Shirdi Sai Baba |
சரணாகதி பிரார்த்தனை பணி -
https://lampofsurrender.blogspot.com/2018/09/surrender-prayer-service-tamil.html***
குரு தீபம்
1. மும்மூர்த்திகளின் திருவடித் திருவருள் கிட்டும் பொருட்டு, அடியேனுடைய குருநாதர் சீரடி ஸாயி நாதர் திருவடிகளையே தஞ்சமாக சரணமடைகிறேன்.
2. குருநாதர் திருவருளுடன் குருநாதர் வைபவஞ் சொன்ன ஹேமத்பந்த்துக்கு அடியேனுடைய நமஸ்காரம் உரித்தாகட்டும்.
3. பாபாவின் நெருங்கிய பக்தரான காகா தீக்ஷித், ஒரு முறை பாபாவைக் காண மும்பையிலிருந்து சீரடி வந்து தங்கியிருந்தார்.
4. சிலகாலம் சீரடியிலேயே தங்கியிருந்த தீக்ஷித், மீண்டும் மும்பை திரும்ப விரும்பி, மசூதியில் பக்தர்களுடன் வீற்றிருந்த பாபாவிடம் சென்று, “நான் சென்று வரலாமா?” என்று வினவினார்.
5. பாபாவும் “சென்று வா” என விடைகொடுத்தருளினார்.
6. அப்போது அங்கிருந்த பக்தர்களில் ஒருவர் “பாபா, எங்கே செல்வது?” என்று ஆன்மீக ஆர்வத்துடன் வினவினார்.
7. பாபா, “உயரே” என்று அவருக்கு மறுமொழி தந்தார்.
8. அவரும் ஆர்த்தியுடன், “எப்படிச் செல்வது, பாபா?” எனக் கேட்டார்.
9. “அங்கு செல்ல நிறைய பாதைகள் உள்ளன; இங்கிருந்தும் ஒரு பாதை செல்கிறது - ஆனால் மிகவும் கடினமானது. வழியிலுள்ள காடுகளில் ஓநாய்களும் புலிகளும் திரியும்” என்றார் பாபா.
10. “ஆனால், பாபா, நம்முடன் ஒரு வழிகாட்டியை அழைத்துச் சென்றால்?” என வினவினார் தீக்ஷித்.
11. “அப்படியானால் ஒரு கஷ்டமும் இல்லை. வழியில் திரியும் ஓநாய்களையும் புலிகளையும் தவிர்த்து, நீங்கள் செல்லவேண்டிய இலக்குக்கு வழிகாட்டி நேரே உங்களை அழைத்துச் சென்றுவிடுவார். ஆனால், வழிகாட்டி இல்லாமல் சென்றால், காடுகளில் நீங்கள் தொலைந்துபோய்விடும் அபாயம் இருக்கிறது,” என்று பாபா அருளிச்செய்தார்.
12. மும்பையைச் சேர்ந்த தற்காடு என்பவரின் மனைவி பாபாவின் தீவிர பக்தை.
13. அவர் ஒரு சமயம் சீரடி வந்து அங்கிருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.
14. ஒரு நாள் மதிய உணவு வேளையில் அவ்வீட்டிலிருந்த எல்லோரும் சாப்பிடத் தயாரானபோது, எங்கிருந்தோ அங்கு வந்த நாய் ஒன்று பசியுடன் குரைக்கத் தொடங்கியது.
15. உடனே, தற்காடின் மனைவி எழுந்து ரொட்டித் துண்டு ஒன்றை அந்த நாய்க்குப் போட்டார். நாயும் அதனை மிகுந்த ஆவலுடன் சுத்தமாகச் சாப்பிட்டுச் சென்றது.
16. அன்று மதியம் பாபாவைக் கண்டு வணங்கும் பொருட்டு அவர் மசூதிக்குச் சென்று ஓரமாக அமர்ந்தார்.
17. உடனே பாபா அவரை நோக்கி, “அம்மா, நீ இட்ட அந்த உணவைத் திருப்தியாக உண்டு மகிழ்ந்தேன். எப்போதும் இப்படியே செய்; அது உன்னை நல்ல நிலையில் வைத்திருக்கும் - இந்த மசூதியில் அமர்ந்துகொண்டு உண்மையல்லாததை ஒருபோதும், ஒருபோதும் பேசமாட்டேன். இதுபோல் என்னிடம் இரக்கங் காட்டு. முதலில் பசித்தவனுக்கு உணவளித்துவிட்டு, பின் நீ சாப்பிடு; இதை நன்றாக கவனத்தில் கொள்” என்றார்.
18. பாபாவின் வார்த்தைகளில் மிகுந்த குழப்பமடைந்த அவர், “பாபா, நான் எப்படி உங்களுக்கு உணவளித்திருக்க முடியும்? என் சாப்பாட்டுக்கே நான் மற்றவர்களை நம்பியல்லவா இருக்கிறேன்?” என்றார்.
19. பாபாவும், “அந்த அருமையான ரொட்டியை உண்டு திருப்தியுற்றேன். உணவு வேளையின்போது எந்த நாய்க்கு ரொட்டித் துண்டை அளித்தாயோ, அந்த நாயும் நானும் ஒன்றே. எவன் சகல ஜீவராசிகளிலும் என்னைக் காண்கிறானோ, அவன் எனக்குப் பிரியமானவன். ஆகவே, இன்று போலவே என்றும் எனக்கு இவ்வாறு பணிவிடை செய்வாயாக” என்று அமுத மொழிகளைப் பகர்ந்தார்.
20. சித்திக் ஃபால்கே என்ற மும்பையைச் சேர்ந்த முஸ்லிம் பெரியவர் ஒருவர், ஒரு சமயம் சீரடி வந்து தங்கியிருந்தார்.
21. அவர் மெக்கா மெதீனா முதலிய புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்றுவந்தவர்.
22. அவர், மசூதியின் முன்புறம் இருந்த திறந்தவெளித் தரையில் அமர்ந்திருப்பார்.
23. ஒன்பது மாதங்கள் பாபா, ஹாஜி ஃபால்கேயை அங்கீகரிக்கவில்லை; அதனால், மசூதியின் உள்ளே அனுமதிக்க மறுத்துவந்தார்.
24. இதனால் மிகவும் வருத்தமடைந்த ஃபால்கே செய்வதறியாது திகைத்திருந்த போது, ஒரு நாள் பாபாவின் பக்தர் ஒருவர், பாபாவை அவருடைய நெருங்கிய பக்தரான ஷாமாவின் மூலம் அணுகும்படி அறிவுறுத்தினார்.
25. அந்த அறிவுரையை ஏற்றுக்கொண்ட ஃபால்கே, தனக்காக பாபாவிடம் பேசும்படி ஷாமாவிடம் கேட்டுக்கொண்டார்; ஷாமாவும் ஒத்துக்கொண்டார்.
26. ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தபோது பாபாவிடம் ஹாஜிக்காகப் பேசினார்: “பாபா, இத்தனை பேர் சுதந்திரமாக வந்து உங்களை தரிசித்துவிட்டுச் செல்கின்றனரே - அந்த வயதான ஹாஜியை மசூதிக்குள் அனுமதிக்கக்கூடாதா? ஒருமுறை அவரை ஆசீர்வதிக்கக்கூடாதா?”
27. “ஷாமா, இதையெல்லாம் புரிந்துகொள்ளும் வயது உனக்கில்லை. அவன் அனுமதிக்க மறுக்கும் போது நான் என்ன செய்யமுடியும்? அவனுடைய அருளின்றி யாரால் இந்த மசூதிக்குள் நுழையமுடியும்?” என்றார் பாபா.
28. பின்பு பரம கருணையுடன், ஃபால்கேயைப் பற்றிச் சிறிது நேரம் விளையாட்டாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, பாபா அவரை நோக்கிச் சென்றார்.
29. “வயதான ஹாஜி என்று உன்னை கர்வத்துடன் ஏன் தம்பட்டம் அடித்துக்கொள்கிறாய்? இப்படித்தான் குரானில் படிக்கிறாயா? மெக்காவிற்குச் சென்றதைப் பெருமையாக நினைத்துக்கொள்கிறாய்; ஆனால், என்னை அறியவில்லை,” என்று பாபா அவரை அன்புடன் கடிந்துகொண்டார்.
30. அதன் பிறகு பாபா, ஃபால்கேயை மசூதிக்குள் வர அனுமதித்ததோடு தன்னுடன் உணவு உண்ணவும் அவ்வப்போது அன்புடன் அழைத்துக்கொள்வார்.
31. ஒரு சமயம் ராதாபாய் என்ற ஒரு வயதான பெண், பாபாவின் புகழைக் கேள்விப்பட்டு, சீரடி வந்திருந்தார்.
32. பாபாவின் தரிசனத்தை முடித்துவிட்டு தன் தங்குமிடத்திற்கு வந்த அந்தப் பெண், பாபாவைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடமிருந்து உபதேசம் பெறுவது என்று முடிவு செய்தார்.
33. பாபா தன்னை அங்கீகரித்து மந்திர உபதேசம் செய்யும் வரையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்.
34. ராதாபாய் உண்ணாவிரதம் தொடங்கி மூன்று நாட்களாகிவிட்டன. அந்த அம்மாவின் உறுதியைக் கண்டு பயந்த ஷாமா, அவர் சார்பாக பாபாவிடம் வேண்டிக்கொண்டார்.
35. “தேவா, என்ன நடத்திக்கொண்டிருக்கிறீர்கள்? அந்த அம்மாவின் பிடிவாதத்தைப் பாருங்கள். நீங்கள் உபதேசம் செய்யாவிட்டால் உயிரையும் விடத் துணிந்துவிட்டார். விரும்பத்தகாத சம்பவம் ஏதேனும் நடந்துவிடும் முன் அந்த அம்மாவின் மீது கருணை காட்டி, அவருக்கு உபதேசம் செய்தருள வேண்டும்.”
36. அந்த அம்மாவை மசூதிக்கு அழைத்து வரச் சொல்லி, பாபா அவரிடம் கனிவுடன் பேசத் தொடங்கினார்:
37. “அம்மா, எதற்காகத் தேவையில்லாமல் உங்களை நீங்களே வருத்திக்கொள்கிறீர்கள்? என் மீது இரக்கங்கொண்டு நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று தொடங்கினார்.
38. “அம்மா, எனக்கு ஒரு குரு இருந்தார். அவர் பரம கருணையுள்ள மிகச் சிறந்த ஞானி. அவருக்கு நான் மிக நீண்ட காலம் பணிவிடை செய்து வந்தேன். இருப்பினும் அவர் என் காதில் எந்த மந்திரத்தையும் ஓதவில்லை.
39. எப்படியாவது அவரிடமிருந்து உபதேசத்தைப் பெற்றுவிட வேண்டும் என விரும்பி, நானும் அவரை விடாமல் கூடவே இருந்து பணிவிடைகள் செய்து வந்தேன். ஆனால், அவருடைய வழிமுறையோ தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது.
40. அவர் முதலில் என் தலையை மழிக்கச் செய்தார். பின், இரண்டு பைசாக்களை தக்ஷிணையாகக் கேட்டார் - ஒன்று, நம்பிக்கை என்ற சிரத்தை; மற்றொன்று, பொறுமை என்ற சபூரி. நான் அவ்விரண்டையும் தர அவரும் மகிழ்ந்தார்.
41. நான் என் குருநாதரிடம் பன்னிரண்டு வருடங்கள் கூட இருந்தேன். அவர் என்னை உணவுக்கோ உடைக்கோ எந்தக் குறையுமில்லாமல் வளர்த்து வந்தார்.
42. அவர் அன்பின் மொத்த உருவாக இருந்தார். என்னை மிகவும் நேசித்தார். அவர் போன்ற குருவைக் காண்பது அரிது.
43. அவரே என்னுடைய ஒரே புகலிடமாக இருந்தார்; அவரிடமே என் மனம் நிலைத்திருந்தது. இது தக்ஷிணையின் ஒரு பகுதி.
44. சபூரி மறு பகுதி. நான் என் குருநாதரிடம் மிக நீண்ட காலம் பொறுமையுடன் பணிவிடைகள் செய்துவந்தேன். இந்தப் பொறுமையே உங்களை ஸம்ஸாரக் கடலிலிருந்து கரையேற்ற வல்லது.
45. சிரத்தையும் சபூரியும் ஒருவரையொருவர் நேசிக்கும் இரட்டைச் சகோதரிகள்.
46. தன்னையே நினைத்துக்கொண்டிருக்கும் தன் குஞ்சுகள் ஆற்றின் இக்கரையில் தன்னருகே இருந்தாலும், தூரத்தில் அக்கரையில் இருந்தாலும், தன் அன்பு கனிந்த பார்வையின் மூலமே தாய் ஆமை போஷாக்கு அளிப்பதைப் போல, என்னுடைய குருநாதர் எப்போதும் என்னைப் பாதுகாத்து வந்தார்.
47. அம்மா, என்னுடைய குருநாதரே எனக்கு எந்த ஒரு மந்திரத்தையும் உபதேசிக்காதபோது, நான் எப்படி உங்களுக்கு உபதேசிப்பேன்?
48. குருநாதரின் தாய் ஆமை போன்ற அன்பு கனிந்த கடைக்கண் நோக்கமே நமக்கு மகிழ்ச்சியைத் தருவது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். யாரிடமிருந்தும் எந்த ஒரு மந்திர உபதேசமும் பெற முயற்சி செய்யாதீர்கள்.
49. முழுமனத்துடன் என்னைப் பாருங்கள்; நானும் அவ்வாறே உங்களை நோக்குவேன்.
50. இந்த மசூதியில் உட்கார்ந்துகொண்டு உண்மையை மட்டுமே பேசுகிறேன்: எந்த ஒரு சாதனையும் தேவையில்லை; அறுவகை சாஸ்திரப் பயிற்சியும் தேவையில்லை. உங்கள் குருவிடம் சிரத்தை வையுங்கள். குருவே எல்லாம் செய்கிறார் என்று முழுமையாக நம்புங்கள். எவன் ஒருவன் தன் குருநாதரை ஹரிஹரபிரஹ்ம ரூபமாக எண்ணி அவருடைய மகத்துவத்தை அறிகிறானோ அவனே ஆசீர்வதிக்கப்பட்டவன்.”
51. பாபாவின் இந்த அருளுரையைக் கேட்ட ராதாபாய் மனம் மாறி, பாபாவை வணங்கித் தன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு ஊர் திரும்பினார்.
52. ஒரு சமயம் ராமதாஸின் பக்தரான ராமதாஸி ஒருவர் சீரடி வந்து சிறிது காலம் தங்கியிருந்தார்.
53. அவர் தினமும் மசூதிக்கு வந்து, பாபாவின் சந்நிதியில் விஷ்ணு ஸகஸ்ரநாமத்தையும் அத்யாத்ம ராமாயணத்தையும் பாராயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
54. ஒரு நாள் ஸகஸ்ரநாம பாராயணம் செய்துகொண்டிருந்த ராமதாஸியை பாபா தன்னருகே அழைத்து, தனக்கு வயிற்று வலியாக இருப்பதால் சென்னாப்பொடி வாங்கி வரும்படிக் கேட்டுக்கொண்டார்.
55. ராமதாஸியும் ஸகஸ்ரநாம புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, சென்னாப்பொடி வாங்கிவர பஜாருக்குச் சென்றார்.
56. பாபா உடனே ராமதாஸி படித்துக்கொண்டிருந்த இடத்திலிருந்த ஸகஸ்ரநாம புத்தகத்தை எடுத்துக்கொண்டு, தான் அமர்ந்திருந்த இடத்துக்கு மீண்டும் வந்து அமர்ந்தார்.
57. பின், தன்னருகே இருந்த தன் நெருங்கிய பக்தரான ஷாமாவுக்கு அந்நூலைக் கொடுத்து பின் வரும் அமுத மொழிகளைப் பகர்ந்தார்:
58. “ஷாமா, இந்நூல் மதிப்புமிக்கது; நன்கு செயல்படக்கூடியது. ஆகவே, நான் இதனை உனக்குத் தருகிறேன். பாராயணம் செய்துவா.
59. ஒரு சமயம் நான் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருந்தேன். அப்போது இந்நூலை என் மார்போடு இறுக அணைத்துக்கொண்டேன் - ஆஹா, என்ன ஒரு நிவாரணம் எனக்கு இது அளித்தது! அல்லாஹ்வே நேரே இறங்கி வந்து என்னைக் காப்பாற்றியதாக உணர்ந்தேன்.
60. ஷாமா, அதனால்தான் இந்நூலை உனக்குத் தருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாகப் படி. தினமும் ஒரு நாமமாவது சொல்; அது உனக்கு நன்மையளிக்கும்.”
61. இரு காரணங்களுக்காக அந்நூலை ஷாமா வாங்கிக்கொள்ளவில்லை. முதலாவது, நூலின் உரிமையாளர் ராமதாஸி பிடிவாதமும் முன்கோபமும் நிறைந்தவராகையால் தன்னுடன் சண்டை போடுவார். இரண்டாவது, தனக்குப் படிப்பறிவில்லாத காரணத்தினால் சமஸ்கிருத எழுத்துக்களை வாசிப்பது மிகவும் சிரமம்.
62. இதற்கிடையே சென்னாப்பொடியை வாங்கிக்கொண்டு ராமதாஸி மசூதிக்கு வந்துவிட்டார். அங்கிருந்த பக்தர் ஒருவர் நடந்ததை அவரிடம் விவரித்தார்.
63. ராமதாஸி மிகுந்த கோபத்துடன் ஷாமாவைத் திட்ட ஆரம்பித்தார். பாபாவின் மூலம் தன்னை வெளியே அனுப்பிவிட்டு, தன்னுடைய நூலை அபகரித்துக்கொண்டதாகக் குற்றம் சாட்டினார்.
64. ஷாமா பொறுமையாக, நடந்த சம்பவத்தில் தன் பங்கு ஏதுமில்லை என ராமதாஸியிடம் விளக்க முயற்சிசெய்தார்; ஆனால், ராமதாஸியோ நம்ப மறுத்தார்.
65. அப்போது பாபா கனிவுடன் ராமதாஸியிடம் சொன்னார்: “வீணாக எதற்கு ஆத்திரப்படுகிறாய்? ராமதாஸின் பக்தனுக்கு ‘என்னுடையது’ என்ற மமதை இருக்கலாமா? ‘எல்லோரும் சமம்’ என்ற சமதை அல்லவா இருக்கவேண்டும்?
66. ஷாமா நம்முடைய பையன் அல்லவா? நான்தான் அவனுக்கு அப்புத்தகத்தை எடுத்துக்கொடுத்தேன். உனக்கும் இது தெரியும். விலை கொடுத்து எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் - மனிதர்களை வாங்கமுடியுமா? அமைதியாக இரு.”
67. பாபாவின் அன்பு கனிந்த அருள்மொழிகளால் அமைதியடைந்த ராமதாஸி, ஷாமாவிடமிருந்து வேறொரு புத்தகத்தை பதிலுக்கு வாங்கிக்கொண்டு சமாதானமடைந்தார்.
68. நாஸிக் மாவட்டத்திலுள்ள வாணி என்ற சிற்றூரில் காகாஜி வைத்யா என்பவர், அங்கிருந்த சப்தசிருங்கி என்ற உமாதேவி ஆலயத்தில் அர்ச்சகராகப் பணியாற்றிவந்தார்.
69. ஒரு சமயம் அவருக்கு வாழ்க்கையில் நேர்ந்த துயர சம்பவங்கள் காரணமாக மன அமைதி இழந்து காணப்பட்டார்.
70. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள் மன உளைச்சல் தாங்க இயலாது, கோயில் நடைசார்த்தும் நேரத்தில் தேவியிடம் தன்னுடைய மனக்கவலையை நீக்கித்தரும்படி பிரார்த்தனை செய்துகொண்டார்.
71. அன்றைய இரவு தேவி அவருடைய கனவில் வந்து, “பாபாவிடம் செல்; உன் மனம் அமைதி அடையும்” என்று அருளி மறைந்தாள்.
72. தேவி சொன்ன பாபா, திரயம்பகேசுவரராகத்தான் இருக்கவேண்டும் எனத் தீர்மானித்த வைத்யா, நாஸிக் அருகே இருந்த திரயம்பக் சென்று பத்து நாட்கள் தங்கியிருந்தார்.
73. அக்காலத்தில் ஸ்ரீருத்ரம் ஜபித்தல், சிவலிங்க அபிஷேகம் முதலான வழிபாட்டு முறைகளைக் கவனத்துடன் செய்துவந்தார். இருப்பினும், அவருடைய மனம் முன்போலவே அமைதியற்றே இருந்தது.
74. இதனால், வாணிக்குத் திரும்பிய வைத்யா மீண்டும் தேவியிடம் முன்போலவே பிரார்த்தனை செய்துகொண்டார். அன்று இரவும் கனவில் தோன்றிய தேவி, “வீணாக ஏன் திரயம்பகேசுவரரிடம் சென்றாய்? நான் சீரடி ஸாயி பாபாவைச் சொன்னேன்” என்று கூறி மறைந்தாள். இதனால் சீரடிக்குச் செல்ல மிகவும் ஆர்வத்துடன் வைத்யா இருந்தார்.
75. இதனிடையே, தன் தாயின் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு பாபாவால் அனுப்பப்பட்டு, ஷாமா வாணிக்கு வந்தார். கோயில் குருக்களைத் தேடி ஷாமா வைத்யாவின் வீட்டுக்கு வந்தார்.
76. சீரடியிலிருந்து வந்திருந்ததைக் கேட்டதும் வைத்யா ஷாமாவைத் தழுவிக்கொண்டார். பிறகு அவர்கள் பாபாவின் லீலைகளைப் பற்றிப் பேசி மகிழ்ந்தனர்.
77. மறுநாள் ஷாமாவின் நேர்த்திக்கடனை முடித்துக்கொண்டு இருவரும் சீரடி சென்றனர். ஷாமாவுடன் மசூதிக்குச் சென்ற வைத்யா பாபாவின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்.
78. உடனே அவர் மனம் அமைதி அடைந்தது. வைத்யா ஆனந்தமாக சீரடியிலேயே பன்னிரண்டு நாட்கள் தங்கியிருந்துவிட்டு பாபாவிடம் விடைபெற்று விபூதிப் பிரசாதம் பெற்றுக்கொண்டு வாணி திரும்பினார்.
79. பாபாவின் நெருங்கிய பக்தர்களில் ஒருவரான பிள்ளை என்பவர் ஒரு சமயம் கினியாப் புழுக்களால் கால் வீங்கி மிகுந்த துன்பத்துக்கு உள்ளானார்.
80. அவர் அருகிலிருந்த காகா தீக்ஷித்திடம், “இந்த வலி மிகவும் கொடுமையாகவும் தாங்கமுடியாததாகவும் இருக்கிறது. இதற்கு இறந்தே போய்விடலாம்போல் தோன்றுகிறது. என்னுடைய பூர்வ கர்ம வினைப் பயனாகவே இந்த வலி வந்திருக்கிறது என்று எனக்குப் புரிகிறது; இருப்பினும், பாபாவிடம் சென்று தற்சமயம் இவ்வலியை நிறுத்தி, இனி நான் எடுக்கப்போகும் பத்து ஜென்மங்களில் இவ்வினையைப் பிரித்து அனுபவிக்கும்படிக்குச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளவேண்டும்” என வேண்டினார்.
81. தீக்ஷித்தும் மசூதிக்குச் சென்று பாபாவிடம் பிள்ளையின் வேண்டுகோளைச் சொன்னார். அது கேட்ட பாபா, “பயப்படாமல் இருக்கச்சொல். எதற்காக பத்து ஜென்மங்கள் சிரமப்பட வேண்டும்? பத்தே நாட்களில் அந்த வினையை அனுபவித்துத் தீர்த்துவிடலாம். உலகியல் பயனையும் ஆன்மீகப் பயனையும் தர நான் இங்கு இருக்கும்போது எதற்காக மரணத்தைப் பிரார்த்திக்க வேண்டும்? பிள்ளையை இங்கே அழைத்து வாருங்கள்” என்று அருளிச் செய்தார்.
82. பிள்ளை மசூதிக்கு அழைத்துவரப்பட்டு, பாபாவின் அருகே கிடத்தப்பட்டார்.
83. பாபா அவரிடம், “பூர்வ வினைகளை அனுபவித்துத் தீர்ப்பதே சரியான தீர்வு. நம்முடைய சுகத்துக்கும் துக்கத்துக்கும் நம் பழவினைகளே காரணம்; ஆகவே வருவதை எல்லாம் தாங்கிக்கொள்.
84. அல்லாஹ்வே நம்முடைய ரக்ஷகன்; எப்போதும் அவனையே நினை. அவன் உன்னைப் பார்த்துக்கொள்வான். வாக்கு மனம் உடல் பொருள் அனைத்துடனும் அவனுடைய திருவடிகளில் சரணமடைந்து விடு - அதன் பிறகு பார், அவன் என்ன செய்கிறான் என்று!” என அருள்மொழி வழங்கிவிட்டுத் தொடர்ந்தார்.
85. “இப்போது ஒரு காகம் வந்து உன்னைக் கொத்தும்; பின், நீ நலமடைவாய்.”
86. அதே நேரத்தில் மசூதியைச் சுத்தம் செய்யும் திருப்பணி செய்யும் அப்துல் என்ற பக்தர் அங்கு வந்தார். தவறுதலாக அப்துலின் பாதம் பிள்ளையின் காலில் பட்டு அழுத்தியது.
87. வீங்கியிருந்த பிள்ளையின் காலில் அப்துலின் பாதம் பட்டு அழுத்தியதும், உள்ளே இருந்த ஏழு புழுக்களும் ஒரே சமயத்தில் வெளியேற்றப்பட்டன.
88. வலி தாங்க முடியாமல் பிள்ளை அலறித் துடித்தார். சிறிது நேரத்தில் அமைதியடைந்து பாபாவை வினவினார்: “பாபா, எப்போது காகம் வந்து என்னைக் கொத்தப்போகிறது?”
89. பாபாவும், “காகத்தை நீ பார்க்கவில்லையா? அப்துல் காகம் மீண்டும் வராது. மடத்துக்குச் சென்று ஓய்வெடுத்துக்கொள். சீக்கிரம் குணமாகிவிடுவாய்” என்றார்.
90. பாபவின் பிரசாதமான விபூதியைத் தவிர்த்து வேறு எந்த மருந்தும் தரப்படவில்லை. சிறிது விபூதி பிள்ளையின் காலில் தடவப்பட்டது; சிறிது விபூதி நீரில் கரைக்கப்பட்டு பிள்ளை குடிக்கத் தரப்பட்டது.
91. பாபா கணித்துச் சொன்னபடி, பத்தே நாட்களில் பிள்ளைக்கு பூரண குணமாகிவிட்டது.
92. ஷாமாவின் சகோதரர் பாப்பாஜியின் மனைவி ஒரு சமயம் பிளேக் நோயினால் அவதிப்பட்டார்; காய்ச்சல் வாட்டியது.
93. பாப்பாஜி சீரடி வந்து தன் சகோதரர் ஷாமாவைக் கண்டு, தன்னுடன் வந்து உதவும்படிக் கேட்டுக்கொண்டார்.
94. ஷாமாவோ நேரே மசூதிக்குச் சென்று பாபாவை வணங்கி, பாப்பாஜியின் மனைவிக்கு வந்த நோயைக் குணப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
95. அத்துடன் பாப்பாஜியுடன் அவருடைய வீட்டுக்குச் செல்ல அனுமதியும் கோரினார்.
96. பாபா, “இந்த இரவு நேரத்தில் அங்கு செல்ல வேண்டாம். இந்த விபூதியைக் கொடுத்தனுப்பு.
97. எதற்காக பிளேக் நோயைக் கண்டு அஞ்சுகிறாய்? இறைவனே நம்முடைய தந்தை; அவனே நம்முடைய தலைவன்.
98. மிகச் சுலபமாக அவள் குணப்படுத்தப்படுவாள். நாளைக் காலை அங்கு சென்று விட்டு உடனடியாகத் திரும்பிவா” என்று ஷாமாவிடம் சொன்னார்.
99. பாப்பாஜியிடம் விபூதி கொடுத்தனுப்பப்பட்டது. விபூதியின் ஒரு பகுதி பிளேக் கட்டியின் மீது தடவப்பட்டது; மறு பகுதி நீரில் கரைத்து அருந்தத் தரப்பட்டது.
100. உடனே, பாப்பாஜியின் மனைவிக்கு நன்றாக வேர்த்து, காய்ச்சல் குறைந்தது. அன்று இரவு நன்றாகத் தூங்க முடிந்தது.
101. மறுநாள் காலையில் ஷாமா தன் சகோதரர் வீட்டுக்குச் சென்றபோது, பாப்பாஜியின் மனைவி பூரண குணம் அடைந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.
102. பாப்பாஜியின் மனைவி தயாரித்துக் கொடுத்த தேநீரை அருந்திவிட்டு சீரடி திரும்பிய ஷாமா, நேரே மசூதிக்கு வந்தார்.
103. பாபாவை வணங்கிவிட்டு ஷாமா கேட்டார்: “தேவா, இது என்ன விளையாட்டு? முதலில் புயலை உருவாக்கி எங்களைத் தவிக்கவிடுகிறீர்கள்; பின்னர், அதனை அடக்கி எங்களை அமைதிப்படுத்துகிறீர்கள்.”
104. தனக்குப் பிரியமான தன்னுடைய பக்தருக்கு பாபா மறுமொழி அருளினார்: “கர்மத்தின் போக்கு புரிந்துகொள்ள இயலாதது. நான் எதுவும் செய்யாதபோதும், விதியின் காரணமாக வரும் கர்மங்களுக்கு என்னைக் காரண கர்த்தா ஆக்குகின்றனர்.
105. நான் வெறுமனே சாட்சி மாத்திரமே. ஈசுவரனே தூண்டுபவனும் செய்பவனும். அவன் பரம கருணையுள்ளவன். நான் இறைவனுமில்லை; ஈசுவரனுமில்லை - அவனை அடிக்கடி நினைக்கும், அவனிட்ட பணிகளைச் செய்யும் வேலைக்காரன்.
106. எவன் தன்னுடைய கர்வத்தை ஒதுக்கிவிட்டு, நன்றியுணர்வுடன் அவனை முழுமையாக நம்புகிறானோ, அவன் தன்னுடைய கர்மபந்தங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடைகிறான்.”
107. குருநாதர் திருவருளுடன் குருநாதர் வைபவஞ் சொன்ன ஹேமத்பந்த் திருவடிகளுக்கு அடியேனுடைய நமஸ்காரம் உரித்தாகட்டும்.
~ Excerpts from the book "Sai Satcharitra" by Sri Hemadpant. Compiled & translated by umasreedasan.
No comments:
Post a Comment