Author


நூலாசிரியன் - ஓர் அறிமுகம்


தமிழகத்தில் மதுரைக்கு அருகேயுள்ள ஒரு நகரத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த எனக்கு முப்பது வயது வரையில் ஆன்மீகத்தில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய ஈடுபாடு ஏதும் இல்லை. பகவத் கீதையை வாசிப்பதும் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணமுமே அதுவரையில் என்னுடைய ஆன்மீக சாதனைகளாக இருந்தன.

1999-ல் சீரடி ஸாயிபாபாவின் வாழ்க்கையைப்பற்றி பத்திரிகையாளர் ஒருவர் எழுதியிருந்த ஒரு புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. நான் பகவத் கீதையில் படித்திருந்த அர்த்தவிசேஷங்கள் எல்லாம், பாபாவின் பக்தர்களின் வாழ்வில் நிதர்சனமாக பாபாவால் நடத்திக் காட்டப்பட்டிருந்த அற்புதத்தை படித்து அதிசயித்த நான், பாபாவிடம் காந்தத்தின்முன் இரும்புத்துகள் போல உடனே ஈர்க்கப்பட்டேன். 2000-ல் சீரடி சென்று வந்த பின் பாபாவை குருநாதராக பாவித்து வணங்கி, ஆன்மீக சாதனைக்கு முயல ஆரம்பித்தேன்.

2003-ல் ராமானுஜரிடம் ஈடுபாடு பிறக்கவே அவருடைய விசிஷ்டாத்வைத தத்துவத்தையும் சரணாகதி அனுஷ்டானத்தையும் ஆராயத் தொடங்கினேன். சரணாகதி தத்துவத்தின் ஞானஅனுஷ்டானங்களை நன்றாக அறிந்துகொள்ளும் பொருட்டு, ராமானுஜருக்குப் பின் வந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தின் ஆச்சாரியர்களின் உபதேச நூல்களையும் திவ்யப்பிரபந்த பாசுரங்களின் வியாக்கியானங்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தேன். குறிப்பாக, நம்மாழ்வாரின் ‘திருவாய்மொழி,’ பிள்ளைலோகாச்சாரியரின் ‘வசனபூஷணம்,’ பின்பழகியஜீயரின் ‘வார்த்தாமாலை’ ஆகியவற்றைச் சொல்லலாம். அனைத்தையும் ஆராய்ந்தபின், குருநாதரின் திருவருள் கிட்டாமல் சரணாகதி தத்துவத்தின் ஞானஅனுஷ்டானங்கள் யார் புத்திக்கும் புலப்படாது என்ற முடிவுக்கு வந்தேன்.

2004-ல் சென்னை மயிலாப்பூர் பாபா கோயிலுக்குச் சென்றிருந்தேன். பாபாவை வணங்கிவிட்டு, ஸந்நிதியைச் சுற்றிவந்துகொண்டிருந்தேன். எனக்கு நிறைய கால அவகாசம் இருந்ததால், தூணில் பொறிக்கப்பட்டிருந்த பாபாவின் 11 உறுதிமொழிகளை வாசித்துக்கொண்டிருந்தேன். பாபாவிடம் எனக்குப் போதுமான அளவு நம்பிக்கை அப்போதே இருந்ததால், எனக்கு அவருடைய இத்தகைய உறுதிமொழிகள் ஏதும் தேவைப்படவில்லை. அப்போது திடீரென்று, ‘இது உனக்கு வேணுமா?’ என்று எனக்குப் பின்னால் ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்டது.

தூக்கிவாரிப்போட, நான் திரும்பிப் பார்த்தேன். எனக்கு முன்னே ஆறரை அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக சிவந்த நிறத்தில் அறிமுகமில்லாத ஒருவர் நின்றிருந்தார். சுதாரித்துக்கொண்டு அவருக்கு நான் பதில் சொல்லும் முன், அவர் என் கையில் 3” க்கு 2” அட்டை ஒன்றை என் கையில் திணித்தார். அந்த அட்டையில் பாபாவின் 11 உறுதிமொழிகள் அச்சிடப்பட்டிருந்தன. எனக்கு அது தேவைப்படாது என்று தோன்றியது. திரும்பவும் தலையை நிமிர்த்திப் பார்த்தபோது அவர் அங்கே இல்லை. நான் பார்த்தவரையில் கோயிலுக்குள் எங்கும் இல்லை.

பாபா எதற்காக இந்த உறுதிமொழி அட்டையை எனக்குக் கொடுத்து அனுப்பினார்? அல்லது கொடுத்தார்? ‘எனக்குத் தேவையில்லையே’ என்று நினைத்துக்கொண்டே அந்த அட்டையைத் திருப்பிப் பார்த்தேன். புகைப்படம். பாபாவின் திருவடிகளின் புகைப்படம் அது.

குருநாதரின் திருவடித் திருவருளே கிட்டியபின் சரணாகதி செயல்படுவதற்குச் சொல்லவா வேணும்? தப்பாமல் இலக்கைத் தாக்கும் பிரஹ்மாஸ்திரம் அல்லவா? எட்டே வருடங்களில் திருவடிப்பேறு கிடைக்கப்பெற்றேன்.




~ உமாஸ்ரீதாஸன்.
email: umasreedasan@gmail.com
https://www.youtube.com/user/umasreedasan
https://www.instagram.com/shirdisaibhakta/

*****

ஆன்மீக விழிப்புணர்வுடன் வாழ்ந்து, வாழ்வின் சவால்களை இறையுதவியுடன் எதிர்கொள்ள உதவும் ஆன்மீக தத்துவங்களை, ஒரு கதையின் பின்புலத்தில் விளக்கும் ஒரு தமிழ் குறுநாவல் இது. ஆர்வமுள்ள நண்பர்கள் வாசித்துப் பயன்பெறலாம் - https://d2hstory.blogspot.com/

*****

*** 


சரணாகதி பிரார்த்தனை பணி - 

 https://lampofsurrender.blogspot.com/2018/09/surrender-prayer-service-tamil.html 

***