SUN

Gajendra Moksham


பிரார்த்தனை தீபம்


1.         இரண்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழியில் நம்மாழ்வார் அருளிச்செய்த திருவடிப்பேறு பிரார்த்தனை, அடியேனுக்கு புத்தியில் பிரகாசிக்கும் பொருட்டு, அடியேனுடைய குருநாதர் திருவடிகளை தஞ்சமாக சரணமடைகிறேன்.

2.         முக்திப் பெருநெறியின் படிநிலைகளை ஆற்றொழுக்குப்போல் மிகவும் அற்புதமாகவும் அழகாகவும் வரிசைக்கிரம அந்தாதியாக ஒப்பில்லாத திருவாய்மொழி செய்தருளிய நம்மாழ்வாருக்கு அடியேனுடைய நமஸ்காரம் உரித்தாகட்டும்.

3.         முதல் பாசுரம்:

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்;நின்
செம்மா பாதபற் புத்தலை சேர்த்து;ஒல்லை
கைம்மாத் துன்பம் கடிந்த பிரானே!
அம்மா! அடியேன் வேண்டுவது இஃதே.

4.         முதல் பாசுரத்தின் பொருளாவது: யானையின் துன்பத்தை விரைந்து போக்கியருளிய பெருமானே! என் ஸ்வாமியே! எத்தகைய பெரிய முக்தியின் தன்மையைப் பற்றியும் பேசோம். நின் சிவந்த பெருமை பொருந்திய திருவடித்தாமரைகளை என் தலைமீது விரைவில் சேர்த்தருளவேணும்; அடியேன் விரும்புவது இப்பேறே ஆகும்.

5.         வீடு - ‘ஆழ்வீர், மமகாரம் நீங்கப்பெற்று வாழும் ஸாலோக்யம் ஸாமீப்யம் இவற்றுள் எந்த முக்தி வேணும்?’ என்று எம்பெருமான் கேட்க, ‘இரண்டும் வேண்டா’ என்றார்.

6.         மாவீடு - ‘சரி, அஹங்காரமும் நீங்கப்பெற்று வாழும் ஸாரூபம் ஸாயுஜ்யம் இவற்றுள் எந்த முக்தி வேணும்?’ என்று எம்பெருமான் கேட்க, ‘நாலும் வேண்டா’ என்றார்.

7.         எம்மா வீட்டுத் திறமும் செப்பம் - ‘அடியேன் வேண்டுவது முக்திப்பேறு அன்று; தேவாரீரின் திருவடிகளை.’

8.         ஒல்லை - எம்பெருமானும், ‘அப்படியே செய்கிறோம்’ என்ன, ஆழ்வாரும், ‘விரைந்து செய்தருளவேணும் - தடாகத்தில் முதலை வாய்ப்பட்டுத் தவித்த கஜேந்திரனுக்கு பெரிய திருவடி மீதேறி ஓடிவந்து அருளினாற்போலே’ என்கிறார்.

9.         ஒல்லை - எம்பெருமானும், ‘அப்படியோர் ஆபத்து உமக்கு நேர்ந்ததோ?’ என்ன, ஆழ்வாரும், ‘அங்கு முதலை ஒன்று; இங்கே ஐந்து. அங்கு ஆயிரம் தெய்வ ஆண்டு; இங்கே அநாதி காலம். அங்கு சிறு குழி; இங்கே ஸம்ஸாரம் என்னும் பெருங்கடல். அங்கு சரீர நாசம்; இங்கே ஆத்ம நாசம். ஆன பின்னே, இருவருக்கும் உள்ள வாசி பாராய்’ என்றார்.

10.       இரண்டாம் பாசுரம்:

இஃதே யானுன்னைக் கொள்வதெஞ் ஞான்றும்;என்
மைதோய் சோதி மணிவண்ண! எந்தாய்!
எய்தா நின்கழல் யானெய்த ஞானக்
கைதா; காலக் கழிவுசெய் யேலே.

11.       இரண்டாம் பாசுரத்தின் பொருளாவது: கருமை படிந்த ஒளியை உடைய மாணிக்கம் போன்ற நிறத்தை உடைய என் தந்தையே! எப்பொழுதும் அடியேன் தேவாரீரிடத்தில் கேட்பது இந்தத் திருவடிப்பேறே. தன் முயற்சியால் ஒருபோதும் அடைய இயலாத தேவாரீருடைய திருவடிகளை, அடியேன் பெறும்படிக்கு ஞானமென்னும் கை தந்து உதவ வேணும்; கால நீட்டிப்பு செய்யாதே.

12.       இஃதே - முக்தியில் ஒன்றைக் கேட்டால் இம்மை கழிந்தவுடன் மறுமையில் தரலாம் என எண்ணியிருந்த எம்பெருமானும், ‘நமது திருவடியும் வேறு என்னமும் வேணும்?’ என்ன, ‘இஃதே’ என்றார் ஆழ்வார் உறுதியுடன்.

13.       ஞானக் கை தா - இம்மையிலேயே தன்னைக் கேட்ட ஆழ்வாரிடம் எம்பெருமான், ‘ஆனால், அதற்கு உம் ஆன்மாவை உம் தேஹத்திலிருந்து பிரித்து அறியும்படிக்கு திருவடி ஞானம் பெற்றிருக்க வேணுமே’ என்றான். ஆழ்வாரும், ‘திருவடி ஞானத்தையும் தேவாரீரே அடியேனுக்குத் தந்தருள வேணும்’ என்றார்.

14.       எய்தா நின்கழல் - எப்படி என்னுடைய முயற்சியால் ஒருபோதும் உன் திருவடிகளை அடைய இயலாதோ, அதுபோல, என்னுடைய முயற்சியால் ஒருபோதும் திருவடி ஞானத்தைப் பெற இயலாது.

15.       காலக் கழிவு செய்யேல் - சரீரம் முடியும் வரையில் காத்திருக்க இயலாது.

16.       மூன்றாம் பாசுரம்:

செய்யேல் தீவினை என்றருள் செய்யுமென்
கையார் சக்கரக் கண்ண பிரானே!
அய்யார் கண்டம் அடைக்கிலும் நின்கழல்
எய்யா தேத்த அருள்செய் எனக்கே.

17.       மூன்றாம் பாசுரத்தின் பொருளாவது: ‘பாவங்களைச் செய்யாதே’ என்று திருவருளைச் செய்கின்ற திருவாழியைக் கையிலே தாங்கியிருக்கும் கண்ணபிரானே! சளியானது தொண்டையை அடைக்கின்ற அக்காலத்திலும் தேவாரீருடைய திருவடிகளை மறவாது ஏத்தும்படிக்கு அடியேனுக்கு அருள்செய்யவேணும்.

18.       இம்மையிலேயே பேறு கேட்கும் ஆழ்வார், பேற்றுக்குத் தேவையான ஞானத்தையும் நம்மிடமே கேட்பதே என வியந்த எம்பெருமானும், ‘திருவடிஞானம் தரவேண்டுமாகில், பாவங்கள் ஆன்மாவைத் தொடாதவாறு, தேஹத்திலிருந்து ஆன்மாவை வேறுபடுத்தி அறியும்படிக்கு திருவடி யோகம் பெற்றிருக்க வேணுமே’ என்றான்.

19.       ‘திருவடி யோகத்தையும் தேவாரீரே அடியேனுக்குத் தந்தருள வேணும்’ என்றார் ஆழ்வார்.

20.       அருள்செய்யும் - ‘செய்யேல் தீவினை’ என்று ஜடமான சாஸ்திரங்களைப் போலே உபதேசமாத்திரமாய் நிற்காதே, தீவினை ஆன்மாவில் ஒட்டாதபடிக்கு உடன் நிலைநின்று அருள் செய்யும் எம்பெருமான்.

21.       அருள்செய்யும் - திருவடி யோகத்தை அருள நீ சித்தமாய் இருக்கும்போது எனக்கு என்ன கவலை? என் அநுமதி மாத்திரமே அல்லவா நீ வேண்டுவது?

22.       கண்ணபிரான் - மூவுலகங்களையும் ஆளும் பரமன் என்னுள் வந்து நின்று என் பாவங்களின் நின்றும் என் ஆன்மாவைக் காத்தருளும் தொழில் செய்வானோ? என்னில், அவன்தான் தன் மேன்மையை ஒரு பொருளாக மதியாதே, ஆயர் குலத்தில் வந்து பிறந்த ஸௌசீல்ய குணவான் அல்லவா?

23.       கண்ணபிரான் - நாம் அவனிடம் அடிமையை வேண்டி நிற்க, அவனோ தமக்கடிமை வேண்டும் தாமோதரனாய் இருப்பான் ஒருவன் அல்லவா?

24.       சக்கரக் கண்ணபிரான் - என் வினைகளினின்றும் என் ஆன்மாவைக் காக்க திருவாழியும் கையுமாய் என் அநுமதியை எதிர்பார்த்து சர்வசக்தியான என் ஸ்வாமி நீ நிற்க, என்னை ரக்ஷிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வதோ?

25.       அருள்செய் - நீயே அடியேனை ரக்ஷித்து அருள வேணும்.

26.       அய்யார் கண்டம் அடைக்கிலும் அருள்செய் - சரீரம் முடியுந் தறுவாயிலும் சரீரம் முடியும் வரையிலும் ரக்ஷித்து அருள வேணும்.

27.       நான்காம் பாசுரம்:

எனக்கே ஆட்செய்எக் காலத்தும் என்றென்
மனக்கே வந்திடை வீடின்றி மன்னித்
தனக்கே யாக எனைக்கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.

28.       நான்காம் பாசுரத்தின் பொருளாவது: ‘எல்லா காலங்களிலும் எனக்கே அடிமை செய்வாய்’ என்று அடியேனுடைய மனத்தில் வந்து பிரிதலின்றி நிலைபெற்று நின்று, தனக்கே அடியேன் உரியவனாம்படி ஏற்றுக்கொள்ளும் இதுவே, எம்பெருமானிடம் அடியேன் விரும்பும் விண்ணப்பம்.

29.       திருவடிப்பேற்றைத் திருவடிகளின் மூலமாகவே தருவதற்குத் தேவையான ஞானத்தையும் யோகத்தையும் உண்டாக்கித் தர ஆழ்வாரின் ஒப்புதலைப் பெற்றாகிவிட்டது. இன்னும் ஒரே ஒரு ஒப்புதலையும் பெற வேண்டி, எம்பெருமானும், ‘மனம் முழுவதும் நான் நிறைந்திருக்கப்பண்ணு என்று அர்ஜுனனுக்கு நாம் கீதையில் உபதேசித்தபடிக்கே, நீரும் நம்மை என்றும் புத்தியில் நினைந்திருந்தீரேயானால், நாமும் உமக்கு யோகமும் ஞானமும் அருள்வோம்’ என்றான்.

30.       ஆழ்வாரும் ‘இடைவீடின்றி அடியேன் மனத்தே மன்னி அருள வேணும்’ என்று தன் ஒப்புதலைப் பிரார்த்தனையாய் எம்பெருமானிடம் சமர்ப்பிக்கிறார்.

31.       தனக்கே யாக - தேஹாதிகளிலிருந்து ஆன்மாவை வேறுபடுத்தி அறியும் யோகமோ, பிரித்து அறியும் ஞானமோ இன்னும் கைவரப் பெறா நிலையில், எம்பெருமான் தனக்காக என்னைக் கொள்ளாதே, எனக்காக என்னைக் கொள்ளுமிடத்து, இந்திரியவயப்பட்டு, ஆத்ம நாசமே விளையுமாம்.

32.       ஐந்தாம் பாசுரம்:

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க; யானும்
பிறப்பில் பல்பிற விப்பெரு மானை
மறப்பொன் றின்றி என்றும் மகிழ்வனே.

33.       ஐந்தாம் பாசுரத்தின் பொருளாவது: யானும் சிறப்புடைய முக்தி என்ன, சொர்க்கம் என்ன, நரகம் என்ன, இவற்றை மரணத்துக்குப்பின் அடைந்தாலும் சரி, அடையாது போனாலும் சரி. பிறப்பெடுக்கவேண்டிய தேவையில்லாமலே பல பிறவிகளை எடுக்கவல்ல எம்பெருமானை மறதியில்லாதே எப்போதும் மகிழ்ந்து அநுபவிப்பேன்.

34.       திருவடிப்பேற்றைத் தருவதற்குத் தேவையான ஞானத்தையும் யோகத்தையும் உண்டாக்கித் தர ஆழ்வாரின் ஒப்புதலைப் பெற்றாகிவிட்டது. அந்த ஞானத்தையும் யோகத்தையும் உண்டாக்கித் தர வேண்டி ஆழ்வாரின் மனத்தில் மன்னுவதற்கும் ஆழ்வாரின் ஒப்புதலைப் பெற்றாகிவிட்டது. மேலே ஒரே ஒரு தெளிவு மாத்திரம் தேவைப்படுகிறது.

35.       திருவடிப்பேறு பெற்று ஆழ்வார் என்ன செய்ய உத்தேசிக்கிறார்? திருவடிப்பேற்றைக் கொண்டு வேறு என்ன சாதிக்க நினைக்கிறார்?

36.       ‘ஆழ்வீர்! இம்மையில் திருவடிப்பேறு தருகிறோம். மறுமையில் என்ன வேண்டும்?’ என எம்பெருமான் வினவினான்.

37.       ஆழ்வாரும், ‘ஒரு நிர்ப்பந்தம் இல்லை’ என்றார்.

38.       எம்பெருமானும், ‘பின் எதன் பொருட்டு திருவடிப்பேற்றைப் பிரார்த்தித்தீர்?’ என வினவினான்.

39.       ஆழ்வாரும், ‘அதுவே பிரயோஜனமாக’ என்றார்.

40.       வீடு சுவர்க்கம் நரகம் இறப்பில் எய்துக - முக்தர்களின் உலகமோ இந்திரலோகமோ யமலோகமோ, மறுமையில் திருவடிகளுடன் கூடி எங்கிருந்தாலும் அதில் ஒரு நிர்ப்பந்தம் இல்லை.

41.       வீடு சுவர்க்கம் நரகம் இறப்பில் எய்தற்க - இம்மூன்றுமில்லாமல் உடனே இன்னொரு பிறவி எடுக்க நேர்ந்தாலும் அதிலும் ஒரு நிர்ப்பந்தம் இல்லை. திருவடிகளுடன் கூடி நின்று இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அதில் என்ன குறை?

42.       பிறப்பில் பெருமான் - இருளான ஜடப்பிரக்ருதிக்கு அப்பாற்பட்டு நிற்கும், பிறவி எடுக்க யாதொரு கட்டாயமும் இல்லாத ஜோதி ஸ்வரூப பரபுருஷன்.

43.       பல்பிறவிப் பெருமான் - ஜீவர்களை உஜ்ஜீவிக்கும் பொருட்டு பிறவிகளை எடுக்கும் குணப்பெருங்கடல்.

44.       பல்பிறவி - ராமன் கிருஷ்ணன் போல மனித அவதாரம் மட்டுமல்லாதே, வராஹம் முதலான, கர்மங்களுக்குக் கட்டுப்பட்டுப் பிறவி எடுக்கும் ஜீவர்களும் எடுக்கப் பதறும், பிறவிகளையுங்கூட உகந்து எடுக்கும் குணப்பெருங்கடல்.

45.       பல்பிறவிப் பெருமானை என்றும் மகிழ்வனே - எம்பெருமான் தானும் உகந்து பல்பிறவி எடுத்து நிற்கும்போது, அவனுக்கு ஆட்செய்யும் அடியேன் மீண்டும் பிறவி எடுக்கத் தட்டில்லை.

46.       மறப்பொன்றின்றி என்றும் மகிழ்வனே - வைகுண்டமோ சுவர்க்கமோ நரகமோ, எங்கிருந்தால் என்ன, மீண்டும் யாதொரு பிறவி எடுத்தால்தான் என்ன, திருவடிகளோடு ஒன்றி நின்று மகிழும் இப்பேறு தொடரும் வரையில்?

47.       ஆறாம் பாசுரம்:

மகிழ்கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ்கொள் சோதி மலர்ந்த அம்மானே
மகிழ்கொள் சிந்தைசொல் செய்கை கொண்டென்றும்
மகிழ்வுற் றுன்னை வணங்க வாராயே.

48.       ஆறாம் பாசுரத்தின் பொருளாவது: ஜடப்பொருட்களாகவும் அவற்றைத் தாங்கி நிற்கும் ஜீவ சக்தியாகவும் அதனைத் தாங்கி நிற்கும் மகிழ்ச்சி பொருந்திய தேவனாகவும் அந்த தேவனைத் தாங்கி நிற்கும் மகிழ்ச்சியைத் தனதகத்தே கொண்ட ஜோதியாகவும் மலர்ந்து நிற்கும் தலைவனே! மகிழ்ச்சியை உடைய எண்ணமும் சொல்லும் செயலுமாக மகிழ்ச்சியோடு உன்னை அடியேன் வணங்கும்படிக்கு வந்தருள வேணும்.

49.       ஸ்வயம்பிரயோஜனமாகவே திருவடிப்பேற்றைப் பிரார்த்திப்பதாக ஆழ்வார் கூறியதும், எம்பெருமானும், ‘ஆயின், திருவடிப்பேற்றின் பிரயோஜனம்தான் என்ன?’ என்று வினவ, ஆழ்வார் இப்பாசுரமிடுகிறார்.

50.       உலோகம் - ‘நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் என்று எனது ஜட பிரகிருதி எட்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது’ என்று கீதாச்சார்யன் சொன்னபடி விளங்கும் அனைத்து ஜடப்பொருட்களும்.

51.       அலோகம் - ‘இந்த எட்டிலிருந்தும் வேறுபட்ட எதனால் இவ்வுலகம் முழுவதும் தாங்கப்படுகிறதோ அந்த எனது ஜீவரூபமான பிரகிருதி’ என்று கீதாச்சார்யன் சொன்னபடி விளங்கும் க்ஷரபுருஷன் என்று அழைக்கப்படும் அனைத்துச் சேதனங்களும்.

52.       தெய்வம் - க்ஷரபுருஷனைத் தாங்கி நிற்கும் அக்ஷரபுருஷன் என்று அழைக்கப்படும் கூடஸ்தன்.

53.       மகிழ்கொள் தெய்வம் - எம்பெருமானிடம் விளங்கும் ஆனந்தம் வெளிப்பட்டு நிற்கும் கூடஸ்தன்.

54.       சோதி - அந்தக்கூடஸ்தனையும் தரித்து நிற்கும் புருஷோத்தமன்.

55.       சோதி - க்ஷரபுருஷனுக்கும் அக்ஷரபுருஷனுக்கும் உயிர்த்தன்மையை வழங்கும் புருஷோத்தமன்.

56.       மகிழ்கொள் சோதி - புருஷோத்தமனிடம் பொங்கி நிற்கும் பிரஹ்மானந்தம்.

57.       மகிழ்வுற்று - உன் திருவடிகளில் ஒன்றி நிற்பதால் உன்னுடைய ஆனந்தம் என் தேஹாதிகளில் வெளிப்பட்டு அநுபவமாக.

58.       மகிழ்கொள் சிந்தைசொல் செய்கை - என் தேஹாதிகளில் வெளிப்பட்டு நிற்கும் உன் திருவடி ஆனந்தத்தினால் தோய்ந்த என் எண்ணமும் வாக்கும் செயலும்.

59.       இப்பாசுரத்தில் திருவடிப்பேற்றினால் விளையும் இரு முக்கிய பயன்களைப் பற்றி ஆழ்வார் பேசுகிறார்.

60.       ஒன்று, தேஹாதிகள் எம்பெருமானுடைய உயிர்த்தன்மையாலேயே உயிர்த்தன்மை பெறுகின்றன - உண்மையில் அவை உயிர்த்தன்மையற்ற ஜடமே.

61.       இரண்டு, ஆனந்தம் புலன்நுகர் போகப்பொருட்களில் இல்லை; அவற்றை தேஹாதிகள் நுகரும்போது வெளிப்படுவது, எம்பெருமானிடமிருந்து வெளிப்படும் பிரஹ்மானந்தமே.

62.       திருவடிப்பேறு பெறுபவன் இவ்விரண்டு உண்மைகளையும் உள்ளங்கை நெல்லிக்கனியெனக் கண்டறிந்து அநுபவிக்கிறான். ஏனெனில், திருவடிகளுக்குள் நிற்பது சிதானந்தஸ்வரூப புருஷோத்தமன் அல்லவா?

63.       ஏழாம் பாசுரம்:

வாராய்! உன்திருப் பாத மலர்க்கீழ்
பேரா தேயான் வந்தடை யும்படித்
தாராதாய்! உன்னை என்னுள் வைப்பிலென்றும்
ஆரா தாய்!எனக் கென்றுமெக் காலே.

64.       ஏழாம் பாசுரத்தின் பொருளாவது: உம்முடைய அழகிய திருவடித் தாமரைகளில் மீளாதே நான் வந்து அடையும்படித் தாராதவனே! உன்னை என்னுள் வைக்குமிடத்தே ஒருநாளும் பொருந்தாமல் இருப்பவனே! என்னிடத்தில் என்றும் எப்போதும் ஒன்றி நிற்குமாறு வந்தருள வேணும்.

65.       திருவடிகளையே, அடையும் உபேயமாகவும் அடைய உதவும் உபாயமாகவும் ஆழ்வார் பிரார்த்திக்க, உபேயத்தில் திருப்தியடைந்த எம்பெருமான், ரக்ஷணத்துக்கு தேவை, ரக்ஷ்யத்வ அநுமதியே என்பதால், உபாயத்தில் அந்த அநுமதியை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டி ஆழ்வாரிடம், ‘உமக்கு மறுமையில் செய்துகொடுக்க ஒன்றுமில்லையானது. ஆன பின்னே, இம்மையில் நீரே முயன்று நம் திருவடிகளைப் பற்றிக்கொள்ளலாமே?’ என வினவினான்.

66.       ஆழ்வாரும், ‘உன் உதவியில்லாமல் தனித்த என் சுய முயற்சியால் திருவடிகளை நான் ஒருபோதும் பற்ற இயலாது’ என்றார்.

67.       யான் வந்தடையும்படித் தாராதாய் - என்னுடைய சுய முயற்சியால் உன் திருவடிகளை வந்தடைய இயலாது. ஏன்? என்னில் சொல்வோம்.

68.       உன்னை என்னுள் வைப்பில் என்றும் ஆராதாய் - திருவடிப்பேற்றுக்குத் தேவையான யோகமும் ஞானமும் பெறும்பொருட்டு, என் முயற்சியால், உன்னை என் மனத்தில் வைக்க முயன்றால் தோற்றுப்போவேன்.

69.       வாராய் - யான் உன்னை வந்து பற்ற இயலாதாகையால் நீயேதான் உபாயமாகவும் வந்தருள வேணும்.

70.       எட்டாம் பாசுரம்:

எக்காலத் தெந்தையாய் என்னுள் மன்னில்,மற்
றெக்கா லத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்குமென்
அக்காரக் கனியே! உன்னை யானே.

71.       எட்டாம் பாசுரத்தின் பொருளாவது: மேம்பட்டவர்களாய் வேதங்களை அறிந்து குற்றமற்றவர்களாய் உள்ள பெரியோர்கள் நுகரும் என்னுடைய வெல்லப்பாகு தோய்ந்த கனியே! நீ எக்காலத்திலும் எனக்குத் தந்தையாய் எனக்குள் நிலைபெற்று நிற்பாயேயானால், யான் உன்னிடத்தில் எக்காலத்திலும் வேறு ஒன்றை விரும்பிக் கேட்கமாட்டேன்.

72.       புல்லைக்காட்டிப் பசுவை அழைத்து அப்புல்லையே அதற்கு இடுமாறு, திருவடிகளே உபேயமும் உபாயமும் என்று ஆழ்வார் அறுதியிட்ட அழகை இதுவரை உரையாடி ரசித்த எம்பெருமான், இனி அவர் பிரார்த்தனையைத் தலைக்கட்டும் அழகை மௌனமாக ரசிக்கிறான்.

73.       மேலிரண்டு பாசுரங்களில் திருவடிப்பேற்றை உபேயமாகப் பிரார்த்திக்கும் ஆழ்வார், அதற்கு மேல் ஒரு பாசுரத்தில் திருவடிகளையே உபாயமாகப் பிரார்த்தித்து, பின், திருவாய்மொழியைக் கற்றோர்க்கு பயன் சொல்லித் தலைக்கட்டுகிறார்.

74.       திருவடிப்பேறு ஒன்றே எம்பெருமானிடம் பிரார்த்திக்கத் தகுதியான மிகப்பெறும் பேறு என்று ஆழ்வார் இந்த பாசுரத்தில் அறுதியிட்டு, அதனைப் பிரார்த்திக்கிறார்.

75.       எக்காலத்திலும் மற்று யாதொன்றும் வேண்டேன் - திருவடிப்பேறு ஒன்றே பிரார்த்திக்கத் தகுதியான பேறு. ஏன்? என்னில், சொல்வோம்.

76.       மிக்கார் வேத விமலர் விழுங்குமென் அக்காரக் கனி - வேத உபநிஷத்துகளின் பொருளை அறிந்த ஞானிகள், ஆனந்தத்துக்கெல்லாம் ஆனந்தமான பிரஹ்மானந்தத்தின் இருப்பிடமான உன்னை என்றும் அநுபவித்து நிற்பர்.

77.       மகிழ்ச்சியைத் தருவது ஒன்றையல்லவா பிரார்த்திப்பது? யாதொரு காரணமும் பற்றி வாராத ஆனந்தத்தின் ஊற்றுக்கண்ணான உன் திருவடிகளைப் பிரார்த்திப்பதா? ஒரு காரணம் பற்றி வரும் மகிழ்ச்சியைத் தரும் வேறு ஒன்றைப் பிரார்த்திப்பதா?

78.       அக்காரக்கனி - பிரஹ்மானந்தத்தில் ஊறி நிற்கும் திருவடிகள்.

79.       ஒன்பதாம் பாசுரம்:

யானே என்னை அறிய கிலாதே
யானே என்தன தேயென் றிருந்தேன்
யானே நீயென் உடைமையும் நீயே
வானே ஏத்துமெம் வானவர் ஏறே.

80.       ஒன்பதாம் பாசுரத்தின் பொருளாவது: யான் என்னை அறிய இயலாமல், ‘நானும் என் உடைமையும்’ என்று வகுத்துக்கொண்டு இருந்தேன். முக்தர்கள் துதிக்கின்ற தேவர்கள் தலைவா! யானும் நீயே ஆவாய்; என் உடைமையும் நீயே ஆவாய்.

81.       திருவடிப்பேறு ஒன்றே எம்பெருமானிடம் பிரார்த்திக்கத் தகுதியான மிகப்பெறும் பேறு என்று கீழ்ப்பாசுரத்தில் அறுதியிட்ட ஆழ்வார், அதற்கான முதல் காரணத்தைக் கீழ்ப்பாசுரத்தில் வெளியிட்டார். இனி, இரண்டாவது காரணத்தை இப்பாசுரத்தில் வெளியிடுகிறார்.

82.       யானே என்தனதே - தேஹாதிகளே நான் என்றும் தேஹாதிகளின் புலன்நுகர் போக ஐசுவர்யங்கள் என்னுடையவை என்றும் அஹங்கார மமகாரங்களுடன் திரிதல்.

83.       யானே நீ என் உடைமையும் நீயே வானே ஏத்தும் - ‘யானோ உன்னால் தரிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா’ என்றும் ‘என் ஆன்மாவின் உடைமைகளான தேஹாதிகளும் உன்னாலேயே தரிக்கப்பட்டு நிற்கின்றன’ என்றும் முக்தர்கள் உன்னைப் புகழக் கேட்டேன்.

84.       யானே என்னை அறிய கிலாதே - அஹங்கார மமகாரங்களுடன் திரிந்த யான், முக்தர்களின் பாசுரம் கேட்டு, என்னை அறிந்துகொள்ளும் பொருட்டு, திருவடிப்பேற்றைப் பிரார்த்தித்தேன்.

85.       பத்தாம் பாசுரம்:

ஏறேல் ஏழும்வென் றேர்கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை;உன் பொன்னடி சேர்த்தொல்லை
வேறே போகஎஞ் ஞான்றும் விடலே.

86.       பத்தாம் பாசுரத்தின் பொருளாவது: ஏழு காளைகளையும் அடக்கி அழகிய இலங்கையை சாம்பலாக்கி அருளிய மிக்க ஒளியை உடைய பரஞ்சோதி! என்னை நம்பாதே. விரைவில் உன் அழகிய திருவடிகளைச் சேர்ப்பாய்; எப்போதும் உன்னைப் பிரிந்து செல்ல விடாதே.

87.       திருவடிப்பேற்றுக்குத் திருவடிகளே உபாயம் என்று ஆழ்வார் இப்பாசுரத்தில் அறுதியிட்டுத் திருவடிகளை உபாயமாகப் பிரார்த்திக்கிறார்.

88.       தேறேல் என்னை - தேஹாதிகளுடன் ஒன்றி நிற்கும் என்னால் சுய முயற்சி செய்து உன் திருவடிசேரத் தடையாயிருக்கும் பாவங்களை நீக்கிக் கொள்ள இயலாது; உன் திருவடிகளில் என்னை அடைவிக்கும் சுமையை என் தலையில் ஏற்றாதே.

89.       ஒல்லை உன் பொன்னடி சேர்த்து - உன் திருவடிசேரத் தடையாயிருக்கும் பாவங்களை நீயே நீக்கியருளவேணும்.

90.       ஏறேல் ஏழும்வென்று - நப்பின்னைப் பிராட்டியை அடைய நீ ஏழு காளைகளை வெல்லவில்லையா?

91.       இலங்கையை நீறே செய்த சோதி - ஸீதாப் பிராட்டியை அடைய நீ இலங்கையை சாம்பலாக்கவில்லையா?

92.       விடலே - அதுபோல, அடியேனை தேவாரீர் அடையத் தடையாய் நிற்கும் அடியேனுடைய பாவங்களை தேவாரீருடைய திருவடிகளினாலேயே துடைத்தருளி, திருவடிப்பேற்றுக்குத் திருவடிகளையே உபாயமாக்கி அருளவேணும்.

93.       இறுதிப் பாசுரம்:

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்
கெடலில் ஆயிரத் துள்ளிவை பத்தும்
கெடலில் வீடுசெய் யும்கிளர் வார்க்கே.

94.       இறுதியாக இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயன் சொல்லி ஆழ்வார் முடிக்கிறார். இப்பாசுரத்தின் பொருளாவது: என்றும் திருக்கையிலே பொருந்தி நிற்கும் திருவாழியை உடைய தலைவனை விடாது பொருந்தி நின்று, திருக்குருகூரில் தோன்றிய சடகோபர் என்னும் நம்மாழ்வாரால் சொல்லப்பட்ட குற்றமற்ற ஆயிரம் பாசுரங்களில் அடங்கும் இப்பத்தும் முயற்சியுடன் கற்பார்க்கு அழியா முக்தியைத் தரும்.

95.       சக்கரத்து அண்ணல் - தொண்டர்களின் திருவடிப்பேற்றுக்குத் தடையாய் இருக்கும் பாவங்களை நீக்கித்தரும் பொருட்டு, என்றும் எப்போதும் திருவாழியும் கையுமாய்த் திரியும் தலைவன்.

96.       வீடு செய்யும் - ‘எம்மா வீட்டுத் திறமும் செப்பம்’ என்று பிரார்த்திக்கும் திருவாய்மொழி, முக்தியைத் தருவது எங்ஙனம்? என்னில், திருவடிப்பேறு இம்மையிலேயே தன்னடையே முக்தியை விளைவித்து முடிக்கும்.

97.       கெடலில் வீடு செய்யும் - சரீரம் கெட்டு அழியும் முன்னே, இம்மையிலேயே வீடு செய்யும்.

98.       ஆக, இத்திருவாய்மொழியில் ஆழ்வாருடைய பிரார்த்தனையின் ஸாரமாவது:

99.       இம்மையிலேயே அடியேனுக்கு தேவாரீர் திருவடிப்பேற்றைத் தந்தருள வேணும்.

100.    ஏனெனில், திருவடிப்பேற்றினால், தேஹாதிகளில் உயிர்த்தன்மை இல்லை என்பதும் புலன்நுகர் போகஐசுவர்யங்களில் ஆனந்தம் இல்லை என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி என அநுபவமாகும். இவ்வநுபவத்தால் இம்மையிலேயே முக்தியும் ஸித்திக்கும்.

101.    திருவடிப்பேறு உண்டாகத் தேவையான திருவடி யோகமும் திருவடி ஞானமும் அடியேன் பெறும்பொருட்டு என் மனத்திலே தேவாரீர் வந்து நிலைத்து நின்றருள வேணும்.

102.    அதாவது, திருவடிகளையே உபேயமாகவும் உபாயமாகவும் தேவாரீர் அடியேனுக்குத் தந்தருள வேணும். இதுவே அடியேனுடைய பிரார்த்தனை.

103.    இரண்டாம் பத்தில் பிரார்த்தனையை பாசுரமிட்ட ஆழ்வார், திருவடி யோகத்தை ஸ்ரீதேவிப்பிராட்டி தந்தருளிய அநுபூதியை நான்காம் பத்தில் பாசுரமிடுகிறார்.

104.    பின்னர், எம்பெருமான், திருவடி ஞானத்தைத் தந்தருளிய அநுபூதியை ஐந்தாம் பத்தில் ஆழ்வார் பாசுரமிடுகிறார்.

105.    பின்னர், எம்பெருமான், திருவடிப்பேற்றைத் தந்தருளிய அநுபூதியை ஆறாம் பத்தில் தொடங்கி எட்டாம் பத்தில் முடித்து ஆழ்வார் பாசுரமிடுகிறார்.

106.    பின்னர், எம்பெருமான், இம்மையிலேயே முக்திப்பேற்றைத் தந்தருளிய அநுபூதியை ஒன்பதாம் பத்தில் தொடங்கி பத்தாம் பத்தில் முடித்து ஆழ்வார் பாசுரமிடுகிறார்.

107.    முக்திப் பெருநெறியின் படிநிலைகளை ஆற்றொழுக்குப்போல் மிகவும் அற்புதமாகவும் அழகாகவும் வரிசைக்கிரம அந்தாதியாக ஒப்பில்லாத திருவாய்மொழி செய்தருளிய நம்மாழ்வாருக்கு அடியேனுடைய நமஸ்காரம் உரித்தாகட்டும்.

108.    இரண்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழியில் நம்மாழ்வார் அருளிச்செய்த திருவடிப்பேறு பிரார்த்தனை, அடியேனுக்கு புத்தியில் பிரகாசிக்கும் பொருட்டு, அடியேனுடைய குருநாதர் திருவடிகளை தஞ்சமாக சரணமடைகிறேன்.

No comments:

Post a Comment