SAT

Sri Krishna - Viswarupam

*** 

சரணாகதி பிரார்த்தனை பணி - 


***

புருஷோத்தம தீபம்


1.    திருவரங்க நாச்சியாரின் அழகிய மணவாளன் நம்பெருமாள் திருவடித் திருவருள் கிட்டும் பொருட்டு அடியேனுடைய குருநாதர் திருவடிகளையே தஞ்சமாக சரணமடைகிறேன்.

2.    துணையின்றித் துறவியாய்க் கிளம்பிய எவரை வியாஸர் பிரிவாற்றாமையால், 'மகனே!' என்று கூப்பிட்டபோது, மரங்களும் 'ஏன், ஏன்' என்றனவோ, அனைத்துந் தானே ஆகி நின்ற அந்த சுகதேவரின் திருவடிகளுக்கு அடியேனுடைய நமஸ்காரம் உரித்தாகட்டும்.

3.    ர்ஜுனனின் பௌத்திரனும் அபிமன்யுவின் புத்திரனுமான பரீக்ஷித்து ஹஸ்தினாபுரத்தை ஆண்டு வந்த காலம் அது.

4.    ஒரு சமயம் பரீக்ஷித்து வனத்தில் வேட்டையாடச் செல்லுகையில், மான்களைத் தொடர்ந்தோடி, களைப்பும் பசியும் தாகமும் மேலிட்டவனாய், நீருள்ள இடத்தைக் காணாமல், அங்கு இருந்த ஆசிரமம் ஒன்றில் நுழைந்தான்.

5.    அந்த ஆசிரமத்தில், கண்மூடி சாந்தமாக தியானத்தில் இருந்த முனிவர் ஒருவரைக் கண்டான்; தொண்டை உலர்ந்துபோன அரசன், அவரிடம் குடிக்க நீர் யாசித்தான்.

6.    முனிவரிடமிருந்து மறுமொழி வராது போகவே, தான் அவமதிக்கப்பட்டதாக எண்ணி, அரசன் கோபமடைந்து வெளியே வந்தான்.

7.    வெளியில் செத்துக் கிடந்த பாம்பு ஒன்றைக் கண்டு, அதனைத் தன் வில்லின் நுனியில் தூக்கி, ரிஷியின் கழுத்தில் போட்டுவிட்டு, வெறுப்புடன் தன் அரண்மனைக்குத் திரும்பினான்.

8.    அந்த ரிஷியின் புத்திரன் சிறுவன் எனினும் பிரம்ம தேஜஸ் மிகுந்தவன். தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட பிழையைக் கேள்விப்பட்ட அவன், அரசனுக்கு சாபம் விடுத்தான்:

9.    'என் தந்தையின் மரியாதையைக் கெடுத்த அவ்வரசனை என்னால் ஏவப்பட்ட ஸர்ப்பராஜன் தக்ஷகன் இன்றைக்கு ஏழாவது நாள் கடிக்கட்டும்.'

10.   அரண்மனைக்குச் சென்ற அரசன் தனக்கு முனிபுத்திரன் விடுத்த சாபத்தைக் கேட்டு, வாழ்வில் விரக்தி அடைந்து, அரசைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு கங்கைக் கரைக்கு வந்தான்.

11.   'மரண தருணத்தில் இருப்பவன் செய்யவேண்டிய காரியம் என்ன?' என்று பரீக்ஷித்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, அங்கே வியாஸபுத்திரரான சுகதேவர் வந்தார்.

12.   அரசன் பரம சாந்தராக வீற்றிருக்கும் மஹா மேதாவியான அம்முனிவரை அணுகி, தலை வணங்கி, கைகளைக் கூப்பிக்கொண்டு நமஸ்கரித்து அடக்கத்துடன் கேட்டான்:

13.   “பகவத் கிருபை இல்லாவிட்டால், பரம சித்த புருஷரும் வனவாசிகளை விரும்புவருமாகிய தேவாரீருடைய தரிசனம் எங்களைப் போன்ற மனிதர்களுக்கு, அதுவும் மரணமடையும் தருவாயில் உள்ளவர்களுக்கு எங்ஙனம் கிட்டும்? பிரபு! எப்போதும் மரணத்தை நோக்கிச் செல்லும் மனிதனுக்கு எது கேட்கத்தக்கதோ, எது நினைக்கத்தக்கதோ, எது செய்யத்தக்கதோ அதனைக் கூறியருள வேண்டும்.”

14.   சுகதேவர் மகிழ்ந்து, “ஆத்ம தத்துவத்தைக் காணாது வீட்டில் வாழும் ஸம்ஸாரிகளுக்குக் கேட்கத்தக்கவை முதலியன ஆயிரக்கணக்கில் இருக்கின்றன; முனிவர்களோ ஹரியின் குணங்களைப் பேசுவது ஒன்றிலேயே மகிழ்கின்றனர்” என்று கூறிவிட்டு, பரீக்ஷித்துக்கு புருஷோத்தமனிடம் பக்தி உண்டாகி நிலைத்து நிற்கும் பொருட்டு, பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் லீலைகளை விவரிக்கத் தொடங்கினார்.

15.   லகனைத்திற்கும் ஆன்மாவும் உண்டாயவற்றை எல்லாம் ஊட்டி வளர்ப்பவனுமாகிய பகவான் யது வம்சத்தில் ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்திருந்தான்.

16.   ஒரு சமயம் பலராமன் முதலிய இடைச் சிறுவர்கள் விளையாடுகையில் கிருஷ்ணன் மண்ணைத் தின்றான் என்று தாயான யசோதையிடம் அவர்கள் சொன்னார்கள்.

17.   குழந்தைக்கு நலனை விரும்பிய யசோதை  கிருஷ்ணனைக் கையில் பிடித்துக்கொண்டு அதட்டி, பயத்தால் மருண்ட கண்களையுடைய அவனைப் பார்த்துப் பின்வருமாறு கூறினாள்:

18.   “அடங்காதவனே! ஏன் மண் தின்றாய்? உன் சிநேகிதர்களான இப்பிள்ளைகள் சொல்லுகிறார்களே - உன் அண்ணனும் சொல்லுகிறானே.”

19.   ஸ்ரீகிருஷ்ணன், “அம்மா, நான் தின்னவில்லை. எல்லோரும் பொய்யாகக் கோள் சொல்லுகிறார்கள். அவர்கள் சொல்லுவது உண்மை என்றால், என் வாயை நீயே நேரில் பார்” என்றான்.

20.   “அப்படியானால் வாயைத் திற” என்று யசோதை சொல்லவும், மனிதக் குழந்தையாக லீலை புரிபவனும், குறைவுபடாத ஈசுவரத்தன்மை உடையவனுமான அந்த பகவான் ஹரி வாயைத் திறந்தான்.

21.   யசோதை தன் குழந்தையின் வாயில் சராசர உலகனைத்தையும் கண்டாள். வாயு, அக்கினி, சந்திரன், நட்சத்திரங்கள், வானம், திசைகள், மலை, தீவு, கடல் இவைகளுடன் பூகோளத்தையும் கண்டாள்.

22.   தன் குழந்தையின் வாயில் விசித்திரமாய் விளங்கும் இவ்வுலகையும் கோகுலத்தையும் தன்னோடு பார்த்து சந்தேகங்கொண்டாள்:

23.   'இது என்ன கனவா? தேவ மாயையா? என் புத்தி மோகமா? அல்லது இக்குழந்தைக்கு இயற்கையாகவே ஏற்பட்டுள்ள ஓர் ஆத்ம சக்தியா? இது ஆச்சரியம்.'

24.   இப்படி யசோதை தத்துவத்தை ஆராய்ந்தபோது ஸர்வ வியாபியான அந்த ஈசுவரன் புத்திர வாஞ்சை என்ற விஷ்ணு மாயையை உண்டாக்கினான்.

25.   உடனே தத்துவத்தை மறந்த யசோதை, மகனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு முன்போலவே புத்திரன் என்ற ஆசை நிறைந்த மனமுடையவள் ஆனாள்.

26.   ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணன் பால் குடிக்க விரும்பியவனாய், தயிர் கடையும் தாயிடம் சென்று, தயிர் மத்தைப் பிடித்துக்கொண்டு, கடையவிடாமல் தடுத்தான்.

27.   புன்சிரிப்புடன் கூடின அவனுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டு யசோதை, தன் மடியில் ஏறி உட்கார்ந்த அவனுக்கு அன்பினால் பால் சுரந்த ஸ்தனத்தைக் கொடுத்தாள்.

28.   அப்போது, அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கி வழியவே, இன்னும் திருப்தி அடையாத குழந்தையைக் கீழே விட்டுவிட்டு விரைந்து சென்றாள்.

29.   அதனால், கோபத்தில் துடித்த சிவந்த உதடுகளைப் பற்களால் கடித்துக்கொண்டு, தயிர் கடையும் சட்டியை அம்மிக்குழவியால் உடைத்துவிட்டு மாயக் கண்ணீருடன் உள்ளே சென்று மறைவில் வெண்ணெயைத் தின்றான்.

30.   யசோதை நன்றாகக் காய்ந்த பாலை இறக்கி வைத்துவிட்டுத் திரும்பி வந்து, தயிர் பாத்திரம் உடைந்து கிடப்பதைக் கண்டு, அது தன் குழந்தையின் செய்கை என்று அறிந்து, அவனையும் அவ்விடத்தில் காணாமல் சிரித்தாள்.

31.   உருட்டப்பட்ட உரலின் மேல் உட்கார்ந்துகொண்டு, உறியிலிருந்த வெண்ணெயை எடுத்து குரங்குகளுக்கு இஷ்டம்போல் கொடுப்பவனும் திருட்டினால் பயந்த நோக்குடையவனுமான புத்திரனைப் பார்த்து மெதுவாகப் பின்புறம் வந்தாள்.

32.   தவறு செய்தவனும் மையிட்ட கண்களைத் தன் கையினால் கசக்கிக்கொண்டு அழுபவனும், பயத்தினால் சலிக்கின்ற கண்களை உடையவனுமான அவனைக் கையில் பிடித்துக்கொண்டு பயமுறுத்தி அதட்டினாள்.

33.   பின்பு, அவனுடைய பெருமையை உணராதவளாய், யசோதை தன் குழந்தையைக் கயிற்றால் கட்ட எண்ணினாள்.

34.   ஆச்சரியம், எவனுக்கு முன்னுமில்லையோ பின்னுமில்லையோ, உள்ளுமில்லையோ வெளியுமில்லையோ, எவன் உலகிற்கு முன்னும் பின்னும் உள்ளும் வெளியுமாகவும் உலகமேயாகவும் இருக்கிறானோ, வெளிப்படையாகத் தோன்றாதவனும், இந்திரியங்களுக்குப் புலப்படாதவனுமான அவனை, மானிட உருக்கொண்டதால் தனது குழந்தையாக எண்ணிய யசோதை, சாதாரண குழந்தையைப்போல் கயிற்றால் உரலில் கட்டினாள்.

35.   பிழை செய்த தன் குழந்தையைக் கட்டுவதற்கு அக்கயிறு இரண்டங்குலம் குறைவாக இருக்கக் கண்டாள். அத்துடன் வேறொரு கயிற்றைச் சேர்த்து முடிந்தாள். அதுவும் குறைவாய் இருந்ததால், அத்துடன் வேறொன்றையும் சேர்த்தாள். அதுவும் இரண்டங்குலம் குறைவாக இருக்கக் கண்டாள்.

36.   தலைமுடி அவிழ்ந்து, அணிந்த பூ சரிந்து, உடல் வியர்த்து நின்ற தன் தாயின் கஷ்டத்தைக் கண்டு ஸ்ரீகிருஷ்ணன், அன்பினால் தன்னைக் கட்டுவதற்கு உடன்பட்டான்.

37.   கோபியின் பிள்ளையாக வந்த இந்த பகவான் இங்கு பக்தர்களுக்கு எப்படி எளிதில் அடையக்கூடியவனோ, அப்படித் தன் உயிரே போன்ற ஞானிகளாயினுங்கூட உடல் படைத்தவர்களுக்கு அடையக் கூடியவன் அல்லன்.

38.   தாயார் மறுபடி வீட்டுவேலைகளில் ஈடுபட்டிருக்கையில் பிரபுவாகிய ஸ்ரீகிருஷ்ணன் முன்பு குபேர குமரர்களாய் இருந்து, சாபத்தால் தற்போது மருத மரங்களாய் நிற்பவர்களைப் பார்த்தான்.

39.   ஸ்ரீகிருஷ்ணன் அந்த இரட்டை மருத மரங்களின் இடையில் சென்றான். அப்படிச் செல்கையில் உரல் குறுக்காக மாட்டிக்கொண்டது.

40.   இடுப்பில் கயிற்றுடன் கூடிய ஸ்ரீகிருஷ்ணனால், தன் பின்னால் வரும் உரல் வேகமாக இழுக்கப்படவே, அவனுடைய பராக்கிரமத்தால் பெருங்கிளைகளும் இலைகளும் அசைய, வேர்ப்பிடிப்பு அறுபட்டு, பெரிய இரைச்சலுடன் மரங்கள் வீழ்ந்தன.

41.   இரு மரங்களிலுமிருந்து இரு சித்த புருஷர்கள் வெளிப்பட்டனர். அவர்கள் உரலில் கட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ணனைப் பல முறை வலம் வந்து நமஸ்கரித்து விடைபெற்றுச் சென்றனர்.

42.   நந்தர் முதலிய கோபர்கள் மரங்கள் விழுந்த சத்தத்தைக் கேட்டு இடி விழுந்ததோ என்று பயந்தவர்களாய் அவ்விடம் வந்தனர். கயிற்றால் கட்டப்பட்டும் உரலை இழுத்துக்கொண்டும் இருந்த தனது புத்திரனைப் பார்த்து நந்தகோபர் சிரித்த முகமுடையவராய் அவிழ்த்துவிட்டார்.

43.   ரு நாள் காலையில் ஸ்ரீகிருஷ்ணன் எழுந்து, அன்று வனபோஜனம் செய்யவேண்டுமென்று எண்ணி, கன்று மேய்க்கும் தம் வயதுடைய சிநேகிதர்களைக் கொம்பூதி எழுப்பி, கன்றுகளை முன்னே போகவிட்டு கோகுலத்திலிருந்து கிளம்பினான்.

44.   அச்சிறுவர்கள் தங்கள் கன்றுகளை மேய்த்துக்கொண்டே பால்ய லீலைகளால் களிப்படைந்தார்கள்.

45.   அவர்கள் ஒருவருடைய உறி முதலியவற்றை மற்றொருவர் ஒளித்து வைப்பதும், கண்டுபிடித்தால் அவ்விடத்திலேயே வைத்துவிடுவதும், அல்லாவிட்டால், சிறிது தூரம் சென்று நகையாடிவிட்டு திருப்பிக் கொடுப்பதுமாக இருந்தார்கள்.

46.   காட்டில் அழகான இடங்களைப் பார்க்க ஸ்ரீகிருஷ்ணன் வெகுதூரம் சென்றால் மற்ற சிறுவர்கள் 'நான் முன்னே, நான் முன்னே' என்று ஸ்ரீகிருஷ்ணனைத் தொட்டு விளையாடினார்கள்.

47.   இவ்வாறாக, ஞானிகளுக்கு பிரம்மானந்த அனுபவமாகவும், அடிமை பூண்டவர்களுக்கு பரதெய்வமாகவும், மாயையில் மயங்கியவர்களுக்கு மானிடக் குழந்தையாகவும் இருந்த ஸ்ரீகிருஷ்ணனுடன், முன் செய்த புண்ணியத்தின் பயனாய் விளையாடினார்கள்.

48.   பல பிறவிகளில் கடுந்தவத்தால் மனதை அடக்கிப் பழகிய யோகிகளாலும் எவனுடைய பாத தூளி அடைய முடியாதோ, அவனே எந்த கோபர்களுடன் கூடி விளையாடி, அவர்களுக்குத் தாமே காட்சியளித்தானோ, அவர்களுடைய பாக்கியத்தை வர்ணிப்பது எங்ஙனம்?

49.   கம்சனால் ஏவப்பட்ட அகாசுரன்  என்ற துஷ்டன், மலை போல் பருத்து, குகை போல் அகன்ற வாயுள்ள ஆச்சரியமான மலைப்பாம்பின் உருவத்தை எடுத்துக்கொண்டு, இச்சிறுவர்களை விழுங்கும் பொருட்டு வழியில் படுத்திருந்தான்.

50.   அதைப் பார்த்த சிறுவர்கள் அது பிருந்தாவனத்திலிருந்த அழகிய ஓர் இடம் என்று நினைத்து, அதனுள் சென்றனர். ஸ்ரீகிருஷ்ணனும் அதன் வாய்க்குள் சென்றான்.

51.   குழந்தைகளையும் கன்றுகளையும் ஒருங்கே மென்று விழுங்கிவிட எண்ணிய அகாசுரனுடைய தொண்டையை அடைந்த ஸ்ரீகிருஷ்ணன், தன் உருவைப் பெருக்கத் தொடங்கினான்.

52.   பெரிய உடல் படைத்த அந்த அசுரனுடைய பிராண வாயுவின் மார்க்கங்கள் தடைபட்டு விழி பிதுங்கி உள்ளே நிரம்பி இங்குமங்கும் முட்டிய பிராணன், அவனுடைய தலையைப் பிளந்துகொண்டு வெளிக்கிளம்பிற்று.

53.   பகவான் முகுந்தன் தன் சிநேகிதர்களுடனும்  கன்றுகளுடனும் இறந்துபோன அந்த அசுரன் வாயிலிருந்து வெளிவந்தான்.

54.   பின் அவர்கள் அனைவரும் யமுனை ஆற்றங்கரை மணலுக்கு வந்து அமர்ந்துகொண்டு போஜனம் செய்ய ஆரம்பித்தனர்.

55.   இடைச்சிறுவர்கள் மெய்ம்மறந்து பகவானுடன் போஜனம் செய்துகொண்டிருக்கையில், கன்றுகள் புல்லுக்கு ஆசைப்பட்டுக் காட்டினுள்ளே வெகுதூரம் சென்றுவிட்டன.

56.   பயத்தால் பீடிக்கப்பட்ட அவர்களைப் பார்த்து, இவ்வுலகத்தின் பயத்திற்கே பயமான ஸ்ரீகிருஷ்ணன், 'கன்றுகளை நான் இங்கு கொண்டுவருகிறேன்; நீங்கள் தொடர்ந்து சாப்பிடுங்கள்' என்று கூறிவிட்டு, கன்றுகளைத் தேடிச் சென்றான்.

57.   கன்றுகளைக் காணாமல், பின்னர், மணலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவர்களையும் காணாமல், ஸ்ரீகிருஷ்ணன் வனம் முழுவதும் கன்றுகளையும் சிறுவர்களையும் மீண்டும் தேடலானான்.

58.   கன்றுகளையோ சிறுவர்களையோ வனத்தினுள் எங்கும் காணாமற்போகவே, எல்லாவற்றையும் உணர்ந்த ஸ்ரீகிருஷ்ணன், அது அனைத்தும் பிரம்ம தேவனின் செயல் என்று விரைவில் கண்டுகொண்டான்.

59.   உலகை ஆக்குபவனாயும் ஆள்பவனாயும் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணன் தாய்மார்களுக்கும் தாய் பசுக்களுக்கும் மகிழ்ச்சியளிக்கவும் பிரம்ம தேவனுக்குப் பாடம் புகட்டவும் கருதி, தன்னைக் கன்றுகளாகவும் சிறுவர்களாகவும் இரு கூறுகளாக்கிக் கொண்டான்.

60.   கன்று மேய்க்கும் சிறுவர்களுக்கும் கன்றுகளுக்கும் எவ்வளவு சிறிய உடல்கள் இருந்தனவோ, எந்த அளவில் கை கால் முதலியவைகளும், எந்த மாதிரி கோல், கொம்பூதி, குழல், இலை முதலியவைகளும் ஆபரணங்களும் ஆடைகளும் இருந்தனவோ, எந்த மாதிரி நடத்தை, குணம், பெயர், உருவம், வயது முதலியன இருந்தனவோ, அந்தந்த மாதிரியாக பிறப்பில்லாத பகவான் எல்லா வடிவங்களும் கொண்டவனாக ஆனான்.

61.   தானேயாகிய கன்றுகளைத் தானேயாகிய கோபாலர்களால் அடக்கி நடத்தும்படி செய்து, தானும் அவர்களோடு விளையாடிக்கொண்டு அனைத்தின் ஆத்மாவுமாகிய அவன் கோகுலத்திற்கு வந்தான்.

62.   அவரவர் கன்றுகளைத் தனித்தனியே பிரித்து அந்தந்தத் தொழுவத்தில் சேர்ப்பித்து அவரவர் வீட்டில் சிறுவர்களுமாகிப் புகுந்து அந்தந்த வடிவில் விளங்கினான்.

63.   பசுக்களுக்குக் கன்றுகளிடத்திலும், கோபிகளுக்குக் குழந்தைகளிடத்திலும் இயற்கையான தாய் உணர்வு வளர்ச்சி அடைந்ததுதான் வித்தியாசமே அன்றி, மற்ற வகையில் எல்லாம் முன்போலவே இருந்தது.

64.   ஸ்ரீகிருஷ்ணனே கன்றுகளாகவும் குழந்தைகளாகவும் நடந்துகொண்டதிலும், மாயைக்குத் தான் கட்டுப்படாமல் இருந்தது மட்டும் வித்தியாசமே அன்றி, மற்ற வகையில் எல்லாம் முன்போலவே இருந்தது.

65.   தங்கள் குழந்தைகளைவிட ஸ்ரீகிருஷ்ணனிடத்தில் முன்பு எப்படி அதிகமான அன்பு இருந்ததோ, அப்படி ஒரு வருஷம் வரை தங்கள் குழந்தைகளிடம் இப்போது அளவு கடந்த அன்பு ஒரு கொடி போல் சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்தது.

66.   இவ்விதம் பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணன் தானே கன்றுகளாகவும் சிறுவர்களாகவும் இருந்து, அவர்களைத் தானே காத்து ஒரு வருஷம் இடைச்சேரியிலும் வனங்களிலும் விளையாடினான்.

67.   ஒரு வருஷம் முடிய சில நாட்கள் இருந்தபோது, ஸ்ரீகிருஷ்ணன் ஒரு நாள் காலையில் கன்றுகளை மேய்த்துக்கொண்டு பலராமனுடன் வனம் சென்றான்.

68.   அப்போது வெகு தூரத்தில் கோவர்த்தன கிரியின் உச்சியில் மேய்ந்துகொண்டிருந்த பசுக்கள் கோகுலத்தினருகில் புல் மேய்ந்துகொண்டிருந்த கன்றுகளைக் கண்ணுற்றன.

69.   அப்படிப் பார்த்த பசுக்கூட்டம் கன்றுகளிடம் ஏற்பட்ட அன்பின் பெருக்கால் மெய்ம்மறந்து, மேய்ப்பவர்களையும் வேலி முதலிய தடைகளையும் தாண்டிக்கொண்டு, கழுத்தைச் சுருக்கிக்கொண்டும் வால்களைத் தூக்கிக்கொண்டும், ஹுங்காரத்தால் பாலைப் பெருக்கிக்கொண்டும் இரண்டு கால் பாய்ச்சலில் கோகுலத்தை நோக்கி வேகமாக ஓடலாயிற்று.

70.   பசுக்களை மேய்த்த இடையர்கள் அவர்களைத் தடுப்பதற்குச் செய்த முயற்சி வீணானதால், வெட்கமும் கோபமும் மேலிட்டு, தாங்களும் கடினமான வழியில் சென்று களைப்படைந்து, கன்றுகளுடன் கூடிய பசுக்களையும் தங்கள் பிள்ளைகளையும் கண்டார்கள்.

71.   பிள்ளைகளைக் கண்டதும் கோபம் நீங்கி மனத்தில் பெருக்கெடுத்த அன்பு வெள்ளத்தில் மூழ்கியவர்களாய், பிள்ளைகளைத் தூக்கி, இறுகத் தழுவி, உச்சி மோந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

72.   இங்ஙனம் இடையர்கள் மக்களைத் தழுவியதால் மட்டிலா மகிழ்ச்சி அடைந்து, அவர்களை விட்டுப் பிரியமாட்டாதவர்களாய் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து நின்றனர்; பசுக்களும் தம் கன்றுகளுடன் அவ்விதமே இருந்தன.

73.   ஊட்டு மறந்த கன்றுகளிடம் தாய்ப்பசுக்களுக்கும் பால் மறந்த பிள்ளைகளிடம் பெற்றோர்களுக்கும் விவரிக்க முடியாத வகையில் அன்பு பெருகிய அதிசயத்தைக் கண்ணுற்று பலராமன், இதற்குக் காரணம் தெரியாமல் யோசிக்கலானான்:

74.   'அனைவருக்கும் ஆன்மாவாகிய ஸ்ரீகிருஷ்ணனிடத்தில் ஏற்படும் அன்பினைப் போல் இடைச்சேரி முழுவதுக்கும் - எனக்கும் கூட - சிறுவர்களிடமும் கன்றுகளிடமும் இதுவரை இல்லாத அன்பு பெருகுகிறதே, இது என்ன ஆச்சரியம்!'

75.   பலராமன் இவ்விதம் ஆலோசித்து ஞானக்கண்ணால் எல்லாக் கன்றுகளையும் சிநேகிதர்களையும் ஸ்ரீகிருஷ்ணனாகவே கண்டான்.

76.   'ஈசனே! வேற்றுமைக்கு இருப்பிடமான இவர்களிடம் நீ ஒருவனே பிரகாசிக்கின்றாய். நீ இவ்வாறாகப் பிரிந்தது எங்ஙனம்? எல்லாவற்றையும் கூற வேண்டும்' என்று கேட்க, ஸ்ரீகிருஷ்ணனால் அது இவ்வாறென்று விளக்கப்பட்ட விருத்தாந்தத்தை பலராமன் அறிந்தான்.

77.   ஒரு வருஷமானதும், பிரம்ம தேவன் தன் கணக்குப்படி ஒரு கணப்போது கழிந்து, திரும்பி வந்து, முன்போலவே தன் சூழலுடன் ஒரு வருஷமாய் விளையாடுகிற ஸ்ரீஹரியைப் பார்த்தான்.

78.   பிரம்ம தேவன் யோசித்தான்: 'கோகுலத்தில் கன்றுகளுடன் சிறுவர்கள் எவ்வளவு பேர் உள்ளனரோ, அவ்வளவு பேரும் என் மாயையாகிற சயனத்தில் உறங்குகிறார்கள்; இது நிச்சயம். இப்பொழுது கூட மீண்டும் எழுந்திருக்கவில்லை. எனது மாயையால் மயங்கியவர்களைத் தவிர ஸ்ரீகிருஷ்ணனுடன் ஒரு வருஷமாக அங்கே விளையாடுகிறவர்களும் அவ்வளவு பேர் உள்ளனர். அங்ஙனம் உள்ள இவர்கள் எங்கிருந்து வந்தனர்?'

79.   பிரம்ம தேவன் இவ்வாறு நெடுநேரம் ஆலோசித்தும் இவ்விரு பிரிவினர்களில் உண்மையானவர்கள் எவர்கள் என்றும், அல்லாதவர்கள் எவர்கள் என்றும் அறிய முயன்றும் முடியவில்லை.

80.   அப்போது, பிரம்ம தேவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அதே நொடியில், எல்லாக் கன்றுகளும் சிறுவர்களும் நீருண்ட மேகம் போல் கருத்தவர்களாகவும், மஞ்சட் பட்டாடை அணிந்தவர்களாகவும், நான்கு புஜங்களை உடையவர்களாகவும், சங்கு சக்கரம் கதை பத்மம் இவற்றைக் கையில் ஏந்தியவர்களாகவும் காணப்பட்டனர்.

81.   எவனுடைய ஒளியினால் இந்த சராசரப் பிரபஞ்சம் முழுவதும் பிரகாசிக்கின்றதோ, அந்த பரபிரம்ம ஸ்வரூபமாகவே அந்த எல்லோரையும் பிரம்ம தேவன் கண்டான்.

82.   மறு நொடியில் இக்காட்சி மறைந்து, அவ்விடத்தில் ஆயர்குலத்துக் குழந்தையாக நடிப்பவனும், இரண்டற்ற பரபிரம்மமும், அளவற்றவனும் ஆழங்காண முடியாத அறிவுடையவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை முன் போலவே கன்றுகளையும் சிநேகிதர்களையும் நாற்புரமும் தேடிக்கொண்டு திரிபவனாக பிரம்ம தேவன் கண்டான்.

83.   அப்படிப் பார்த்தவுடன் விரைவாகத் தன் அன்ன வாகனத்திலிருந்து இறங்கி தங்கத்தடிபோல் தனது உடலைப் பூமியில் கிடத்தி, நான்கு கிரீடங்களின் நுனிகளால் ஸ்ரீகிருஷ்ணனுடைய இரு பாதங்களையும் தொட்டு வணங்கி, ஆனந்தக் கண்ணீரால் அபிஷேகம் செய்தான்.

84.   பிறகு, மெதுவாக எழுந்திருந்து, கண்களைத் துடைத்துக்கொண்டு ஸ்ரீகிருஷ்ணனைப் பார்த்து தலைகுனிந்தவனாய், வணக்கத்துடன் நடுங்கிய கைகளைக் கூப்பிக்கொண்டு தழுதழுத்த சொற்களால் துதிக்கலானான்:

85.   “ஈசனே! என் பிழையைப் பார். அனைத்திற்கும் முதல்வனும் முடிவற்றவனும் மாயாவியும் பரமாத்மாவுமான உன்னிடம் கூட மாயையைச் செலுத்தி என்னுடைய திறமையைப் பார்க்க விரும்பினேன் அல்லவா? அக்கினி போன்ற உன்னிடமிருந்து தோன்றிய சுடர் போன்ற நான் உன் முன் எம்மாத்திரம்?

86.   இப்போதே உன்னையல்லாத இவ்வுலகம் பொய் என்பது உன்னால் எனக்குக் காட்டப்படவில்லையா? முதலில் நீ ஒருவனாய் இருந்தாய். பின்பு ஆயர்பாடி நண்பர்களாகவும் கன்றுகளாகவும் குழல் கொம்பு முதலிய எல்லாமாகவும் ஆனாய். அதன் பின் நான்கு கைகளுடன் கூடிய உருவத்துடன் அவ்வளவாகவும் தோன்றினாய். முடிவில், அளவுபடாததும் இரண்டற்றதுமான பிரம்மஸ்வரூபமே எஞ்சி நிற்கிறது.

87.   இவ்வாறாக சகல ஜீவராசிகளுக்கும் தத்தம் ஆன்மாவாக இருக்கிற உன்னை எவர்கள் சூரியனைப்போல பிரகாசிக்கும் குருவின் கிருபையால், உபநிஷதங்களாகிற சிறந்த கண்களைக் கொண்டு தமக்குத் தாமாகவே பார்க்கிறார்களோ, அவர்கள்தான் ஸம்ஸாரமாகிற மாயைக் கடலைத் தாண்டுவார்கள் போலும்.

88.   பகவானே! தேவதேவனே! உன்னுடைய திருவடித் தாமரைகளை சேவித்து ஒரு துளியாவது பிரஸாதம் அநுகிரகிக்கப் பெற்றவன் எவனோ, அவனே பகவானாகிய உமது மகிமையின் உண்மையை அறிவான்; மற்றவன் தனித்திருந்து எவ்வளவு காலம் தேடினாலும் அறியமாட்டான்.

89.   பரமானந்தஸ்வரூபனும் பரிபூரணனும் முன்னைப் பழம்பொருளும் பரபிரம்மமும் ஆன உன்னைத் தோழனாகப் பெற்ற நந்தகோகுலவாசிகளின் பாக்யமே பாக்யம்.

90.   இன்றும் எந்த பகவானுடைய பாத தூளியானது வேதங்களால் தேடப்படுகிறதோ அந்த பகவானாகிய முகுந்தன் கோகுலவாசிகளுடைய வாழ்வு முழுவதும் வியாபித்திருக்கிறான். ஆகையால், இவ்வுலகில் இந்த பிருந்தாவனத்தில் கோகுலத்தில் உள்ள எவருடைய பாத தூளியாலாவது அபிஷேகம் செய்யப்பெற்று ஏதாவதொரு பிறவி ஏற்படினும் அதுவே சிறந்த பாக்யமாகும்.”

91.   இவ்வாறு உலகைப் படைக்கும் பிரம்ம தேவன் எங்கும் நிறைந்தவனான ஸ்ரீகிருஷ்ணனை நன்கு துதித்து, மும்முறை வலம் வந்து, பாதங்களில் நமஸ்கரித்து தனது இருப்பிடம் சென்றான்.

92.   ஸ்ரீகிருஷ்ணனும் பிரம்ம தேவனால் ஒப்படைக்கப்பட்ட முன்பிருந்த கன்றுகளுடனும் சிறுவர்களுடனும் கோகுலம் திரும்பினான்.

93.   தங்களுடைய தோழனான ஸ்ரீகிருஷ்ணனை விட்டுப் பிரிந்து ஒரு வருஷம் ஆகியிருந்த போதிலும் சிறுவர்கள் ஸ்ரீகிருஷ்ணனுடைய மாயையில் மயங்கி அதை அரைக்கணமாய் எண்ணினார்கள்.

94.   எந்த மாயையில் மயங்கி அடிக்கடி இவ்வுலகம் முழுவதும் ஆன்மாவையே மறந்துவிடுகிறதோ, அந்த மாயையால் மயங்கிய மதியுடையவர்கள் இவ்வுலகில் எதைத்தான் மறப்பதில்லை?

95.   கோகுலம் சென்றதும் சிறுவர்கள், 'கிருஷ்ணனால் இன்று ஒரு பெரிய பாம்பு கொல்லப்பட்டது. அதனிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்பட்டோம்' என்று சொன்னார்கள்.

96.   வ்வாறாக பகவான் ஸ்ரீஹரியின் லீலைகளைக் கூறி முடித்த சுகதேவர் இறுதியாக, பரீக்ஷித்துக்கு பிரம்ம உபதேசம் செய்தார்.

97.   “அரசே! 'நான் மரணமடையப் போகிறேன்' என்ற இந்த பசு புத்தியை விட்டு ஒழியும். நீர் ஆன்மா; நீர் ஒருபோதும் அழிவதில்லை.

98.   பிரபுவே! அனுமானத்தைத் தன்னுள் கொண்ட புத்தியாலும் வாசுதேவனுடைய விசேஷ சிந்தனையாலும் உம்மிடமேயுள்ள ஆன்மாவை நீரே ஆராய்ந்து கண்டுகொள்வீராக.

99.   ரிஷிகுமாரனுடைய சாபத்தினால் ஏவப்பட்ட தக்ஷகன் உம்மைப் பொசுக்கமாட்டான். அழிவுகளுக்கெல்லாம் அழிவு செய்யும் ஈசுவரனாகிய ஆன்மாவை அழிவின் காரணங்கள் அணுகமாட்டா.

100.   'நான் அனைத்திற்கும் உறைவிடமாகிய பிரம்மம்; பரமபதமாகிய பிரம்மம் நானே' என்று இவ்வாறு பிரம்மத்திடம் ஆன்மாவை நீர் ஐக்கியப்படுத்தும்போது, விஷம் நிறைந்த வாய்களில் துளாவும் நாக்குகளுடன் பாதத்தில் கடிக்கும் தக்ஷகனைப் பார்க்கமாட்டீர்; சரீரத்தையும் பார்க்கமாட்டீர்; உலகத்தையும் உமக்கு வேறாகப் பார்க்கமாட்டீர்.”

101.   இவ்வாறாக பிரம்ம உபதேசத்துடன் முடித்து எழுந்த, ஸர்வான்மாவாகிய பகவானைத் தன்னில் காண்பவரும் வியாஸபுத்திரருமான சுகதேவருடைய பாதங்களைத் தன் சிரஸால் வணங்கிக் கைகூப்பிக்கொண்டு பரீக்ஷித்து சொன்னான்:

102.   “கருணையே உருக்கொண்ட உம்மால் ஆதியும் அந்தமும் இல்லாத ஸ்ரீஹரியின் பெருமை எனக்கு உபதேசிக்கப்பட்டது. மரணத்தின் காரணங்களாய் இருக்கும் தக்ஷகன் முதலியவர்களிடமிருந்து நான் பயப்படவில்லை. உம்மால் பயம் நீங்கிய நிலை காட்டப்பட்டது.”

103.   இவ்வாறு கூறி அரசனால் பூஜிக்கப்பெற்ற சுகதேவர் அவனுக்கு விடையளித்துவிட்டு அவ்விடம்விட்டு அகன்றார்.

104.   ராஜரிஷியாகிய பரீக்ஷித்தும் புத்தியால் மனதை ஆன்மாவிடம் சேர்த்து பரமாத்மாவை தியானித்தார்.

105.   ரிஷிகுமாரனுடைய சாபத்தால் தூண்டப்பட்ட தக்ஷகன் வந்து அரசனைக் கடித்தான்.

106.   பிரம்மமான ராஜரிஷியின் தேகம் உடல் தாங்கிய எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே விஷஜ்வாலையால் உடனே சாம்பலாயிற்று.

107.   துணையின்றித் துறவியாய்க் கிளம்பிய எவரை வியாஸர் பிரிவாற்றாமையால், 'மகனே!' என்று கூப்பிட்டபோது, மரங்களும் 'ஏன், ஏன்' என்றனவோ, அனைத்துந் தானே ஆகி நின்ற அந்த சுகதேவரின் திருவடிகளுக்கு அடியேனுடைய நமஸ்காரம் உரித்தாகட்டும்.

108.   திருவரங்க நாச்சியாரின் அழகிய மணவாளன் நம்பெருமாள் திருவடித் திருவருள் கிட்டும் பொருட்டு அடியேனுடைய குருநாதர் திருவடிகளையே தஞ்சமாக சரணமடைகிறேன்.

~ Compiled from “Bhagavatam” by Sri Ramakrishna Mutt, Chennai, by umasreedasan.



No comments:

Post a Comment