MON

Meenakshi - Sundareswarar


*** 

சரணாகதி பிரார்த்தனை பணி - 



***

ஈசுவர  தீபம்


1.    எம்பிராட்டி அங்கயற்கண்ணம்மை மணவாளன் திருவாலவாய் எம்பெருமான் திருவடித் திருவருள் கிட்டும் பொருட்டு அடியேனுடைய குருநாதர் திருவடிகளையே தஞ்சமாக சரணமடைகிறேன்.

2.    அங்கயற்கண்ணம்மை வேண்டிக்கொள்ள, திருவிளையாடல் புராணம் செய்த பரஞ்சோதி மாமுனிக்கு அடியேனுடைய நமஸ்காரம் உரித்தாகட்டும்.

3.    முன்னொரு காலத்தில் பிரம்ம தேவன் காசியிலே செய்த வேள்விக்கு அகஸ்தியர், வியாசர், நாரதர் ஆகியோரை முன்னிட்டுக்கொண்டு முனிவர்கள் பலர் வந்திருந்தனர்.

4.    வேள்வி முடிந்து பிரம்ம தேவன் சென்றதும், அம்முனிவர்கள் தம்மோடு வீற்றிருந்த நாரத முனிவரை வணங்கி, “சிறந்த சிவஸ்தலம் எது?” என்று வினவினர்.

5.    நாரதர் வியாசரை வினவ ஏவினார்; வியாசர் அகஸ்தியரை வினவ ஏவினார்.

6.    அகஸ்தியரும், “மூர்த்தி-ஸ்தலம்-தீர்த்தம் என மூவகையாலும் வேறு எத்தலத்திலும் மேம்பட்ட ஸ்தலம் திருவாலவாய் என்னும் மதுரையே. அப்பதி பூவுலகின் சிவலோகம் எனப் புகழ்பெற்றது. அதன் சிறப்பைக் கூறுகிறேன், கேளுங்கள்” என்று தொடங்கினார்.

7.    ரு சமயம் விருத்திராசுரனைக் கொன்றதால் இந்திரனுக்கு மறநிழல் பற்றியது.

8.    அந்த மறநிழல், வாய் மடிக்கும்; பல்லைக் கடிக்கும்; வீழும்; விரைந்து ஓடும்; திரும்பும்; வெதும்பி அலறும்; நகைக்கும்; சீறும் - இவ்வாறு ஒரு நொடியும் விடாது அலைத்தது.

9.    இந்திரன் அச்சத்துடன் ஒரு பொய்கையிலே தாமரைத் தண்டு ஒன்றினுள் மறைந்துகொண்டான்.

10.   இதனால், வானவர் நாடு தலைவனின்றித் தவித்தது. வானவர்களும் தங்கள் ஆசானான வியாழனை அடைந்து வேண்டினர்.

11.   அவனும் அருள்கூர்ந்து, இந்திரன் இருந்த பொய்கையை அடைந்து அவனைக் கூப்பிட்டான்.

12.   ஆசான் குரல் கேட்ட இந்திரன், ஆவின் குரல் கேட்ட கன்றெனக் களித்து வெளிவந்தான்; வியாழனின் மலரடியில் வீழ்ந்து வணங்கி, “என்னைச் சுடும் பழி விலகுவது எவ்வாறு?” என மனவருத்தத்துடன் வினவினான்.

13.   “இப்பழி மண்ணுலகிலன்றி மாளாது; ஆகையால், என்னோடு வருக” என்றான் வியாழன்.

14.   வியாழன் உரைப்படி விண்ணவர் சூழ ஆசானுடன் திருக்கயிலைமால்வரையை அடைந்தான். அதனை வணங்கித் தெற்கு நோக்கிச் சென்றான். கங்கை முதலான அளவற்ற தீர்த்தங்களில் மூழ்கினான். காசி, காஞ்சி முதலான திருப்பதிகளை சேவித்தான். எனினும் பழிவிடவில்லை.

15.   இந்திரன் மேலும் தெற்கே செல்லும்போது, கடம்பவனம் நெருங்கியது. உடனே அவனைப் பற்றியிருந்த மறநிழல் விலகிவிட்டது. இந்திரன் பெருஞ்சுமை நீங்கியவன் போல மகிழ்ந்தான்.

16.   உடன் வந்த ஆசானிடம் உரைத்தான். ஆசானும், “இங்கு உன் பாரத்தைப் போக்கிய தூய தலமும் தீர்த்தமும் இருத்தல் வேண்டும். ஆராய்க” என்றான். இந்திரனும் தன்னுடன் வந்த வானவரில் சிலரை, “கண்டு வருக” எனக் கடிதில் செலுத்தினான்.

17.   செலுத்தப்பெற்ற வானவர் விரைவில் மீண்டு வந்து வணங்கி, “அங்கே புதையல் போல ஒரு பொய்கையும் அருகிலே கடம்பின் நிழலிலே ஒளி வீசும் சிவலிங்கம் ஒன்றும் உள்ளன” என்றனர்.

18.   வானவர் மொழிந்ததைக் கேட்டு, தலைமேல் குவிந்த கைகளுடன், தன் கொடிய தீவினையைப் போக்கிய அருட்குறியின்பால் அன்பிருக்க, அங்கிருந்த பூம்பொய்கை ஒன்றிலே நீராடி, அவர்களுடன் கடம்பவனத்திலே நுழைந்தான். சிவக்கொழுந்தைக் கண்டான், ஆயிரங் கண்களும் களிக்க.

19.   கண்டவன் வீழ்ந்தான்; எழுந்தான்; விழிநீர் துளிர்க்க, களிப்புக் கடலிலே மூழ்கினான். மொழி குழற அன்புருவாய் நின்றான்.

20.   பின்னர், பொய்கையிலே நறுமலர்கள் உள்ளனவோ என ஓடி நோக்கினான்; இல்லாமை கண்டு சோர்வடைந்தான். அப்போது, இறை அருளாலே, பொற்றாமரை மலர்கள் ஒளிபரப்பிப் பூத்ததைக் கண்டான். அன்பூர ஆடினான். பொற்றாமரைப் பொய்கை எனப் பெயரிட்டுப் போற்றினான். அப்பொய்கையிலே முழுகி, அழகிய அம்மலர்களைக் கொய்து கரை ஏறினான். தானே தோன்றிய சிவக்கொழுந்தினை அடைந்தான்.

21.   சிவலிங்கத்தின் மேலே சிறிது கதிரவன் ஒளிபடுவதைக் கண்டான். பதைபதைத்துத் தன் வெண்குடையால் நிழல் செய்தான்.

22.   அப்போது, ஒரு விமானம் விண்ணிலிருந்து இழிந்தது. அதனை எட்டுத் திக்கிலும் எட்டுக் களிறுகள் தாங்கின. அவ்விமானத்தை மயன் படைத்துக் கொடுத்தான். வானவர் கோன் அதனை அரனுக்கு அணிவித்தான்.

23.   பேரின்பத்தில் திளைத்த இந்திரன், காதல் மிக, இன்பக் கண்ணீர் வடிய அஞ்சலி செய்து போற்றினான்: “நெற்றிக் கண்ணனே! எங்கள் தலைவனே! சிவபெருமானே! இடருண்டாகப் பிணித்த இப்பழியிலிருந்து என்னை விலக்கித் தங்கள் திருவடிக்கு அனபனாக்கிய அருட்கடலே! அங்கயற்கண்ணம்மை மணவாளனே! கடம்பவனத்தவனே! விண்ணிழி விமானத்து எழுந்தருளிய சுந்தர விடங்கனே! போற்றி! போற்றி!!”

24.   இவ்வாறு வாழ்த்திய இந்திரனை அடியார் எண்ணத்தை முற்றுவிக்கும் முக்கட்பெருமான் புன்முறுவலுடன் நோக்கி, “நின் விருப்பம் என்ன?” என்று வினவியருளினான்.

25.   அமரர் தலைவன் நிலமிசை விழுந்து வணங்கி விண்ணப்பித்தான்: “இறைவனே! தங்கள் இருக்கையான கடம்பவனத்து எல்லையிலேயே, என்னை விட்டு நீங்காது வருத்திய பழி நீங்கியது; முற்காலத்தில் அடியேன் செய்த தீவினையும் சிதறியது; அடிகளை வழிபடத்தக்கவனுமாகினேன். இதைவிடச் சிறந்த பேறும் வேண்டுமோ? ஆகவே, வேறு வேண்டிலேன். எப்போதும் இவ்வாறே தங்களை வணங்கி வழிபட்டு அடியாருள் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்.”

26.   இங்ஙனம் வேண்டி மறுபடியும் விழுந்து வணங்கினான். முன்னவனும் அருள்கூர்ந்து செப்பினான்: “சித்திரைத் திங்கள் முழுத்திங்கள் கூடிய சித்திரை நாளிலே ஒவ்வோராண்டும் வந்து வழிபடு. தற்போது நீ வானுலகடைந்து இன்பங்களைத் துய்த்து இரு. மலபரிபாகம் உண்டானவுடன் பேரின்ப வீட்டை நல்குவோம்.”

27.   மெய் சிலிர்க்க விண்ணவர்கோன் பன்முறை விழுந்து வணங்கினான். இறைவன் அடியிணை பிரிய இயலாமல் நின்றான். ஆண்டவன் ஆணையை மறுக்க அஞ்சி, பிரியாவிடை கொண்டு அமராவதியை அடைந்தான்.

28.   ரு சமயம் நைமிச கானத்தில் உறைந்த கண்வர் முதலான முனிவர்கள், வேதத்தின் பொருளை அறியாமல் உள்ளமும் முகமும் வாடினர்.

29.   அப்போது, இருண்ட மலங்களின் வலிமையை வென்ற அரபத்தர் என்னும் முனிவர் அங்கு வந்தார்.

30.   வந்த முனிவரை அங்கிருந்த முனிவர்கள் முறைப்படி வரவேற்று இருக்கை ஈந்தனர்.

31.   அரபத்தர் அங்கிருந்த முனிவர்களை நோக்கி, “கவலையைத் தரும் அவா-வெறுப்பை நீக்கிய பண்புடைய உங்களுக்கு வாட்டமுண்டாக்கிய விஷயம் என்ன?” என்று வினவினார்.

32.   அவர்களும், “இறைவன் அருளிய மறைகளைப் பயின்றோம். எனினும் பொருள் அறியோம்; பொருளை அறிவிக்கும் ஆசிரியனையும் அறியோம். இதுவே எங்கள் கவலை. இதனை நீக்கும் வழி யாது?” என்றனர்.

33.   அரபத்தரும், “மறை மொழிந்த வள்ளலே பொருள் மொழியத் தக்கவன். அவனையே வேண்டுவோம்; வேறு சூழ்ச்சி என்?” என்றார்.

34.   அரபத்தர் தொடர்ந்தார்: “திருவாலவாயில் வானிலிருந்து இறங்கிய விமானத்தின் தெற்கில், பெரிய ஆலமர நிழலில் பெருமான் தன்னை வழிபடும் அறவோர்க்கு, முகமலர்ந்து அளவற்ற அருளுடன் அரிய கலைகளை எல்லாம் தெளிவுபடுத்தி விளங்குகின்றான். அந்த அருள் வடிவினனே உங்களுக்கு மறைப் பொருளை உணர்த்துவான். எனவே, அவன் திருமுன் சென்று நோன்பியற்றுங்கள்.”

35.   அரபத்தர் கூறியதைக் கேட்ட அருந்தவ முனிவர்கள் அவருடனே மதுரையை அடைந்தனர்.

36.   திருக்கோயிலுட் புகுந்தனர். பொற்றாமரை வாவியிலே நீராடினர்.

37.   எல்லையற்ற உள்ளன்பு தூண்ட, விரைந்து சென்று, எட்டு களிறுகளின் பிடரியிலே பொன்மலைபோல் காணப்படும் இந்திர விமானத்தைக் கண்டனர்.

38.   மறைப்பொருளைக் கண்களால் கண்டாற்போல அவர்கள் இறைவனைக் கண்டனர். அலை ததும்பும் பேரின்பக் கடலிலும் நிலத்திலும் விழுந்து வணங்கி எழுந்தனர்.

39.   கைகள் தலைமீது குவிந்தன; கை கால்கள் செயலற்றன; கண் அருவி பெய்தது.; இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்து வாய் குழறியது.

40.   அவர்கள், “கறைமிடற்று அண்ணலே! வெள்ளி மன்றில் ஆடும் வானவர் தலைவனே! வானவர் வாழ நஞ்சுண்டு அருள் புரிந்த உத்தமனே! போற்றி!” என வாழ்த்தினர்.

41.   அங்கயற்கண்ணம்மையையும் சோமசுந்தரேசனையும் வாழ்த்தி, முறையாக வலம் வந்து, ஆல நீழலமர்ந்த அண்ணலை அடைந்தனர்.

42.   சிவஞானபோத நூலும் அமுத கும்பமும் சிவமணிக் கண்டிகையும் சின்முத்திரையும் விளங்கும் முதல்வனை நிலமிசை வீழ்ந்து வணங்கினர்.

43.   பின்னர், அரபத்தரின் வழிகாட்டுதலின்படி, கார்த்திகைத் திங்கள் பூரணை முதல் அடுத்த கார்த்திகைத் திங்கள் பூரணை வரையில் தர்ப்பணம், வேள்வி, மறையவர்க்கு உணவு விடாமல் இயற்றி நோற்றனர்.

44.   நோன்பு முடிந்த அன்று முனிவர்கள் வியக்கும் வண்ணம், ஆல நிழலிலே மோன உருவாக வீற்றிருக்கும் முதலாசிரியன், பதினாறு வயது நிரம்பிய காளையாய் வெளிவந்தான்.

45.   முனிவர்கள், அண்ணலின் கூற்றுதைத்த சேவடியை வணங்கி வாழ்த்தினர்: “எல்லையற்ற பரம்பொருளே! கலைகளுக்கெல்லாம் இருப்பிடமே! மறையில் விளைந்த பொருளே! நமஸ்காரம்”

46.   ஆசிரியன் அன்புடன், “உங்கள் விருப்பம் யாது?” என வினவினான்.

47.   “நாங்கள் வாழவும் உலகம் வாழவும் அளவில்லாத பெருமை மிக்க மறையின் பொருளை அருளிச்செய்ய வேண்டும்” என்று முனிவர்கள் விண்ணப்பித்தனர்.

48.   அடியவர்களின் கொடுவினையைப் போக்கும் குருபரன் அந்த முனிவர்களுடன் முடிவற்ற லிங்கத்தின் முன் சென்று நின்றான்.

49.   அந்த ஞானாசிரியன் திருவாய் மலர்ந்தருளினான்: “அந்தணரே! கேளுங்கள். அரிய மறைப்பொருள்கள் எல்லாம் மறைவானவையே. அத்தகைய பொருளை அறிவதே கெடுதல் இல்லாத இம்மை இன்பப் பயனுக்கும், வருத்துகின்ற பாசத்தடையைப் போக்கும் வீட்டின் பயனுக்கும் கருவியாகும்.”

50.   ஞானாசிரியன் தொடர்ந்தான்: “உயர்ந்த உண்மைப் பொருளாகிய இந்த சுயம்பு லிங்கமே மறைமுதற் பொருளாகும். மறைகள் பலவகையாலும் கூறிக் கூறி மயங்கும்படி எங்கும் நிறைந்துள்ள இந்த லிங்கத்தை நன்னெறி தவறாது வழிபடுவதாலும், ஞான நெறியினாலே இப்பொருளை அறியும் அறிவினாலும் தெளிவதான இந்த அருமறைப் பொருள் மற்றவர்க்கு அறிய இயலாதது.”

51.   இறுதியாக, “இம்மை மறுமை பயன்பெற சிவமயமான மறைப்பொருளைத் தெளிவாகக் கூறினோம். இதனைவிடச் சிறந்த பொருளில்லை. இப்பொருளெல்லாம் உங்களுக்கு மயக்கமின்றித் தெளிவதாக!” என்று அருளிச்செய்த ஆசிரியன் அந்த முனிவர்களின் முதுகைத் தடவியருளி லிங்கத்திலேயே மறைந்தான்.

52.   துரையம்பதியை அபிஷேகப் பாண்டியன் ஆண்டு வந்த காலம் அது. குணங்குறி கடந்த கூடலிறைவன் ஒரு நாள் சித்தபிரானாக வெளிவந்து திருவீதியில் உலவி அருளினான்.

53.   நீண்ட சடை - பூணூல் மார்பு - திருநீறணிந்த நெற்றி - ஸ்படிக மாலை - இறுகக் கட்டிய புலித்தோல் ஆடை - ஒரு கையில் ஏந்திய மழு - மறு கையில் ஏந்திய பிரம்பு - இத்தகைய திருக்கோலத்துடன் உபநிஷதப் பாதுகையின் மேல் மலரடி வைத்து நடந்தருளினான்.

54.   அவன் தொலைவிலுள்ள மலையை அண்மையில் காட்டுவான். முதியவரை இளைஞனாக்குவான். மலடி குழந்தை பெறுவாள். கூனருஞ் செவிடரும் குருடரும் ஊமையரும் அந்நிலை நீங்கி நலம் பெறுவர்.

55.   ஆகவே, அந்த மதுரை மக்கள் எல்லோரும் சித்தபிரானின் திருவிளையாடலில் ஈடுபட்டு, தம் கண்களையும் உள்ளத்தையும் பறிகொடுத்து, தொழிலையும் மறந்து நின்றனர்.

56.   இதனை அறிந்த அரசன் தன் அமைச்சர்களை ஏவி, அச்சித்தபிரானை அரசவைக்கு அழைத்துவரப் பணித்தான்.

57.   வந்து வணங்கி அழைத்த அமைச்சர்களிடம், 'எமக்கு மன்னனால் என் பயன்?' என்று எம்பெருமான் மறுத்திட்டான்.

58.   திரும்பி வந்து நடந்ததை அமைச்சர்கள் அரசனுக்கு உரைத்தனர். அரசனும், “முக்கண்ணன் அருள் பெற்று இம்மை மறுமைகளை வெறுத்த யோகிகளால் வேந்தன் மட்டுமா, அந்த இந்திரனே மதிக்கப்படான்” என்று வாளாவிருந்தான்.

59.   தைத்திங்கள் முதல் நாள் அன்று, பாண்டியன் கூடல் இறைவன் கோயிலுக்கு வந்தான். மதுரைப் பிரான் மலரடியை வணங்கி, அன்புடன் வலம் வந்தான்.

60.   சுற்றி வருகையில் விமானத்தின் வடமேற்கில் மழுவை ஊன்றிய கையுடன் சித்தபிரான் வீற்றிருப்பதைக் கண்டான்.

61.   பாண்டியன் சித்தபிரானை நோக்கி, “நும் நாடும் ஊரும் பெயரும் எவை? நுமக்கென்ன தெரியும்? வேண்டுவது யாது?” என வினவினான்.

62.   “நாம் கான்மிர நாட்டில் காசி நகரிலே இருக்கின்றோம். ஆதரவில்லாதவர்களாய் எப்போதும் பிச்சைப் பெருவாழ்வு உடையோர் எம் உறவினர். என்றும் விச்சை நடத்தித் திரியும் சித்தன் என்பர் எம்மை” என்ற சித்தபிரான் தொடர்ந்தான்.

63.   “இங்குள்ள சைவத்தலங்கள் எல்லாம் தொழும் பொருட்டு வந்தோம். அறிவை நல்கும் இந்நகரம் இம்மையிலே ஜீவமுக்தியையும் மறுமையில் மாயைக்கெட்டாத பரமுக்தியையும் அளிக்கும். மறைமுதலாக அறுபத்து நான்கு கலைகளிலும் வல்லோம். எட்டாத எல்லாப் பொருளும் வல்ல சித்தன் யாம். எமக்கு நீ அளிக்க வேண்டுவது யாதுமில்லை.”

64.   இவ்வாறு கூறிய சித்தபிரானின் சிறப்பை அளவிட்டு அறிய விரும்பினான் பாண்டியன்.

65.   அப்போது உழவன் ஒருவன் கரும்பொன்றைக் கையில் ஏந்தி அவ்வழியே வந்தான். அதனை அரசன் கையில் வாங்கி, நீரும் பிறையும் மறைத்து வந்தவனை நோக்கி, “நீர் இக்கல்லானைக்கு இந்தக் கரும்பை அருத்தினால் எல்லாம் வல்லவரும் நீரே; உம் உள்ளம் விரும்பியவற்றை எல்லாம் அளிப்பேன்” என்றான்.

66.   சித்தபிரான் புன்னகை புரிந்து, “தென்னவனே! உன்னால் வரக்கூடியது எமக்கொன்றும் இல்லை; உன் அவா தணிய நாமே தருவோம். நீ விரும்பியவாறு கல்லானை கரும்பைத் தின்பதைக் காண்பாயாக” என்று சொல்லி, கல்லானையைக் கடைக்கண்ணால் நோக்கினான்.

67.   உடனே, கல்லானை கண் திறந்து நோக்கியது. வாய் திறந்து பிளிறியது. துதிக்கையை நீட்டித் தென்னவன் கையிலிருந்த கரும்பை மெல்லப் பறித்தது; வாயிலிட்டு கடைவாயில் சாறு வடியத் தின்றது.

68.   அதனை மறுபடியும் சித்தபிரான் கடைக்கண்ணால் நோக்கினான். அந்தப் பொல்லாத கல்லானையும் பாண்டியன் கழுத்திலிருந்த முத்துமாலையை எட்டிப் பறித்தது.

69.   அரசனின் காவலர் சீற்றங்கொண்டு அக்கல்லானையைக் கோல்கொண்டு அடிக்கச் சென்றனர்.

70.   சித்தபிரான் களிற்றைச் சீற்றக் குறிப்புடன் பார்க்க, அது அம்மாலையை விழுங்கிவிட்டது.

71.   அரசன் கண்சிவந்தான். அது கண்ட ஏவலர், வண்டு தவழும் கொன்றையை மறைத்து வந்த வள்ளலை அடிக்க நெருங்கினர்.

72.   சித்தபிரான் இளநகை புரிந்து, “நின்மின்” என்றதும், அந்த ஏவலர்கள் வைத்த அடியைப் பெயர்க்க இயலாமல் நடுங்கி ஓவியம்போல் நின்றனர்.

73.   அரசன் அஞ்சி, சீற்றத்தைக் கைவிட்டான்; மெய்நடுங்கிச் சோர்வுற்றான். சித்தபிரானின் திருவடியில் தன் முடி தீண்ட விழுந்து வணங்கி, “மயக்குடையோனை மன்னித்தருள்க” என வேண்டினான்.

74.   அன்புக்கிரங்கும் அண்ணல் உள்ளம் இரங்கி, “வேண்டும் வரங்கேள்” என்றான். “நற்புத்திரப் பேறு நல்குக” என்று வணங்கினான் பாண்டியன்.

75.   நன்றென்று அருளிய சித்தபிரான் கல்லானை மீது கடைக்கண் செழுத்தினான். ஒளி மிகுந்த முத்துமாலையை வேழம் வேந்தனிடம் துதிக்கையால் நீட்டியது.

76.   அதனைக் கைநீட்டி வாங்கிய அரசன் திரும்பினான். சித்தபிரானைக் காணவில்லை. களிறும் முன்போல் கல்லானை ஆகியது.

77.   திகைத்த வேந்தன், “எம் உயிருகுயிரான கொன்றைவேணியரின் திருவிளையாடலே இது” எனத் தெளிந்து, மீண்டும் இறைவனிடம் சென்றான். நிலமிசை பன்முறை வீழ்ந்து வணங்கினான்.

78.   “முழுதுணர்ந்த முதல்வனே! நின் ஆடலை அறிகிலேன்” என்று அழுது போற்றினான்.

79.   சித்தபிரானின் அருளால் அபிஷேகப் பாண்டியனுக்கு விக்கிரம பாண்டியன் பிறந்தான். தகுந்த வயதில் அவனிடம் அரசை அளித்த அபிஷேகப் பாண்டியன், சித்தபிரானின் திருவடித் தேனைப் பருகும் வண்டாய்க் களித்திருந்தான்.

80.   லிமைமிக்க ஒருவன் எவ்விதத்திலும் நல்லறமே புரிந்து, சிறிது தீவினையும் புரிந்ததனாலே கரிக்குருவியாகப் பிறந்தான்.

81.   அக்குருவிக்கு காகம் முதலான பறவைகள் கூற்றுவன் போலத் தோன்றி, அதனைப் பலவகையினுந் தாக்கின.

82.   அவற்றுக்கு அஞ்சிய அப்பறவை, செந்நீரொழுகுந் தலையுடன் நகரைவிட்டு வெளியே வந்து கானகத்திலிருந்த மரம் ஒன்றின் மேல் வந்து அமர்ந்தது.

83.   தன் வலிமையின்மைக்கு வெட்கப்பட்டு, மிக வருந்தி, பெருமூச்சுவிட்டுக்கொண்டு அமர்ந்திருந்தது அக்குருவி.

84.   அந்த மரத்தின் நிழலில் பலர் குழுமியிருந்தனர். அப்போது ஒருவன் - திருநீறணிந்த மேனியன் - சிவமணி மாலையன் - உள்ளும் புறமும் தூயனாய் இருந்த அவன், அங்கு வந்து அமர்ந்து எல்லோரிடமும் சொன்னதாவது:

85.   “மதுரைப்பிரான் வழிபடுபவர்களுக்கு எளியவன். கைத்தல நெல்லிக்கனி என அன்பர்தம் கருத்திலே நினைந்த வரங்களை எல்லாம் இம்மையிலேயே உடனே நல்குவான். பிற தலங்களில் மறுமையிலேயே இன்பம் அளிப்பர். ஆகையால் மதுரைப்பிரான் சிறந்தவன்.”

86.   இதனைக் கேட்ட மரக்கொம்பிலிருந்த கரிக்குருவி மெய்யுணர்வு பெற்றது. அழகிய அந்த மலர்வனத்தைவிட்டுக் கூடல்மாநகரைக் கூடியது.

87.   பொற்றாமரைப் பொய்கையிலே மூழ்கியது. அங்கயற்கண்ணம்மை காதலனை வலங்கொண்டு, அன்புடன் அவன் மலரடியை உள்ளத்திலே தொழுது மலரிட்டு வணங்கியது.

88.   இவ்வாறு மூன்று நாட்கள் கழிந்தன. எம்பிராட்டி எம்பெருமானை வணங்கி, “இக்கரிக்குருவி செய்யும் வழிபாட்டின் திறம் என்னே! இதன் வரலாற்றை அறிய விரும்புகிறேன்” என்று வேண்டினாள்.

89.   கறைமிடற்று அண்ணலும் அதன் வரலாற்றை விளம்பி அருளினான். பிறகு அப்பறவையின் மேல் இரக்கங்கொண்டு, முற்காலத்தில் மார்க்கண்டேயனுக்கு அழியாப் பேறளித்துக் கூற்றுவனை மாய்த்தற்குக் காரணமான மிருத்யுஞ்ஜயம் என்னும் மந்திரத்தை ஓதி அருளினான்.

90.   ஒப்பற்ற பரம்பொருள் உரைத்த மறையைச் செவிமெடுத்தவுடன் சிற்றறிவு நீங்கி பிறவித் துன்பம் ஒழித்த கரிக்குருவி, கண்ணுதலான் கழலைப் போற்றியது.

91.   “எண்ணற்ற உயிர்களுக்குந் தலைவனே போற்றி! வான்பிறை முடித்த சடையனே போற்றி! அங்கயற்கண்ணம்மை பங்கனே போற்றி!” என்று வாழ்த்திய அது தொடர்ந்தது:

92.   “முற்பிறவியிலே செய்த நல்லறத்தாலே இப்பிறவியில் இம்மறையை தேவாரீர் இயம்பும் பேறு பெற்றேன்; இம்மறை மறுமையிலே நன்னெறிக்குக் காரணமாயிற்று. ஆதலால், மும்மையும் நற்பேறு உடையவன் ஆனேன்” என்று இயம்பிய குருவி பெருமானை வேண்டியது:

93.   “எனினும் எளியேனுக்கு ஒரு குறை. தீய பறவைகள் எல்லாம் எனக்குக் கெடுதி செய்து துன்புறுத்த, மானமிழந்து, கண்டவர் நகைக்குமாறு மிகவும் எளியனாகிவிட்டேன்” என்றது.

94.   அண்ணலும் இரக்கத்துடன், “இனி அப்பறவைகளுக்கெல்லாம் வலியை ஆகப்பெறுவாய்” என்றருளினான்.

95.   பறவை மகிழ்ந்து மீண்டும், “தாங்கள் கூறியருளிய வலியான் என்பது என் மரபுக்கெல்லாம் பொருந்த வேண்டும். அருள்புரிக” என வேண்டியது. இறைவனும் அதனை ஏற்றருளினான்.

96.   கரிக்குருவி குருமொழியைப் பயின்று இறுதியில் கறைமிடற்று அண்ணலின் கழலிணையைச் சேர்ந்தது.

97.   வ்வாறு திருவாலவாயில் அங்கயற்கண்ணம்மை மணவாளன் செய்தருளிய திருவிளையாடல்களில் சிலவற்றைக் கூறியருளிய, அறிவாகிய இன்பக் கடலைப் பருகும் முகிலனைய அகஸ்தியரை முனிவர்கள் எல்லாம் வணங்கி வேண்டினர்:

98.   “மேருமலையை வில்லாக வளைத்த கூடலிறைவன் திருவிளையாடலைக் கேட்டுச் செவிபெற்ற பேற்றை அடைந்தோம். கேட்டவாறே விழிமகிழ மணமலரிட்டுக் கைகூப்பி வணங்க நாங்கள் விரும்புகிறோம்.”

99.   அகஸ்தியரும், “முனிவர்களே! நீங்கள் விரும்பியது நன்று; என் நினைவும் அதுவே. காதிற் பதியக் கேட்டவாறு, திருவாலவாய் எம்பெருமானைச் சென்று வழிபட்டு, உள்ளம் உருக நினைந்து போற்றி, கொடுவினையை மாய்த்துக்கொள்வோம், வாருங்கள்” என்று கூறி, அவர்களைக் காசியிலிருந்து திருவாலவாய் அழைத்து வந்தார்.

100.   திருக்கோயிலை அடைந்து பொற்றாமரைப் பொய்கையிலே படிந்து எழுந்தனர். சித்திக்களிற்றை வணங்கினர்.

101.   அங்கயற்கண்ணம்மை திருவடிகளை அன்புற வணங்கி அருள்பெற்றனர். உள்ளத்தில் அன்பு பரவ, விண்ணிழி விமானத்தில் பொருந்தி நிற்கும் எம்பெருமானின் திருவடிகளில் சடைமுடியுறப் பணிந்தனர்.

102.   உள்ளத்திலே அன்பு பெருக, கண்கள் நிறைய நீரூற்று பெருக பரம்பொருளை அஞ்சலி செய்து ஏத்தினர்.

103.   “பழிகெட வாசவன் செய்பணிகொண்ட அண்ட சரணம்!           புங்கவர்தேற ஆதிமறையுட் கிடந்த பொருளோது போத சரணம்!
வெந்திறல் மாறன்முன் கல்உருவானை கன்னல் மிசைவித்த சித்த சரணம்!    குருமொழி தந்து குருவிக்கு வீடு குடிதந்த எந்தை சரணம்!”

104.   இவ்வாறு வாழ்த்திய முனிவர்களுக்கும் அகஸ்தியருக்கும் அருள்புரியும் பொருட்டு லிங்கத்திலிருந்து கடம்பவனக் கண்ணுதலான் வெளிப்பட்டான்.

105.   “நீங்கள் செய்த வழிபாடும் வாழ்த்தும் எல்லா உயிர்களிலும் நிறைந்து நமக்கு இன்பமூட்டின” என்று அருளிச்செய்த எம்பெருமான், குறுமுனிவரை அருகில் அழைத்து, “நிறைதவம் புரிந்தோனும் தவ உறுதியை நன்கு பெற்றோனும் நீயே. உனக்கினி அரிய வரம் தர யாதுளது?” என்று இன்மொழி கூறி லிங்கத்திலேயே மறைந்தான்.

106.   முனிவர்களும் எம்பிராட்டி அங்கயற்கண்ணம்மையையும் எம்பெருமான் கூடலிறைவனையும் முப்போதும் சென்று வணங்கி அத்தலத்திலேயே சிறிது காலம் வசித்தனர்.

107.   அங்கயற்கண்ணம்மை வேண்டிக்கொள்ள, திருவிளையாடல் புராணம் செய்த பரஞ்சோதி மாமுனிக்கு அடியேனுடைய நமஸ்காரம் உரித்தாகட்டும்.

108.  எம்பிராட்டி அங்கயற்கண்ணம்மை மணவாளன் திருவாலவாய் எம்பெருமான் திருவடித் திருவருள் கிட்டும் பொருட்டு அடியேனுடைய குருநாதர் திருவடிகளையே தஞ்சமாக சரணமடைகிறேன்.

~ Compiled by umasreedasan from "Thiruvilaiyadal Puranam" by Saiva Siddhantha Pathippagam 


1 comment: