Sriman Narayana in Milky Ocean |
அநுபூதி தீபம்
1. எட்டாம் பத்து ஏழாந் திருவாய்மொழியில் நம்மாழ்வார்
அருளிச்செய்த திருவடிப்பேறு அநுபூதி, அடியேனுக்கு புத்தியில் பிரகாசிக்கும் பொருட்டு,
அடியேனுடைய குருநாதர் திருவடிகளை தஞ்சமாக சரணமடைகிறேன்.
2. முக்திப் பெருநெறியின் படிநிலைகளை ஆற்றொழுக்குப்போல்
மிகவும் அற்புதமாகவும் அழகாகவும் வரிசைக்கிரம அந்தாதியாக ஒப்பில்லாத திருவாய்மொழி செய்தருளிய
நம்மாழ்வாருக்கு அடியேனுடைய நமஸ்காரம் உரித்தாகட்டும்.
3. முதல் பாசுரம்:
இருத்தும் வியந்தென்னைத்
தன்பொன் னடிக்கீழென்று
அருத்தித் தெனைத்தோர்
பலநாள் அழைத்தேற்கு
பொருத்த முடைவா மனன்தான்
புகுந்தென்றன்
கருத்தை யுறவீற் றிருந்தான்
கண்டுகொண்டே.
4. முதல் பாசுரத்தின் பொருளாவது: ‘வியந்து அடியேனைத்
தன் அழகிய திருவடிகளின் கீழ் இருத்தியருள்வானாக’ என்று பிரார்த்தித்து எத்தனை நாட்கள்
அழைத்து நான் கூப்பிட்டதற்கு, பொருத்தமுடைய வாமனன் என்னுள் புகுந்து என் கருத்தைத்
தான் உடையவனாய்க்கொண்டு என்னையே பார்த்தவண்ணமாக இன்று எழுந்தருளியிருக்கிறான்.
5. இரண்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழியில்
திருவடிப்பேற்றைப் பிரார்த்தித்த ஆழ்வார், எட்டாம் பத்து ஏழாந் திருவாய்மொழியில் தான்
திருவடிப்பேறு பெற்றதைக் கொண்டாடுகிறார்.
6. திருவடிப்பேற்றை திருவடிகளைக்கொண்டே சாதித்த
ஆழ்வார், இப்பத்துப் பாசுரங்களிலும் திருவடிப்பேற்றின் அநுபூதி தன்மையை அன்பர்கள் அறியும்படி
வெளியிடுகிறார்.
7. முதல் பாசுரத்தில் ஆழ்வார் திருவடிப்பேற்றின்
இலக்கணம் சொல்லித் தொடங்குகிறார்.
8. மேல் நான்கு பாசுரங்களில் திருவடிப்பேற்றின்
பயன்களைக் குறிப்பிடுகிறார்.
9. அதற்குமேல் ஐந்து பாசுரங்களில் திருவடிகளின்
மகத்துவத்தைக் குறிப்பிடுகிறார்.
10. இறுதிப்பாசுரத்தில் இத்திருவாய்மொழி கற்றார்க்குப்
பயன் சொல்லி ஆழ்வார் முடிக்கிறார்.
11. பொருத்தமுடை வாமனன் - திரிவிக்கிரமனாக விளங்கும்
எம்பெருமான் இடப்பற்றாக்குறை கருதி, இருக்கும் இடத்துக்குப் பொருத்தமாக வாமன ரூபத்தை
எடுத்துக்கொண்டு, ஆழ்வாரின் மனத்திலும் தேஹத்திலும் நெஞ்சிலும் புகுந்து வீற்றிருந்தான்.
12. கருத்தையுற வீற்றிருந்தான் - ‘அநுமந்தா’ என்று
கீதாசார்யன் வர்ணித்தபடியே, அவன்தான் எப்போதும் நம் கருத்தைத் தன் கருத்தாகக்கொண்டு
அநுமதித்து வீற்றிருப்பவன் அல்லவா?
13. கண்டுகொண்டு வீற்றிருந்தான் - ‘உபதிருஷ்டா’
என்று கீதாசார்யன் வர்ணித்தபடியே, அவன் நித்ய ஸாக்ஷியாக நம்முள்ளே வீற்றிருப்பவன் அல்லவா?
14. கருத்தையுற கண்டுகொண்டு வீற்றிருந்தான் - அவன்தான்
எல்லோருள்ளேயும் எப்போதும் வீற்றிருப்பவன் என்றாலும் தேஹாதிகளுடன் ஆன்மா ஒன்றி நிற்கும்போது,
அவனை நாம் அறிவதில்லை; நம்மையும் நாம் அறிவதில்லை.
15. புகுந்து வீற்றிருந்தான் - தேஹாதிகளிலிருந்து
ஆன்மாவைப் பிரித்தெடுத்தவாறே, எம்பெருமான் வீற்றிருந்த அற்புதக் கோலம் கண்ட ஆழ்வார்,
அன்றுதான் உள்ளே அவன் புகுந்ததாய் பாசுரமிடுகிறார்.
16. வியந்து இருத்தும் - தாகத்துடன் இருப்பான் ஒருவன்
‘தண்ணீர்’ என்று ஒருமுறைக் கூப்பிட்ட மாத்திரத்திலே நீர் எடுத்துவரச் சித்தமாக இன்னொருவன்
இருக்கையிலே, அவன் நீர் எடுத்துக் கொண்டுவரும் வரையிலும் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று இவன்
தாகம் பொறாமல் கூக்குரலிட்டால், கொண்டுவருபவனும் வியந்து ஓடோடி வருவான் அல்லவா?
17. வியந்து இருத்தும் - எம்பெருமான் காலந்தாழ்த்தாது
திருவடிப்பேற்றினை அளிக்க வேண்டி ஆழ்வாரின் ஆர்த்தி கரைபுரண்டு ஓடியது.
18. வியந்து இருத்தும் - ஸம்ஸாரிகள் பெருகி நிற்கும்
தேசத்திலே இப்படி ஒருவரைப் பெறுவதே என்று எம்பெருமான் வியந்து பதறி ஓடி வந்து அருளும்படி
அல்லவோ ஆழ்வாரின் ஆர்த்தி இருப்பது?
19. அழைத்தேற்கு - தாயிடம் பால் வேண்டும் குழந்தை,
தரையில் புரண்டு கதறி, கைகளையும் கால்களையும் உதைத்துக்கொண்டு வீறிட்டு அழுவது போல்
அல்லவா ஆழ்வாருடைய கூப்பாடு இருப்பது?
20. பலநாள் அழைத்தேற்கு - வைகுண்டம் எட்டும்வரை
ஆழ்வாருடைய கூப்பாடு நிற்பதில்லையே!
21. இப்பாசுரத்தின் திரண்ட கருத்தாவது, அநுமதிப்பவனாகவும்
ஸாக்ஷியாகவும் நம் ஆன்மாவினுள் விளங்கும் கூடஸ்தனே திருவடிகள். அந்த கூடஸ்தன் என்றும்
எப்போதும் புத்திக்கு அநுபவமாவதே திருவடிப்பேறு.
22. இரண்டாம் பாசுரம்:
இருந்தான் கண்டுகொண்
டெனதேழை நெஞ்சாளும்
திருந்தாத ஓரைவ ரைத்தேய்ந்
தறமன்னிப்
பெருந்தாள் களிற்றுக்
கருள்செய்த பெருமான்
தருந்தான் அருள்தான்
இனியான் அறியேனே.
23. இரண்டாம் பாசுரத்தின் பொருளாவது: என்னுடைய பரிதாபத்திற்குரிய
நெஞ்சினை அடிமை கொண்டு இருக்கின்ற, திருந்தமாட்டாத ஒப்பற்ற ஐந்து புலன்களும் அழிந்துபோம்படி,
என்னுள் நிலைபெற்று நின்று என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான். பருத்த கால்களை உடைய
கஜேந்திரனுக்கு அருள்செய்த எம்பெருமானும் இதற்குமேல் என்ன திருவருள் எனக்குச் செய்துவிட
முடியும்? நான் அறியேன்.
24. திருவடிப்பேற்றின் முதல் பயனை ஆழ்வார் பாசுரமிடுகிறார்.
25. ஐவரைத் தேய்ந்து அற மன்னி இருந்தான் - புலன்களிலிருந்து
என் ஆன்மாவைப் பிரித்தெடுத்து புலன்களின் கொடுங்கோலாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தான்.
26. பெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான்
- அன்று ஒரு முதலையின் வாய் பட்டு கால் நோவுற்றுத் துடித்த கஜேந்திரனின் பிராணனைக்
காத்த எம்பெருமான், இன்று ஐந்து முதலைகளின் வாய் பட்டு நெஞ்சம் நோவுற்றுத் துடித்த
என் ஆன்மாவைக் காப்பாற்றி அருளினான்.
27. திருந்தாத ஐவர் - விருப்பு-வெறுப்புச் சுழலில்
சிக்குண்டு, தாம் சிக்குண்டோம் என்றும் உணராத அறிவில்லாத ஐம்புலன்கள்.
28. ஏழை நெஞ்சு - புலன்களைத் தான் ஆள உரிமை உடையவனாய்
இருக்க, புலன்களிடம் அடிமைப்பட்டு நிற்கும் நெஞ்சம்.
29. ஏழை நெஞ்சாளும் ஐவர் - மன்னவன் விருப்பத்தை
தளபதிகள் செயல்படுத்துவது போய், தளபதிகளின் விருப்பத்தை மன்னவன் ஆணையாய் இட வேண்டிய
நிர்ப்பந்தம்.
30. அருள்தான் இனியான் அறியேனே - திருவடிப்பேற்றுக்கு
இணையான வேறு பேறு ஏதும் என் அறிவுக்குப் புலப்படவில்லை. ஏன்? என்னில், புலன்களிலிருந்து
நெஞ்சை விடுவித்த இந்தப் பயன் ஒன்று போதாதா?
31. இப்பாசுரத்தின் திரண்ட கருத்தாவது, திருவடிப்பேறு
பெற்றவாறே, புலன்களின் தாக்கத்திலிருந்து நெஞ்சம் விடுதலை பெறும்.
32. மூன்றாம் பாசுரம்:
அருள்தான் இனியான் அறியேன்
அவனென்னுள்
இருள்தான் அறவீற் றிருந்தான்
இதுவல்லால்
பொருள்தான் எனில்மூ வுலகும்
பொருளல்ல
மருள்தான் ஈதோ? மாயமயக்
குமயக்கே.
33. மூன்றாம் பாசுரத்தின் பொருளாவது: எம்பெருமான்
என்னுடைய அஞ்ஞானம் நீங்கும்படி என்னுள் வீற்றிருந்தான். மூவுலகையும் தனது உடைமையாகக்
கொண்டு தன் செங்கோல் செல்லும்படி அங்கே வீற்றிருப்பதை விடவும் விரும்பி என்னுள் வீற்றிருந்தான்.
இதற்குமேல் அவன் என்ன திருவருள் எனக்குச் செய்துவிட முடியும்? நான் அறியேன். எனக்குக்
கிடைத்த இப்பேறு நிஜந்தானா? ஒருவேளை மாயன் தன் மாயையாலே என்னை மயக்குகின்றானா?
34. திருவடிப்பேற்றின் இரண்டாவது பயனை ஆழ்வார் பாசுரமிடுகிறார்.
35. இருள் - ‘தேஹாதிகளே நான்’ என்ற அஹங்கார அஞ்ஞானம்.
36. இருள் - ஸம்ஸாரிகளின் ஆன்மா தேஹாதிகளில் புதைந்து
தேய்ந்து தீய்ந்து கிடப்பதால், அவர்கள் சுய முயற்சியால் எவ்வளவு காலம் முயன்றாலும்
தங்களை தேஹாதிகளிலிருந்து வேறுபட்ட ஆன்மாவாகக் காண இயலாது.
37. இருள்தான் அற வீற்றிருந்தான் - திருவடிகள் ஆன்மாவை
ஆட்கொண்டவாறே, ஆன்மா தன்னடையே தேஹாதிகளிலிருந்து பிரிந்து நின்று, தான் யாரென்று அறிகிறது.
38. மருள்தான் ஈதோ? - இது எப்படிப்பட்ட பேறு? இது
எனக்குக் கிடைத்தது நிஜந்தானா?
39. இப்பாசுரத்தின் திரண்ட கருத்தாவது, திருவடிப்பேறு
பெற்றவாறே, ஆன்மா, தன்னை அறிகிறது.
40. நான்காம் பாசுரம்:
மாய மயக்குமயக் கான்என்னை
வஞ்சித்து
ஆயன் அமரர்க் கரியே றெனதம்மான்
தூய சுடர்ச்சோதி தனதென்னுள்
வைத்தான்
தேயம் திகழுந்தன் திருவருள்
செய்தே.
41. நான்காம் பாசுரத்தின் பொருளாவது: ஆயர் குலத்தில்
அவதரித்த தேவர்கள் தலைவனான எம்பெருமான் ஒளிமிக்க தன் திருவருளை எனக்குச் செய்து தன்னுடைய
பரிசுத்தமான பேரொளிப்பிழம்பை என்னுள் வைத்தான். ஆதலால், இனி தனக்கு அதீனமான மாயையால்
என்னை ஏமாற்றி மயக்கமாட்டான்.
42. திருவடிப்பேற்றின் மூன்றாவது பயனை ஆழ்வார் பாசுரமிடுகிறார்.
43. ஜோதி - ஜடங்களான தேஹாதிகளுக்கு உயிர்த்தன்மையை
அளிப்பவன்.
44. சுடர் ஜோதி - தேஹாதிகளுக்கு மட்டுமல்லாது ஆன்மாவுக்கும்
உயிர்த்தன்மையை அளிப்பவன்.
45. தூய சுடர் ஜோதி - தனக்கு உயிர்த்தன்மையை அளிக்கும்
யாதொருவனும் இல்லாது பிரகிருதிக்கு அப்பாற்பட்டு நிற்கும் முதல்தனிவித்து.
46. தனதென்னுள் வைத்தான் - தேஹாதிகளே நான் என்று
கிடந்த என் ஆன்மாவை தனதாக்கிக்கொண்டு, பின், அதனுள் புகுந்தான்.
47. என்னை வஞ்சித்து மாய மயக்கு மயக்கான் - இனியும்
ஜடமான தேஹாதிகளை உயிருள்ளவை என்று மயங்கமாட்டேன்.
48. ஆயன் அமரர்க்கு அரியேறு எனது அம்மான் - தேவர்கள்
தலைவனாய் நிற்கும் என் தலைவன் இப்படி என்னுள் வந்து புகுந்து நிற்பானா? என்னில், அவன்தான்
ஆயர் குலத்தில் அவதரித்து உரலில் கட்டுண்டு கிடக்கும் ஸௌசீல்ய குணவான் ஆகையாலே, நிற்பான்.
49. தேயம் திகழுந்தன் திருவருள் செய்து - தகுதியுள்ள
தேவர்களுக்கு அருள் செய்வதால் அவனுக்கு என்ன புகழ் கிடைக்கும்? தகுதியற்ற என்னுள் புகுந்து
நின்றதால் அல்லவா, அவன் திருவருள் தேஜஸ் பெற்றது?
50. இப்பாசுரத்தின் திரண்ட கருத்தாவது, திருவடிப்பேறு
பெற்றவாறே, தேஹாதிகளின் உயிரற்ற ஜடத்வத்தை உள்ளங்கை நெல்லிக்கனி என அநுபவத்தில் காணலாம்.
51. ஐந்தாம் பாசுரம்:
திகழுந்தன் திருவருள்
செய்துல கத்தார்
புகழும் புகழ்தான் அதுகாட்டித்
தந்தென்னுள்
திகழும் மணிக்குன்ற மொன்றே
யொத்துநின்றான்
புகழும் புகழ்மற் றெனக்குமோர்
பொருளே?
52. ஐந்தாம் பாசுரத்தின் பொருளாவது: எம்பெருமான்
ஒளிமிக்க தன் திருவருளை எனக்குச் செய்து, என்னுள்ளே ஒப்பற்ற ஒரு மணிக்குன்றம் போன்று
நின்று, உலகத்தார் என்னைப் புகழும்படி செய்தான். உலகத்தார் என்னைப் புகழும் வேறு எந்த
என்னுடைய புகழும் எனக்கு இனி ஒரு பொருட்டு இல்லை.
53. திருவடிப்பேற்றின் நான்காவது பயனை ஆழ்வார் பாசுரமிடுகிறார்.
54. உலகத்தார் புகழும் புகழ் - நிலைதடுமாறி எண்ணமும்
சொல்லும் செயலும் ஸ்தம்பித்து நிற்கக்கூடிய சூழ்நிலை வரும்போதும், திருவடிப்பேறு பெற்றவன்,
நிலை தடுமாறாமல், தெளிவாக சிந்தித்து பேசி செயல்படக்கூடியவன் ஆகையாலே, அவனுடைய இந்த
அற்புத நிலையைக்கண்டு உலகத்தோர் அதிசயித்துப் புகழ்வர்.
55. புகழ்தான் அது காட்டித் தந்து - இது எப்படி
சாத்தியமாயிற்று? என்னில், அது உள்ளிருக்கும் ஒருவனால் சாத்தியமாயிற்று.
56. என்னுள் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
- என் நெஞ்சின் ஏமாற்றமோ, மனத்தின் கவலையோ புலன்களின் விருப்பு-வெறுப்போ சிறிதும் தன்னைத்
தாக்காத வண்ணம், சுழற்றி அடிக்கும் சூறாவளிக்கும் சற்றும் அசையாது நிற்கும் குன்று
போல கூடஸ்தனாய் எம்பெருமான் என்னுள்ளே நின்றான்.
57. என்னுள் திகழும் குன்றம் - என் ஆன்மாவை ஆட்கொண்டு
அதனுள் திகழும் குன்றம். இதுவரையில் நெஞ்சையும் மனத்தையும் புலன்களையும் பற்றிக்கொண்டு
திரிந்த என் ஆன்மா, அவைகளுடன் சேர்ந்து மூவாசைச் சுழலில் சிக்கிச் சின்னாபின்னமாகி
நின்றது. தற்போது அவைகளிடமிருந்து பிரிந்து திருவடிக்குன்றத்தை ஆவிக்கட்டிக்கொண்டு
அசையாது அயராது நின்றது.
58. மணிக்குன்றம் - ஒளி தரும் குன்றம். தேஹாதிகளுக்கும்
ஆன்மாவுக்கும் உயிர்த்தன்மை தரும் கூடஸ்தன். ஆன்ம ஒளியைப் பிரித்தெடுத்தவாறே, தேஹாதிகளின்
சஞ்சல வேகமும் குறைந்துபோகும்.
59. இப்பாசுரத்தின் திரண்ட கருத்தாவது, திருவடிப்பேறு
பெற்றவாறே, தேஹாதிகளின் தாக்கத்திலிருந்து விடுபட்டு தான் செயல்படுவதை, தானும் பிறரும்
அநுபவத்தில் காணலாம்.
60. ஆறாம் பாசுரம்:
பொருள்மற் றெனக்குமோர்
பொருள்தன்னில் சீர்க்கத்
தருமேல்,பின் யார்க்கவன்
தன்னைக் கொடுக்கும்?
கருமா ணிக்கக் குன்றத்துத்
தாமரைபோல்
திருமார்பு கால்கண்கை
செவ்வாய் உந்தியானே.
61. ஆறாம் பாசுரத்தின் பொருளாவது: தன்னிலும் சிறந்ததென்று
வேறு ஒரு பேற்றினை எம்பெருமான் எனக்குத் தந்தானாகில், கரிய மாணிக்கமலையில் தாமரைகள்
மலர்ந்து நிற்பதுபோல் திருமார்பு திருப்பாதங்கள் திருக்கண்கள் திருக்கைகள் திருச்செவ்வாய்
திருவுந்தி பொலியும் அவன், தன்னை பின்னர் யாருக்குக் கொடுப்பான்?
62. இதுவரையில் திருவடிப்பேற்றின் பயன்களைச் சொல்லிவந்த
ஆழ்வார், மேல் ஐந்து பாசுரங்களில் பேற்றினைக் கொண்டாடுகிறார்.
63. கீழே நான்கு பாசுரங்களில் சொல்லப்பட்ட, எம்பெருமான்
தன்னுள் நிற்பதால் விளைந்த பயன்களைவிடவும், திருவடிப்பேற்றையே ஸ்வயம்பிரயோஜனமாகக் கொண்டாடுவார்
ஒருவர் அல்லவா ஆழ்வார்?
64. ‘ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே’ என்று மகிழும்
பெருமிதச் சிங்கம் அல்லவா ஆழ்வார்?
65. ஆகவே, கீழே சொன்ன நான்கு பயன்கள் உண்டு என்றாலும்
அவை பிரசாங்கிகமாக வந்தவை அத்தனையன்றோ?
66. மேல் வரும் ஐந்து பாசுரங்களிலும் திருவடிகளின்
மகத்துவத்தை விளக்கி, அத்தகைய திருவடிகளைத் தான் அடைந்ததாக ஆழ்வார் கொண்டாடுகிறார்.
67. இப்பாசுரத்தில் ஸம்ஸாரிகள் நடையாடும் தேசத்தில்
திருவடிகளை ஸ்வயம்பிரயோஜனமாக விரும்புவார் ஆர்? என்று ஆழ்வார் ஸாத்வீக கர்வத்துடன்
வினவுகிறார்.
68. தாமரைபோல் திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியான்
- ஆயிரக்கணக்கான தலைகளும் ஆயிரக்கணக்கான கண்களும் ஆயிரக்கணக்கான கால்களும் கொண்ட பரபுருஷன்
என்று வேதம் கூவியபடியே, பிரபஞ்சம் எங்கும் வியாபித்து நிற்கும் எம்பெருமான்.
69. தாமரைபோல் - தாமரையில் கணக்கற்ற இதழ்கள் இருப்பதுபோல.
70. கருமாணிக்கக் குன்றத்துத் தாமரை - பிரபஞ்சம்
எங்கும் வியாபித்து நிற்கும் பரபுருஷனுடைய திருவடிகளான கூடஸ்தனை தன்னுள் கொள்ள எந்த
ஸம்ஸாரி விரும்புவான்?
71. இப்பாசுரத்தின் திரண்ட கருத்தாவது, திருவடிகளே
பிரபஞ்சத்தின் உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் தரித்து நிற்கிறது.
72. ஏழாம் பாசுரம்:
செவ்வாயுந்தி வெண்பல்
சுடர்க்குழை தன்னோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில்முன்
வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோ டெனதுள்ளத்
திருந்த
அவ்வாய் அன்றியான் அறியேன்
மற்றருளே.
73. ஏழாம் பாசுரத்தின் பொருளாவது: செவ்வாய் உந்தி
வெண்பற்கள் குண்டலங்கள் முதலான எம்பெருமானின் அவயவ சோபையும் அணிகலன்களின் ஒளியும் ஒன்றையொன்று
விஞ்சி நிற்க, செவ்வாயில் விளங்கும் முறுவலோடு உகந்து என்னுள்ளத்திருந்த எம்பெருமானுடைய
இந்த அருளை விஞ்சிய அவனுடைய மற்றுமோர் அருளை நான் அறியேன்.
74. சுடர் - உயிர்த்தன்மையின் ஊற்றுக்கண்.
75. முறுவலோடு இருந்த - உள்ளிருக்கும் பிரஹ்மானந்தம்
பொங்கி வழிந்தோட இருந்த எம்பெருமான்.
76. இப்பாசுரத்தின் பொருளாவது, திருவடிகளுக்குள்
புருஷோத்தமனின் சிதானந்த ஸ்வரூபம் விளங்குகிறது.
77. எட்டாம் பாசுரம்:
அறியேன் மற்றருள் என்னையாளும்
பிரானார்
வெறிதே அருள்செய்வர்
செய்வார்கட் குகந்து
சிறியே னுடைச்சிந்தை
யுள்மூ வுலகும்தம்
நெறியா வயிற்றிற்கொண்டு
நின்றொழிந் தாரே.
78. எட்டாம் பாசுரத்தின் பொருளாவது: எம்பெருமான்
தன் உடைமையான மூவுலகங்களையும் முறைப்படித் தன் வயிற்றுள்ளே வைத்துக்கொண்டு சிறியேனுடைய
சிந்தையில் நின்றருளினான். அவனுடைய இந்த அருளை விஞ்சிய அவனுடைய மற்றுமோர் அருளை நான்
அறியேன். எம்பெருமான் தான் அருள்செய்ய நினைத்தவர்களுக்கு யாதொரு காரணமும் இல்லாமலே
உகந்து அருள்செய்வான்.
79. திருவடிப்பேற்றைத் திருவடிகளின் திருவருளாலேயே
தாம் பெற்றதை இப்பாசுரத்தில் ஆழ்வார் வெளியிடுகிறார்.
80. வெறிதே அருள்செய்வர் - யாதொரு காரணமும் இல்லாமலே
எம்பெருமான் திருவடிப்பேற்றை நல்குவான்.
81. திருவடி ஞானம் பெற்றவர்க்கு அல்லவா திருவடிப்பேறு
கிட்டும்? என்னில், திருவடி ஞானமும் எம்பெருமான் திருவருளால் கிட்டுவதே.
82. திருவடி யோகம் பெற்றவர்க்கு அல்லவா திருவடி
ஞானம் கிட்டும்? என்னில், திருவடி யோகமும் எம்பிராட்டியின் திருவருளால் கிட்டுவதே.
83. எம்பெருமானை எப்போதும் புத்தியில் நிலைநிறுத்தியவர்க்கல்லவா
திருவடி யோகம் கிட்டும்? என்னில், அதுவும் குருநாதரின் திருவருளால் கிட்டுவதே.
84. குருநாதரும் எம்பிராட்டியும், எம்பெருமான் திருவுள்ளம்
பின்பற்றியே திருவருள் செய்வதால், எம்பெருமான் திருவடிப்பேற்றை வழங்குவதற்கு அவனுடைய
திருவருளைத் தவிர வேறு யாதொரு காரணமும் இல்லையாயிற்று.
85. மூவுலகும் - பிரபஞ்சத்தின் எல்லா உயிருள்ளவை
உயிரற்றவைகளின் ஸ்தூல சூக்ஷ்ம காரண சரீரங்கள்.
86. மூவுலகும் தம் வயிற்றிற்கொண்டு நின்றொழிந்தார்
- மூவுலகையும் தாங்கிநிற்கும் புருஷோத்தமன் எவனோ, அவனே என்னுள்ளே விளங்குகிறான்.
87. இப்பாசுரத்தின் திரண்ட கருத்தாவது, திருவடிகளின்
உள்ளே விளங்கும் புருஷோத்தமனே மூவுலகையும் தரித்து நிற்கிறான்.
88. ஒன்பதாம் பாசுரம்:
வயிற்றிற்கொண்டு நின்றொழிந்
தாரும் எவரும்
வயிற்றிற்கொண்டு நின்றொரு
மூவுல கும்தம்
வயிற்றிற்கொண்டு நின்றவண்ணம்
நின்ற மாலை
வயிற்றிற்கொண்டு மன்ன
வைத்தேன் மதியாலே.
89. ஒன்பதாம் பாசுரத்தின் பொருளாவது: ஸர்வ ஜீவராசிகளையும்
தரித்து நிற்கும் தேவனையும், அவனால் அங்ஙனம் தரிக்கப்பட்ட ஸர்வ ஜீவராசிகளையும் தான்
தரித்துக்கொண்டும், அவர்களோடுகூட மூவுலகங்களையும் தான் தரித்துக்கொண்டும் நின்ற எம்பெருமானை,
அவனுடைய திருவடி ஞானத்தால் என்னுள் நிலைபெற வைத்தேன்.
90. மாலை மன்ன வைத்தேன் மதியாலே - திருவடிகளையே
உபாயமாகக்கொண்டு திருவடிகளை அடைந்தேன். திருவடி ஞானம் அடைந்தவாறே அன்றோ சரணாகதி ஸித்திப்பது?
91. வயிற்றிற்கொண்டு நின்றொழிந்தார் - ஸர்வ ஜீவராசிகளையும்
தரித்து நிற்கும் கூடஸ்தன்.
92. வயிற்றிற்கொண்டு நின்றவண்ணம் நின்ற மால் - கூடஸ்தனையும்
மூவுலகங்களையும் தரித்து நிற்கும் புருஷோத்தமன்.
93. இப்பாசுரத்தின் திரண்ட கருத்தாவது, திருவடிகளின்
உள்ளே விளங்கும் புருஷோத்தமனே ஸர்வ ஜீவராசிகளையும் மூவுலகையும் தரித்து நிற்கிறான்.
94. பத்தாம் பாசுரம்:
வைத்தேன் மதியால் எனதுள்ளத்
தகத்தே
எய்த்தே ஒழிவேனல்லேன்
என்றும் எப்போதும்
மொய்த்தேய் திரைமோது
தண்பாற் கடலுளால்
பைத்தேய் சுடர்ப்பாம்
பணைநம் பரனையே.
95. பத்தாம் பாசுரத்தின் பொருளாவது: செறிந்து பொருந்திய
அலைகள் மோதுகின்ற குளிர்ந்த திருப்பாற்கடலில், படத்தையுடைய ஒளி பொருந்திய பாம்புப்
படுக்கையில் அறிதுயில் கொள்ளும் நம்பெருமானை, அவனுடைய திருவடி ஞானத்தால் எனது உள்ளத்தின்
உள்ளே வைத்தேன். அவனை என்றும் எப்போதும் பிரிந்து தளர்வேன் அல்லேன்.
96. எய்த்தே ஒழிவேனல்லேன் என்றும் எப்போதும் - திருவடிப்பேறு
ஆன்மாவுக்கு நிரந்தரமானது.
97. பாம்பணை நம் பரன் - திருப்பாற்கடலில் பாம்பணையில்
பள்ளிகொண்டிருப்பவன் எவனோ அவனே என்னுள் விளங்குகிறான்.
98. இப்பாசுரத்தின் திரண்ட கருத்தாவது, திருவடிகளே
திருப்பாற்கடலில் பாம்பணையில் பள்ளிகொண்டு கிடக்கிறது.
99. இறுதிப் பாசுரம்:
சுடர்ப்பாம் பணைநம் பரனைத்
திருமாலை
அடிசேர் வகைவண் குருகூர்ச்
சடகோபன்
முடிப்பான் சொன்னவாயி
ரத்திப்பத்தும் சன்மம்
விட,தேய்ந் தறநோக்குந்தன்
கண்கள் சிவந்தே.
100. இறுதியாக இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயன் சொல்லி
ஆழ்வார் முடிக்கிறார். இப்பாசுரத்தின் பொருளாவது: படத்தையுடைய ஒளி பொருந்திய பாம்புப்
படுக்கையில் அறிதுயில் கொள்ளும் நம்பெருமான் திருமகள் கேள்வன் திருவடி சேரும் வகையினை,
வளப்பம் பொருந்திய திருக்குருகூரில் பிறந்த சடகோபர் என்னும் நம்மாழ்வார் அருளிச்செய்த
ஆயிரம் திருப்பாசுரங்களில், முடிக்குமாறு அருளிச்செய்த இப்பத்து திருப்பாசுரங்களும்
கற்றோர் தம் பிறவியானது அடியோடு தேய்ந்து முடியும்படி எம்பெருமான் தன் திருக்கண்கள்
சிவந்து நோக்கும்.
101. திருமாலை - திருமகள் கேள்வனாக உபய விபூதிகளையும்
ஆளும் பரபுருஷனை.
102. திருமாலை அடிசேர்வகை - அந்த பரபுருஷனின் திருவடிகளை
இம்மையிலேயே சேரும் மார்க்கத்தை அதன் படிநிலைகளோடு ஒன்று விடாமல் வரிசைக்கிரமமாக ஆற்றொழுக்குப்போல்
அந்தாதியிட்டவர் அல்லவா ஆழ்வார்?
103. சுடர்ப்பாம்பணை நம்பரனை - அந்த பரபுருஷனின் திருவடிகளே
திருப்பாற்கடலில் திருவனந்தனிடம் பள்ளிகொண்டு கிடக்கிறது.
104. சன்மம் தேய்ந்து அற - பிரகிருதியின் தாக்கத்தால்
கர்மங் காரணமாக வரும் பிறவி எடுக்கவேண்டாதபடி.
105. சன்மம் தேய்ந்து அற நோக்கும் - திருவடிகளே நோக்கியருளும்.
106. கண்கள் சிவந்து நோக்கும் - திருந்தாத தேஹாதிகளை
அடக்கும்பொருட்டு நோக்கியருளும்.
107. முக்திப் பெருநெறியின் படிநிலைகளை ஆற்றொழுக்குப்போல்
மிகவும் அற்புதமாகவும் அழகாகவும் வரிசைக்கிரம அந்தாதியாக ஒப்பில்லாத திருவாய்மொழி செய்தருளிய
நம்மாழ்வாருக்கு அடியேனுடைய நமஸ்காரம் உரித்தாகட்டும்.
108. எட்டாம் பத்து ஏழாந் திருவாய்மொழியில் நம்மாழ்வார்
அருளிச்செய்த திருவடிப்பேறு அநுபூதி, அடியேனுக்கு புத்தியில் பிரகாசிக்கும் பொருட்டு,
அடியேனுடைய குருநாதர் திருவடிகளை தஞ்சமாக சரணமடைகிறேன்.
No comments:
Post a Comment