாம் பகுதி வரை: சக்தி நிபாதம்


ஆறா தாரத்து அங்கிசை நிலையும் (07

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்து அறிவித்து
கடையில் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழுபாம்பின் நாவில் உணர்த்தி (08

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டுஎழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டுஎழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (09

குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முகத் தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முக மாக இனிது எனக்கருளி (10

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி


(இனி, உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் நெஞ்சத்திலிருந்தும் தன் ஆத்மாவை வேறுபடுத்தி அருளிய விநாயகர், உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் நெஞ்சத்திலிருந்தும் தன் ஆத்மாவை உள்முகமாகப் பிரித்து அருளியதை ஔவை மேலே பாடுகிறார்.)

ஆறாதாரங்களை அவற்றின் தன்மையோடு எனக்குப் புரியவைத்து, அங்கே பிராணனை நிறுத்தி எண்ணங்களை ஒடுக்கும் பொருட்டு, இடை மற்றும் பிங்களை நாடிகளில் செல்லும் பிராணனை தண்டுவடத்தின் நடுவே ஓடும் சுழுமுனை நாடியில் செலுத்தி, அக்னி-சூரிய-சந்திர மண்டலங்களைத் தாண்டி, இறுதியில் கபாலத்தில் முடிக்க வேண்டிய முறையைப் புரியவைத்து,

அப்படி சுழுமுனையில் செலுத்தும் பொருட்டு, மூலாதாரத்தில் சுழுமுனை வாயிலை அடைத்துக்கொண்டிருக்கும்  குண்டலினி சக்தியை எழுப்பும் பொருட்டு, மூலக்கனலைப் பிராணனால் உருவாக்கி, எழுந்த குண்டலினியோடு பிராணனை சுழுமுனையில் செலுத்தும்பொருட்டு, குண்டலினியுடன் என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் முறையைப் புரியவைத்து,

சந்திரமண்டலத்திலிருந்து வடியும் அமுதத்தை சூரிய மண்டலம் கிரகிக்கும் முறைமையைப் புரியவைத்து, அந்த அமுதத்தை ஆத்மா பருகும் பொருட்டு, முதலில் சக்திநிபாதம் உண்டாகும் பொருட்டு, மூலாதாரச் சக்கரத்தின் நான்கு நிலைகள் தொடங்கி, தலைக்கும் உடலுக்கும் இடைப்பட்ட விசுத்திச் சக்கரத்தின் பதினாறு நிலைகள் வரையில் உடலில் விளங்கும் ஐந்து சக்கரங்கள் வழியாக சுழுமுனையில் பிராணனைக் குண்டலியுடன் செலுத்தி, உடலிலிருந்து ஆத்மசக்தியை உள்முகமாகப் பிரித்தெடுத்து, பின்னர், ஆக்ஞா சக்கரத்தில் செலுத்தி மனத்திலிருந்து ஆத்மசக்தியை உள்முகமாகப் பிரித்தெடுத்து என் புத்தியில் பிரகாசிப்பித்து அருளினாய்.

இங்ஙனம் உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் ஆத்மசக்தியைப் பிரித்து உணர்த்தியபின்னர், நெஞ்சத்திலிருந்தும் உள்முகமாகப் பிரித்து, காரண சரீரத்தில் விளங்கும் என் ஆத்மாவை, அதன் எட்டு உறுப்புகளோடு நான் எனக்குள்ளே காணலாம்படிக்கு செய்தருளினாய்.

பதினொன்றாம் பகுதி: விநாயகர் தரிசனம்


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்திமுத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து (11

(இனி, உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் நெஞ்சத்திலிருந்தும் தன் ஆத்மாவை உள்முகமாகப் பிரித்து அருளிய விநாயகர், தனக்கு ஆத்ம தரிசனம் செய்வித்து அருளியதை ஔவை மேலே பாடுகிறார்.)

குண்டலினியை சுழுமுனை நாடி வழியே ஆக்ஞா சக்கரம் வரையில் செலுத்தி, சக்தியுடன் கூடிய ஆத்மாவை அனுபவம் பண்ணும்படிக்கு அருளிய விநாயகர், மேலே குண்டலினியைக் கபாலத்திலுள்ள ஸகஸ்ரார சக்கரம் வரை செலுத்தி, சக்தியுடன் கூடிய என்னுடைய ஆத்மாவை என் உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் நெஞ்சத்திலிருந்தும் விடுவித்து அருளினார். பின்னர், சக்தியின் பின்புலத்தில் விளங்கும் என் ஆத்மாவை நான் நன்றாக உணரும்படிக்கு முன்புலத்தில் காட்டினார். பின்னர் என் ஆத்மாவுக்குள் இனிதே வீற்றிருக்கும் தன்னையும் காட்டியருளினார்.

பன்னிரெண்டாம் பகுதி: உமாதேவி தரிசனம்


என்னை அறிவித்து எனக்கருள் செய்து (11

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்திஎன் செவியில் (12

எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

(இனி, தன்னுடைய ஆத்மாவிற்குள் வீற்றிருக்கும் தன்னுடைய தரிசனத்தை அருளிய விநாயகர், தனக்கு உமாதேவியின் தரிசனம் செய்வித்து அருளியதை ஔவை மேலே பாடுகிறார்.)

என்னுடைய ஆத்மாவிற்குள் வீற்றிருக்கும் உன்னுடைய தரிசனத்தால், என் சஞ்சித வினைகளின் தாக்கத்தைத் தகர்த்து, வாக்கையும் எண்ணத்தையும் மனதோடு சேர்த்து புத்தியில் லயித்து, இவ்வாறாக, என் புத்தியைப் பற்றறுத்து தெளிவுபடுத்தி, பிரகிருதியின் குணங்களுக்கு அப்பாற்பட்டு விளங்கும் உமாதேவியின் தரிசனம் காட்டி, என் செவி முதலான புலன்களை இன்புறுத்த,

உமாதேவியின் அருட்சக்தியினுள் என் ஆத்மா ஒடுங்கி நின்று, ஒரு காரணம் பற்றி வாராத இயல்பான ஆனந்தத்தைப் பெற்று, பிறவித் துன்பம் நீங்கப்பெற்றேன்.

பதிமூன்றாம் பகுதி: சிவபெருமான் தரிசனம்


எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் (13

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

(இனி, தன்னுடைய ஆத்மாவிற்குள் உமாதேவியின் தரிசனத்தை அருளிய விநாயகர், தனக்கு சிவபெருமான் தரிசனம் செய்வித்து அருளியதை ஔவை மேலே பாடுகிறார்.)

உமாதேவியின் அருட்சக்தியினுள் அடங்கி நிற்கும் ஆத்மாவுக்கு அருட்சக்தி வழிகாட்ட, எனக்கு வெளியே, இவ்வுலகின் அனைத்து ஜீவராசிகளின் ஆத்மாவாக விளங்கும் சதாசிவ மூர்த்தியின் தரிசனம் கிடைக்கப்பெற்றேன். தொடர்ந்து, என் சிரசில் அர்த்தநாரீசுவரனாயும் அருவுருவாயும் விளங்கும் சிவபெருமான் தரிசனம் கிடைக்கப்பெற்றேன். அச்சிவத்தை என் உடலின் அணுவுக்கும் அணுவாக என் உடல் முழுவதும் ஊடுறுவப்பெற்றதோடு, உடலுக்கும் மனத்துக்கும் அப்பால் விளங்கும் என் காரண சரீரத்திலும் ஊடுறுவப்பெற்று, முற்றிய கரும்பின் இனிமையைப்போல் விளங்கும் சிவானந்தத்தை என் தேஹமெங்கும் அனுபவிக்கப்பெற்றேன்.

பதினான்காம் பகுதி: வீடுபேறு


கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்து
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே. (14

(இனி, தன்னுடைய ஆத்மாவிற்குள் அம்மையப்பர் தரிசனத்தை அருளிய விநாயகர், தனக்கு வீடுபேறு அருளியதை ஔவை மேலே பாடுகிறார்.)

உன்னுடைய கருணையால், காணுமிடமெல்லாம் பரவி நிற்கும் சதாசிவத்துடன் என்னுடைய ஆத்மா ஒருங்கிணைக்கப்பெற்று, நாமரூபங்களைத் தாண்டி, அடியார்களுடைய ஆத்மாக்களுடன் ஆன்மரீதியாக ஒருங்கிணைக்கப்பெற்று, பின்னர், எல்லையற்று விரிந்து நிற்கும் சிவத்துடன் ஆத்மா விரிவடைந்து நெஞ்சில் வேறுபாடற்று ஒன்றி நிற்கப்பெற்று, பஞ்சாட்சரத்தின் பொருளை அனுபவத்தில் அறிந்து, பின்னர், தேஹம் முழுவதும் சிவபெருமானின் உள்ளே விளங்கும் அமுதத்தால் நனைக்கப்பெற்று, ஆத்மா அமுதமயமாக, மஹாவாக்யத்தின் பொருளை அனுபவத்தில் அறிந்துகொண்டேன். இவ்வாறாக என்னைக் காட்டி எனக்குள் உன்னைக்காட்டி, உனக்குள் அம்மையப்பரைக் காட்டி, என்னை அமுதமயமாக்கி ஆட்கொண்டு வீடுபேறு அருளிய விநாயகப் பெருமானே, உன் திருவடிகளே என்றும் எனக்குப் புகலிடமாகிறது.


*** 


சரணாகதி பிரார்த்தனை பணி - 

 https://lampofsurrender.blogspot.com/2018/09/surrender-prayer-service-tamil.html 

***

14 comments:

  1. அருமையான,தெளிவான விளக்கம். நன்றி

    ReplyDelete
  2. தெளிவான அருமையான விளக்கம்

    ReplyDelete
  3. மிகவும் சிறப்பாக தெளிவாக உள்ளது இதன் விளக்கம். நன்றி

    ReplyDelete
  4. நற்பணி தொடரட்டும்
    அன்பு கலந்த வணக்கஸ்கள்

    ReplyDelete
  5. மிக சிறந்த விளக்க உரை

    ReplyDelete
  6. பஞ்சாட்சரம் என்பது யாது

    ReplyDelete
  7. Arumai thamilil kidaiththadhu avarin karunaia mam seidha punniama

    ReplyDelete
  8. Om Gam Ganapathiye Namaha! Om Namasivaya!

    ReplyDelete
  9. Thank you -learnt the meaning today.

    ReplyDelete
  10. Thank you for the wonderful explanation with clarity. Was longing to learn the explanation for this poem for a long time.

    ReplyDelete