TUE

Ramanujar

அநுஷ்டான தீபம்



1.       பூர்வாச்சாரியர்களின் அநுஷ்டானங்கள் எல்லாம் அடியேனுக்கு புத்தியில் பிரகாசிக்கும் பொருட்டு, அடியேனுடைய குருநாதர் திருவடிகளைத் தஞ்சமாக சரணமடைகிறேன்.

2.       ஸ்ரீமந்நாதமுனிகள் தொடக்கமாக மணவாள மாமுநிகள் ஈறாக, ஆளவந்தார், ராமானுஜர், பட்டர், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, பின்பழகிய ஜீயர் உள்ளிட்ட பூர்வாச்சாரியர்கள் அனைவருக்கும் அடியேனின் நமஸ்காரம் உரித்தாகட்டும்.

3.       ராமானுஜர் தன்னுடைய அந்திம தசையிலே தனக்கு நெருங்கிய சிஷ்யர்களுக்கு உபதேசித்த கருத்துக்களில் பாகவத அபச்சாரம் பற்றி அருளிச்செய்ததன் ஸாரம்:

4.       சூத்திரன் வைசியன் என்றவாறு வர்ணத்தையும் ஜாதியையும் இட்டு பாகவதனைத் தாழ நினைப்பது அபச்சாரம்.

5.       ஆணென்றும் பெண்ணென்றும் விலங்கென்றும் ராக்ஷஸனென்றும், பாகவதர்கள் யாதொரு சரீரம் எடுத்திருந்தாலும், சரீரத்தையிட்டு பாகவதனைத் தாழ நினைப்பது அபச்சாரம்.

6.       பாலகன், இளைஞன், வயதானவன் என்று வயதையிட்டு பாகவதனைத் தாழ நினைப்பது அபச்சாரம்.

7.       பிரம்மச்சாரி, கிருஹஸ்தன் என்று ஆசிரமத்தையிட்டு பாகவதனைத் தாழ நினைப்பது அபச்சாரம்.

8.       திருமேனியிலோ அங்கங்களிலோ ஒரு குறையிருந்து, அதனையிட்டு பாகவதனைத் தாழ நினைப்பது அபச்சாரம்.

9.       தன் திருமேனியைப் பேணாது அலட்சியப்படுத்தி இருக்கையில், அந்த ஆச்சாரத்தையிட்டு பாகவதனைத் தாழ நினைப்பது அபச்சாரம்.

10.      திவ்ய தேசத்தில் வசிக்கும் பாகவதனையும் குப்பத்தில் வசிக்கும் பாகவதனையும் வித்தியாசம் பார்த்து, வசிக்கும் இடத்தையிட்டு பாகவதனைத் தாழ நினைப்பது அபச்சாரம்.

11.      தன் உறவினர்களில் ஒருவன் பாகவதனாய் இருந்து, அந்த உறவையிட்டு பாகவதனைத் தாழ நினைப்பது அபச்சாரம்.

12.      தத்துவ அறிவுள்ள பாகவதனுக்கும், அப்படியல்லாமல் ஒதுங்கி வசிக்கும் பாகவதனுக்கும் வித்தியாசம் பார்த்து, அந்த பிரகாசத்தையிட்டு பாகவதனைத் தாழ நினைப்பது அபச்சாரம்.

13.      திருமாலை கட்டுதல், திருவிளக்கிடுதல் முதலான வெளிப்படையான கைங்கரியம் செய்யும் பாகவதனுக்கும், அப்படி அல்லாமல் பார்வைக்கு ஒன்றும் செய்யமாட்டாதே வெறுமனே இருக்கிற பாகவதனுக்கும் வித்தியாசம் பார்த்து, அந்த பிரகாரத்தையிட்டு பாகவதனைத் தாழ நினைப்பது அபச்சாரம்.

14.      திருமேனி யாத்திரையின் பொருட்டுச் செய்யும் விவசாயம், ராஜ சேவை முதலான தொழிலையிட்டு பாகவதனைத் தாழ நினைப்பது அபச்சாரம்.

15.      பார்வைக்குத் தவறு போலத் தெரியும் பாகவதனின் போக அனுபவங்களான குற்றங்களையிட்டு பாகவதனைத் தாழ நினைப்பது அபச்சாரம். உதாரணமாக, ஏக பத்தினியைக் கொண்ட பஞ்ச பாண்டவர்களைத் தாழ நினைப்பது அபச்சாரம்.

16.      ச்சான் பிள்ளையின் சிஷ்யர்களான வைஷ்ணவர்கள் இருவர், லௌகிக விஷயமாகப் பிணங்கி, ஒருவர்க்கொருவர் வெறுப்பைக் காட்டி சில காரியங்கள் செய்தனர்.

17.      அவர்களில் ஒருவர், இன்னொருவர் தம்மை அவமானப்படுத்தி விட்டதாக வருந்தி, பட்டினி கிடந்தார்.

18.      இது கேட்ட ஆச்சான் பிள்ளை, அவமானப்பட்டவனும் நானே; பட்டினி கிடப்பவனும் நானே என்று அருளிச்செய்தார்.

19.      ன்னொரு சமயம், ஆச்சான் பிள்ளையின் வேறு இரு சிஷ்யர்கள், இது போல ஒருவர்க்கொருவர் லௌகிக விஷயமாக வெறுப்பைக் காட்டி, பிணங்கி நின்றனர்.

20.     வேறு ஒரு சிஷ்யர், இவர்களைச் சேரவிட்டு அருளவேணும் என்று ஆச்சான் பிள்ளையைக் கேட்டுக்கொண்டார்.

21.      ஆச்சான் பிள்ளையும், ஜகத்தில் ஈசுவரர்கள் இருவர் உண்டோ? என்று அருளிச்செய்தார்.

22.     ஆகிலும் சேரவிட்டு அருளவேணும் என்று அந்த சிஷ்யர் மீண்டும் கேட்டுக்கொண்டார்.

23.     ஆச்சான் பிள்ளையும், சுய சரீரத்தைக் கட்டுப்படுத்த மாட்டாத நான், அந்நிய சரீரத்தைக் கட்டுப்படுத்தப் புகுவதோ? என்று அருளிச்செய்தார்.

24.     ஆகிலும் இப்படி அருளிச்செய்யலாமோ? என மீண்டும் அவர் வற்புறுத்தினார்.

25.     ஆச்சான் பிள்ளையும் இறுதியாக, மறுமைக்கு அஞ்சி நெஞ்சை மீட்கக் கண்டிலோம்; இம்மைக்கு அஞ்சி வாயை மூடக் கண்டிலோம்; நாம் இவர்களைச் சேரவிடும்படி என்? என்று அருளிச்செய்தார்.

26.     இதைக் கேட்ட பிணங்கி நின்ற இரு சிஷ்யர்களும் பயந்து, மனம் திருந்தி சேர்ந்துகொண்டனர்.

27.      ச்சான் பிள்ளையின் சிஷ்யர்கள் இருவர் நெருங்கியவர்களாய் நீண்ட காலம் இருந்து, பின் ஒருவர்க்கொருவர் லௌகிக விஷயமாக வெறுப்பைக் காட்டிப் பிணங்கி நின்றனர்.

28.     அவர்களில் ஒருவர் ஆச்சான் பிள்ளையிடம் வந்து, மற்றவருடைய குற்றத்தைச் சொன்னார்.

29.     அங்கிருந்த பிற சிஷ்யர்கள், அப்படிச் சொல்லலாமோ? என்று கேட்டனர்.

30.     உடன், ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததாவது: அவர் சொல்லுவார். பிறரைத் தண்டிப்பதையே தொழிலாகக் கொண்ட யமனும், மதுசூதனனைச் சரணமடைந்தவர்களைக் கண்டால் வெகுதூரம் விலகிப் போ என்று தன் தூதர்களிடம் சொன்னான்.

31.      பிராட்டியும், இவ்வுலகத்தில் குற்றம் செய்யாதவன் ஒருவனுமில்லையே என்று அனுமனிடம் சொன்னாள்.

32.     ஈசுவரனும், என்னடியார் அது செய்யார்; செய்தாரேல் நன்று செய்தார் என்று பிராட்டியிடம் சொன்னான்.

33.     ஆழ்வார்களும், அவன் தமர் எவ்வினையராகிலும் நமன் தமரால் ஆராயப்பட்டறியார் கண்டீர் என்று நம்மிடம் சொன்னார்கள்.

34.     ஆக, அவர் குற்றம் இவரை ஒழியச் சொல்லுவார் ஆர்?

35.     ந்தணர் குலத்தில் பிறந்த நடாதூராழ்வான், ஒரு வைஷ்ணவர் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொள்ள திருவரங்கத்தின் வீதியில் ஒரு நாள் சென்றுகொண்டிருந்தார்.

36.     அப்போது நான்காம் வர்ணத்தில் பிறந்த ஒரு வைஷ்ணவர் எதிரில் வந்தார்.

37.      அவரைப் பார்த்து, கை கொடுத்துக்கொண்டு சென்ற வைஷ்ணவர், அவருடைய ஜாதியைச் சொல்லி, தள்ளிப்போ என்றார்.

38.     உடனே நடாதூராழ்வான் மூர்ச்சையாகிக் கீழே விழுந்தார்.

39.     மூர்ச்சை தெளிந்து எழுந்தவரைச் சூழ்ந்து நின்ற வைஷ்ணவர்கள், இது என்? என்று குழப்பத்துடன் கேட்டனர்.

40.     நடாதூராழ்வானும், திருக்குலத்திலே திருஅவதரித்து, திருவரங்கத்தில் வசிக்கும் பேறு பெற்ற மஹானோ கீழ் ஜாதியைச் சேர்ந்தவன்? நெடுங்காலம் இந்த ஆத்மா சுதந்திரமானவன் என்ற நினைவுடன் ஆத்மாவைத் திருடித் திரிந்த நானல்லவா கீழ் ஜாதியைச் சேர்ந்தவன் என்று அருளிச்செய்தார்.

41.      ரு சமயம் பாகவதனின் பெருமைகளை ஆச்சான் பிள்ளை சொல்லிக்கொண்டிருக்கும் போது, அங்கிருந்த வைஷ்ணவர் ஒருவர் பகவத் விஷயம் சொன்னார்.

42.     அதற்கு ஆச்சான் பிள்ளை, இப்போது விசேஷம் சொல்லுகிறவிடத்தில் சாமான்யம் என்? என்று அருளிச்செய்தார்.

43.     நெடுமாற்கடிமை என்று தொடங்கும் திருவாய்மொழி, பாகவத வைபவஞ் சொல்வது. இதற்கு அர்த்தம் விளங்கிக் கொள்ளவேண்டும் என்று அம்மணி ஆழ்வான் என்ற வைஷ்ணவருக்கு ஆவல் உண்டானது.

44.     ஆழ்வான் நெடுந்தூரம் நடந்து திருவரங்கம் வந்து, பட்டரைப் பார்த்து, நெடுமாற்கடிமைக்கு அர்த்தம் அருளிச்செய்ய வேணும் என்று கேட்டுக்கொண்டார்.

45.     பாசுரத்துக்கு அர்த்தஞ் சொல்லத் தொடங்கிய பட்டரும் முன்னுரையாக, எம்பெருமானை அறிகையாவது, அவனுக்கு அரைவயிற்றுச் சோறு; பாகவதனை அறிகையாவது, அவனை முழுக்க அறிகை என்று அருளிச்செய்தார்.

46.     ஆழ்வான் உடனே எழுந்து, இனி பலவகையாக அருளிச்செய்யில் இதனை மறந்துவிடுவேன்; இது போதும் என்று அதனை நினைவில் இருத்திக்கொண்டே ஊர் திரும்பினார்.

47.      திருநறையூர் எம்பெருமான் விஷயமாக நூறு பாசுரங்கள் பாடிய திருமங்கை ஆழ்வார், நம்பிதன் நல்லமாமலர்ச் சேவடி சென்னியிற் சூடியும் என்று முடித்தார்.

48.     இது கண்ட எம்பெருமான், ஆழ்வாருக்கு பாகவத விஷயத்தில் ருசியை உண்டாக்கத் திருவுள்ளமாகி, ஆழ்வீர், திருச்சேறைக்கு வாரீர். நம்முடைய திருவடியை நும் சென்னியில் வைத்து நும் விருப்பத்தை நிறைவேற்றித் தருகிறோம் என்று அருளிச்செய்தார்.

49.     திருச்சேறைக்குச் சென்ற ஆழ்வாருக்கு எம்பெருமான், பாகவத விஷயத்தில் ருசியை உண்டாக்கித் தந்து, பின் தன்னுடைய திருவடிகளை ஆழ்வார் திருமுடியில் வைக்கப்போனான்.

50.     ஆழ்வார் அதனைத் தன் புறங்கையாலே தட்டிவிட்டு, ஸம்ஸாரிகளுக்கும் பாகவதர்களுக்கும் பொதுவாய் நிற்கும் உன் பொன்னங்கழலோ என் தலைமேல் இருப்பது? உன்தாள் தொழுவார் காண்மின் என் தலைமேலார் என்று அருளிச்செய்தார்.

51.      அதுகண்ட எம்பெருமான் வெட்கமடைந்து, ஆழ்வீர், உமக்கு அந்தர்யாமியாய் உன் மனத்தில் இருந்தோமே?' என்றான்.

52.     ஆழ்வார்: எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே.

53.     எம்பெருமான்: ஆகிலும், நீர் வந்து வணங்கும்படிக்கு சுலபனாய், கடல்மல்லைத் தலசயனத் திருத்தலத்தில் நும் குலதெய்வமாய்க் கோயில் கொண்டுள்ளோமே?

54.     ஆழ்வார்: கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரைக் கொண்டாடும் நெஞ்சுடையார் ஆர், அவர் எங்கள் குலதெய்வமே.

55.     எம்பெருமான்: நாமோ முக்தர்களான விண்ணவர்கள் புடைசூழ பரமபதத்தில் உள்ளோம்; நீர் சொல்லுமவர்கள் எங்கே உள்ளனர்?

56.     ஆழ்வார்: போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே.

57.      எம்பெருமான்: கண்டும் நினைத்தும் அநுபவிக்கலாம்படிக்கு, உமக்கு கண்ணுக்கும் நெஞ்சுக்கும் விஷயமாய் நாம் வேண்டுமே?

58.     ஆழ்வார்: வண்சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இது காணீர், என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே.

59.     எம்பெருமான்: ஆகில், உபாயத்துக்கும் கைங்கரியத்துக்கும் நீர் நம்மைவிட்டு நீங்காதிருக்க வேணுமே?

60.     ஆழ்வார்: உபாயத்துக்கு முன்தகுதியாகவும், கைங்கரியத்துக்குப் பின்தகுதியாகவும் விளங்கும் பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே.

61.      எம்பெருமான்: இருப்பினும் முதலில் நமக்கு தாஸர் என்றல்லவா பாசுரமிட்டது?

62.     ஆழ்வார்: மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்துங் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கடிமை.

63.     எம்பெருமான்: ஆகிலும் பிரித்துச் சொன்னீரே?
64.     ஆழ்வார்: கணவனின் தேகத்தை விரும்பும் பதிவிரதைக்குக் குற்றம் உண்டாகில் அல்லவா, உமக்கு தேகமாக இருக்கும் பாகவதர்களை விரும்பின எனக்குக் குற்றம் உண்டாவது.

65.     எம்பெருமான்: ஆழ்வீர், உமக்குத் தோற்றோம்.

66.     வைசிய குலத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பிகளிடம், அந்தணர் குலத்தைச் சேர்ந்த ஒரு வைஷ்ணவர் வந்து, அடியேனை அங்கீகரித்து அருளவேணும் என்று கேட்டுக்கொண்டார்.

67.      நம்பி காஞ்சி வரதராஜப் பெருமாளுடன் உரையாடும் பாக்கியம் பெற்றவராதலால், பெருமானிடம் சென்று உத்தரவு கேட்டார்.

68.     பெருமாளும், நம்மை அவனுக்குச் சொல்லும் என்றார்.

69.     நம்பியும் அந்த வைஷ்ணவருக்கு பெருமாள் சரணாகதியை உபதேசித்தார்.

70.      அந்த வைஷ்ணவரும் நன்றி உணர்வுடன் நம்பியைப் பிரியாதே, அவருடன் காலங்கழித்தார்.

71.      அந்த வைஷ்ணவருடைய உறவினர்கள், இது கண்டு பொறுக்கமாட்டாதே, இவரைப் பிரித்துக்கொண்டு போனதோடு, வைசியரிடம் சேர்ந்ததற்காகப் பிராயச்சித்தம் பண்ணவேணும் என்று வலியுறுத்தினர்.

72.      இவரும், அப்படியானால் பெருமாள் கோவில் அநந்த சரஸில் தீர்த்தமாடிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, நம்பியிடம் வந்தார்.

73.      நம்பியும், நீர் போகாமல் இருந்தது என், அவர்கள் பொல்லாங்கு சொல்லாமே? என்று கேட்டார்.

74.      ஆச்சாரியனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அத்தனையோ அடியேனுக்கு என்று சோகம் பொறுக்கமாட்டாமல், அந்த வைஷ்ணவர், தேகத்தை விட்டு பரமபதம் சென்றார்.

75.      பின்பழகிய ஜீயர்க்கு ஒரு சமயம் திருமேனி நோவுபட்டு படுக்கையில் இருந்தபோது, தனக்கு நெருங்கிய சில வைஷ்ணவர்களை அழைத்து, நான் இப்போது பரமபதம் செல்லாதே, இன்னமும் சிறிது நாள் இங்கே இருக்கும்படிக்கு பெருமாளிடம் சரணாகதி பண்ணுங்கோள் என்றார்.

76.      அவர்களும் அவ்வாறே செய்ய, ஜீயர் நோவு நீங்கி, முன்பு போலே நடமாடத் தொடங்கினார்.

77.      இதைக் கேட்ட சில வைஷ்ணவர்கள் ஜீயரின் ஆச்சாரியரான நம்பிள்ளையிடம் சென்று, ஞானத்தில் சிறந்தவரும் வயதில் முதிர்ந்தவருமான ஜீயர் இப்படிச் செய்தார்; இது சரியா? என்று கேட்டனர்.

78.      பிள்ளையும், அவருடைய அபிப்ராயம் தெரியவில்லை. சகல வேத சாஸ்திரங்களிலும் வல்லவர் எங்களாழ்வான். அவரிடம் சென்று கேளுங்கோள் என்றார்.

79.      அவர்களும் எங்களாழ்வானைக் கேட்க, அவரும், ஸ்ரீரங்கத்தில் வசிப்பதில் விருப்பம் போலும் என்றார்.

80.     பிள்ளையும் இதைக் கேட்டுவிட்டு, நல்லது. திருநாராயணபுரத்து அரையரைக் கேளுங்கோள் என்றார்.

81.      அவரும், தொடங்கிய கைங்கரியங்கள் இன்னும் முடியாத காரணத்தினால் போலும் என்றார்.

82.     இதனையுங் கேட்டருளிய நம்பிள்ளை, சரி, அம்மங்கி அம்மாளைக் கேளுங்கோள் என்றார்.

83.     அவரும், பிள்ளையின் சிஷ்யகோஷ்டியிலிருந்து அவர் அருளிச்செய்கிற பகவத் விஷயங்களைக் கேட்கிறவர்களுக்கும் பரமபதம் ருசிக்குமோ? என்றார்.

84.     இதனையுங் கேட்டருளிய நம்பிள்ளை, அருகிலிருந்த பின்பழகிய ஜீயரிடம், இவை எல்லாம் உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ? என்று கேட்டார்.

85.     ஜீயரும், இவை அத்தனையும் அன்று என்றார்.

86.     அப்படியானால் உம்முடைய அபிப்ராயத்தைச் சொல்லும் என்றார்.

87.      உடன் ஜீயரும், தேவாரீர் அறிந்தருளாதது இல்லை. ஆனாலும், அடியேனைக்கொண்டு வெளியிட்டருளத் திருவுள்ளமாகில் சொல்கிறேன் என்ற பீடிகையுடன் தொடர்ந்தார்.

88.     தேவாரீர் திருக்குளியல் முடித்து உலவியருளும்போது, குறுவேர்வை அரும்பின திருமுக தரிசனத்தையும், விசிறி வீசிப் பணிசெய்யும் கைங்கரியத்தையும் விட்டு, அடியேனுக்குப் பரமபதம் செல்ல இச்சையாய் இருந்ததில்லை.

89.     இதனைக் கேட்டருளி, பிள்ளையும் பிற சிஷ்யர்களும், இங்கும் இவ்வுடம்போடே ஒருவர்க்கு இப்படிப்பட்ட ஐசுவர்யம் வாய்ப்பதே? என்று திருவுள்ளம் உகந்தருளினர்.

90.     ரு சமயம் பட்டர் தன் குடும்பத்துடன் கூரகுலோத்தமன் என்ற ஊரிலிருந்த தன்னுடைய சிஷ்யர் நாராயண ஜீயர் வீட்டில் தங்கியிருந்தார்.

91.      ஒரு நாள் பட்டருடைய குடும்பத்தாரால் ஜீயருடைய நந்தவனத்துக்குச் சிறிது அழிவு உண்டாயிற்று.

92.     நந்தவனத்தில் கைங்கரியம் செய்துகொண்டிருந்த வைஷ்ணவர்கள், அது கண்டு, கோபித்துச் சில வார்த்தைகள் சொன்னார்கள்.

93.     இது கேட்ட ஜீயர், அவர்களை அழைத்து, நான் பெருமாள் திருக்குழல் சிக்கு நாறுகிறதென்றோ திருநந்தவனம் வைத்திருக்கிறது? பட்டருடைய குடும்பத்தார் உபயோகத்துக்காக வைத்திருக்கிறேன் அத்தனையே என்று அருளிச்செய்தார்.

94.     ம்பி திருவழுதி வளநாடு தாஸர் பரமபதம் எழுந்தருளுகிற சமயத்தில் அவருடைய சிஷ்யர்கள் அழுதனர்.

95.     அது கண்ட தாஸர், கெடுவாய். செத்துப்போகிற நான் அழவில்லை; ஸ்ரீபராசர பட்டர் வாசிக்கக் கேட்கவிருக்கிற நீ ஏன் அழுகிறாய்? என்று அருளிச்செய்தார்.

96.     திரைலோக்யாள் என்று ஒரு பெண் வங்கிபுரத்து ஆச்சியிடம் நீண்ட காலம் சிஷ்யையாய் இருந்தாள்.

97.      ஒரு சமயம் திருமலையிலிருந்து அநந்தாழ்வான் திருவரங்கம் வந்து ஆறுமாத காலம் தங்கியிருந்தார்.

98.     திரைலோக்யாளும் அநந்தாழ்வானிடம், அக்காலத்தில் பகவத் விஷயம் கேட்டாள்.
.
99.     ஆறுமாதங் கழித்து, அநந்தாழ்வான் திருமலைக்குச் சென்றதும், திரைலோக்யாள் மீண்டும் வங்கிபுரத்து ஆச்சியிடம் பகவத் விஷயம் கேட்கவந்தாள்.

100.     அவரும், இத்தனை நாள் வந்திலையே? என்றார்.

101.        இவளும், அநந்தாழ்வானிடம் பகவத் விஷயம் கேட்டிருந்தேன் என்றாள்.

102.     அவர், நான் சொன்னதிலும் அவர் ஏற்றமாகச் சொன்னதுண்டோ? என்று கேட்டார்.

103.     இவளும், உண்டு; உம்மிடம் பகவத் விஷயம் கேட்டிருந்து, பதினாறு வருடங்கள் கழித்து, எம்பெருமான் திருவடிகளே தஞ்சமென்றீர் இத்தனை; அவர் ஆறே மாதங்களில் உம்முடைய திருவடிகளே தஞ்சம் என்னும்படிப் பண்ணினார் என்றாள்.

104.     ளவந்தாரின் சிஷ்யர்களான பெரியநம்பியும் திருக்கோஷ்டியூர் நம்பியும் திருமாலையாண்டானும் கூடி, திருவரங்கக் கோயில் சந்திர புஷ்கரணி கரையிலுள்ள புன்னை மரத்தின் கீழே எழுந்தருளி, தங்களுடைய ஆச்சாரியரைப் பற்றிப் பேசி மகிழ்ந்துகொண்டிருந்தனர்.

105.     அப்போது, அவ்வழியே திருவரங்கநாதன் எழுந்தருளிப் புறப்பாடு நடந்ததால், இவர்கள் எழுந்து வணங்க வேண்டியதாயிற்று.

106.     அப்போது அவர்கள் அருளிச்செய்தது: கூட்டங் கலைக்கியார் வந்தார். இன்றைக்கு மேற்பட, எம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே இருக்கக் கடவோம்.

107.        ஸ்ரீமந்நாதமுனிகள் தொடக்கமாக மணவாள மாமுநிகள் ஈறாக, ஆளவந்தார், ராமானுஜர், பட்டர், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, பின்பழகிய ஜீயர் உள்ளிட்ட பூர்வாச்சாரியர்கள் அனைவருக்கும் அடியேனின் நமஸ்காரம் உரித்தாகட்டும்.

108.     பூர்வாச்சாரியர்களின் அநுஷ்டானங்கள் எல்லாம் அடியேனுக்கு புத்தியில் பிரகாசிக்கும் பொருட்டு, அடியேனுடைய குருநாதர் திருவடிகளைத் தஞ்சமாக சரணமடைகிறேன்.


~ Compiled by umasreedasan from "Vaarthaa Maalai" by Pinbazhagiya Jeer.


No comments:

Post a Comment